விசாரணை நேர்மையாக நடக்குமா? : தற்போதைய தி.மு.க அமைச்சர் செந்தில்பாலாஜி, கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தபோது ஓட்டுநர் மற்றும் நடத்துநர் வேலை வாங்கித் தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட வழக்கில், இந்த புகார் தொடர்பாக தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். தேவையெனில், சிறப்பு விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கலாம். செந்தில்பாலாஜிக்கு எதிரான இந்த வழக்கில் இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி மீது, தமிழகக் காவல்துறை விசாரணை நடத்துவது என்பது எந்த அளவுக்கு நேர்மையாக நடைபெறும் என்பது கேள்விக்குறி. உடனடியாக, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
சமூக விரோதிகளுக்கான ஆட்சியா? : தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர் இந்திரா என்பவரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் தனபால் என்பவர், தகாத வார்த்தைகளால் பேசி, கை காலை வெட்டுவேன் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். அனுமதி இல்லாமல் அமைத்த கொடிக் கம்பத்தை அகற்ற வேண்டும் என உத்தரவிட்ட பெண் வட்டாட்சியரை, காவல்துறை முன்னிலையில் பகிரங்கமாக மிரட்டல் விடுக்கும் தைரியம் எங்கிருந்து வந்தது திறனற்ற தி.மு.க ஆட்சியில், அரசு அதிகாரிகள் கொலை செய்யப்படுவதும், மிரட்டப்படுவதும் தொடர்கிறது. நடப்பது மக்களுக்கான ஆட்சியா அல்லது சமூக விரோதிகளுக்கான ஆட்சியா? உடனடியாக, பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த நபர்களைக் கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசு அதிகாரிகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தி.மு.க அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அமைச்சரை பதவி நீக்கம் செய்யுங்கள் : அமைச்சர் செஞ்சி மஸ்தானை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “மரக்காணம் அருகே கள்ளச் சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புக்கு மரூர் ராஜா என்பவர் தான் காரணம் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. தி.மு.க. அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் மரூர் ராஜா மிக நெருக்கமாக இருந்துள்ளார். ஏன்? இதற்காகத் செஞ்சி மஸ்தானை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக பா.ஜ.க. முன்வைத்துள்ளது. நடவடிக்கை எடுப்பீரா?” என ஸ்டாலினை கேட்டுள்ளார்.