மற்றொரு இனவெறி துஷ்பிரயோகம்

ஒரு வாரத்திற்கு முன்பு, அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பெண்களிடம் எஸ்மெரால்டா என்ற ஒரு மெக்சிக அமெரிக்க பெண், இந்தியாவில் நன்றாக வாழ முடியும் என்ற போது இங்கே ஏன் வருகிறீர்கள். நான் இந்தியர்களை வெறுக்கிறேன் என்று கூச்சலிட்டார். அத்துடன் ஒரு இந்திய பெண்ணை தாக்கியும் துப்பாக்கியால் சுட்டுவிடுவேன் என்று  மிரட்டவும் செய்தார். இதுகுறித்த புகாரையடுத்து எஸ்மெரால்டா கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதே அமெரிக்காவில் இதே போன்ற மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில், கலிபோர்னியாவின் ஃப்ரீமாண்டில் உள்ள கிரிம்மர் பவுல்வர்டில் உள்ள டகோ பெல் உணவகத்தில் தேஜிந்தர் சிங் என்ற அமெரிக்க சீக்கியர், இந்திய அமெரிக்கரான கிருஷ்ணன் ஜெயராமன் ஐயர் என்பவரை இனரீதியாக வார்த்தைகளால் துஷ்பிரயோகம் செய்தார். அவரை, ‘நீங்கள் கேவலமானவர், கேவலமாகத் தெரிகிறீர்கள். அழுக்கு ஹிந்து, இது இந்தியா இல்லை, இனி இதுபோன்று பொது வெளியில் வர வேண்டாம்” என்று திட்டினார். இதுகுறித்து காவல்துறையில் கிருஷ்ணன் புகார் அளித்ததைத் தொடர்ந்து தேஜிந்தர் அங்கிருந்து அவசரமாக வெளியேறினார். காவல்துறை இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. “பாலினம், இனம், தேசியம், மதம் மற்றும் பிற வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் அனைத்து சமூக உறுப்பினர்களையும் பாதுகாக்கப்படுவார்கள். சமூகத்தில் ஒருவரையொருவர் மதித்து நடக்க வேண்டும். இதுபோன்ற சூழ்நிலைகள் இருந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறும் வலியுறுத்துகிறோம்.இந்த சம்பவம் குறித்த தகவல்களை விரைவில் வெளியிடுவோம்” என விசாரனை அதிகாரி தெரிவித்தார்.