அக்னி 5 ஏவுகணை சோதனை

அணு ஆயுத திறன் கொண்ட, 5,000 கிமீ தூரம் பயணிக்கும், கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி 5 ஏவுகணை (ஐ.சி.பி.எம்) அதன் முதல் பயனர் சோதனையை இந்த மாத இறுதிக்குள் பரிசோதிக்க உள்ளது. முக்கியமாக இந்த ஏவுகணை பல இலக்குகளை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்பது இதன் சிறப்பு. சோதனைகளுக்கு பிறகு அக்னி 5 விரைவில் ஆயுதப் படையில் அறிமுகப்படுத்தப்படும். இதற்காக ஒடிசா கடற்கரையில் உள்ள ஒரு பாதுகாப்பு ஆய்வு மையத்தில் விரிவான தயாரிப்புகள் தொடங்கியுள்ளன. 2018ல் நடைபெற்ற அக்னி 5ன் ஆரம்பக்கட்ட சோதனைகளுக்குப் பிறகு 2020ல் படையில் சேர்க்க திட்டமிடப்பட்டது. கொரோனா காரணமாக இது தள்ளிப்போனது. டி.ஆர்.டி.ஓ உருவாக்கிய இந்த ஏவுகணை ஆசிய நாடுகளின் அனைத்துப் பகுதிகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பாவின் சில பகுதிகளில் உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், இஸ்ரேல், வட கொரியாவுக்கு பிறகு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்திருக்கும் 8 வது நாடு பாரதம்.