அகில பாரத செயற்குழு

கர்நாடக மாநிலம் தார்வாடில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத செயற்குழு கூட்டம் இன்று துவங்கி 30 தேதி வரை நடைபெறுகிறது. இதில், தேசம் முழுவதிலும் இருந்து 350க்கும் அதிகமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அகிலபாரத பிரச்சார பிரமுக் சுனில் அம்பேகர், ‘கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அனைத்து கூட்டங்களும், ‘ஆன்லைன்’ வழியாகவே நடத்தப்பட்டன. தற்போதுதான், தார்வாடில் செயற்குழு கூட்டம் மீண்டும் நேரடியாக நடக்க உள்ளது. இதில், வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து நடக்கும் வன்முறை குறித்து விவாதித்து, செயற்குழு கூட்டத்தில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்படும். நாட்டின் 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடி வரும் இவ்வேலையில் நாட்டுக்கு பல தியாகங்கள் செய்த பிரபலமாகாதவர்கள் குறித்து, மக்களிடம் எடுத்துச் சொல்ல ஆர்.எஸ்.எஸ் முடிவு செய்துள்ளது. கொரோனா மூன்றாவது அலை பரவலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். அப்படி மூன்றாவது அலை பரவினால் மக்களுக்கு செய்ய வேண்டிய சேவைகள் குறித்து 10 லட்சம் தொண்டர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பயிற்சியளித்துள்ளது. இதற்காக கடந்த ஜூலையில் நாடு முழுதும் 1.5 லட்சம் இடங்களில் இந்த பயிற்சி முகாம்கள் நடைபெற்றன’ என தெரிவித்தார்.