இரண்டு வருடங்களுக்குப் பிறகு வருடாந்திர அமர்நாத் யாத்திரை ஜூன் 30 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு ஏப்ரல் 11ல் தொடங்கியது. இந்த ஆண்டு சுமார் மூன்று லட்சம் யாத்ரிகர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பிற்காக, உள்துறை அமைச்சகம் ஏற்கனவே 50 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் படைகளை (சி.ஏ.பி.எப்) பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. அமர்நாத் யாத்திரையின் பாதுகாப்புத் தயார்நிலை ஆய்வு கூட்டத்தில், மூத்த உள்துறை அமைச்சக அதிகாரிகள், ஜம்மு காஷ்மீர் காவல்துறை இயக்குநர், ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை டைரக்டர் ஜெனரல், எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர், அமர்நாத்ஜி கோயில் வாரிய உறுப்பினர்கள் ஆகியோருடன் மத்திய உள்துறைச் செயலர் அஜய் குமார் பல்லா ஆய்வு செய்தார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அமர்நாத் யாத்திரையை மீண்டும் தொடங்குவது சவாலான பணி என்பதால், பாதுகாப்பு அமைப்புகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சரும் விரைவில் மற்றொரு ஆய்வுக் கூட்டத்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.