நாட்டில் விவியசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் என கூறியுள்ள மத்திய அரசு, அதற்கு புதிய வேளாண் சட்டங்கள் உட்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, விவசாய உள்ளீட்டு பொருட்கள் செலவையும் அறுவடைக்கு பிறகான செலவையும் குறைத்து விவசாயிகளுக்கு லாபத்தை கூட்ட முடிவெடுத்துள்ளது. அதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மத்திய வேளாண் அமைச்சகம் தொழில்நுட்ப ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இதற்கான விழாவில் பேசிய மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ‘இந்த மாதிரி திட்டம் ஆறு மாநிலங்களில் உள்ள 100 கிராமங்களில் ஓராண்டுக்கு செயல்படுத்தப்படும். வேளாண் துறையில் லாபத்தை ஈட்டுவதற்கு இந்த தொழில் நுட்பங்கள் உதவும். இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட இந்த முயற்சிகள் வழிவகுக்கும். கொரோனா பரவல் காலத்திலும் வேளாண்துறை வளர்ச்சி கண்டுள்ளது. விவசாயிகளின் நிதியுதவி திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும் ரூ. 6,000 நிதியுதவியை மத்திய அரசு அளித்து வருகிறது’ என தெரிவித்தார்.