மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசப்பட்டது தொடர்பாக எழுந்த பிரச்னையில் பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் குடும்பத்தினரை பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் பா.ஜ.கவின் வளர்ச்சியை பிடிக்காத தி.மு.க அரசு, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி காவல்துறை மூலம் பா.ஜ.கவினர் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த மதுரை மக்களை தமிழக அமைச்சர் தியாகராஜன் இழிவாக பேசினார். இதனால் உணர்ச்சிவசப்பட்டதால், இந்த விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளது. தற்செயலாக நடந்த இச்சம்பவத்தை பூதாகரமாக்கியுள்ள தி.மு.க அரசு, இதில் தொடர்பே இல்லாத கட்சியினரை கைது செய்து மிரட்டி வருகிறது. பாதிக்கப்பட்டோருக்கு பா.ஜ.க என்றும் துணை நிற்கும். தி.மு.க அரசின் இந்த அராஜகப்போக்கு தொடர்ந்தால், வரும் தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த தீர்ப்பளிப்பார்கள். காவல்துறையினர் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றும் கடமையை செய்ய வேண்டும். அப்பாவி மக்களை பழிவாங்கும் செயலில் ஈடுபட்டால் பா.ஜ.க போராட்டம் நடத்தும். தி.மு.க., அரசின் அத்துமீறல்களுக்கு அறவழியில் சட்டம் மூலம் போராடி நீதியை பெறுவோம்” என்றார்.