தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதுத் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதன் பின்னணியில் திட்டமிட்ட சதி இருப்பதாக பா.ஜ.க கருதுகிறது. நீட் விவகாரத்தில் பா.ஜ.க நிலைப்பாட்டை எதிர்த்து குண்டு வீசியதாக கைது செய்யப்பட்ட ரௌடி வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை கூறுகிறது. இது நம்பும்படியாக இல்லை. நீட் என்பதற்கு என்ன அர்த்தம் என அந்த ரௌடிக்கு தெரியுமா? தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக என்னுடைய பாதுகாப்பைக் குறைத்தார்கள். என்னுடைய தொலைபேசி ஒட்டுக்கேட்கப்படுகிறது. உடனிருக்கும் ஆட்களை கண்காணிக்கிறார்கள். பா.ஜ.க அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தேசிய தலைவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனை என்.ஐ.ஏ விசாரிக்க உத்தரவிட வேண்டும். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனதற்கு இதுவே உதாரணம்’ எனக் கூறினார்.