எப்போதுமே வயதிற்கு ஒரு தனி மரியாதை நம் சமூகத்தில் உண்டு.பெரிய மனிதர்களுக்கு, வீட்டில், வெளியில், சபையில் கிடைக்கும் முக்கித்துவம், வாழ்க்கையில் எலலோருக்கும் வாய்ப்பது அரிது. 50 வயதை கடக்கும் வரை ஒவ்வொரு ஆணும், பெண்ணும், அநேகமாக தந்நிலை மறந்து, சமூகம், குடும்பம், குழந்தை, பொறுப்பு, என்று மட்டுமே வாழ்ந்து வைக்கிறார்கள்.
அதற்காக அல்லது அதுவரையில் தத்தமது சொந்த விருப்பு வெறுப்புகளை, கனவுகளை, லட்சியங்களை, தியாகம் செய்ய வேண்டியுள்ளது.ஆனால், அதற்குப் பிறகு
தான் அவர்கள் முழுதாக சுவாசிக்கவும், ஒவ்வொரு கணத்தை ரசித்து வாழவும் ஆரம்பிக்கிறார்கள்.நன்றாக ஆற அமர குளித்து, உண்டு, உறங்கி, நடந்து, சிரித்து, பேசி மகிழவும் வாய்ப்பு கிடைக்கிறது.
பேரக் குழந்தைகளின் மழலை சிரிப்பு, பேச்சு எல்லாமே புதுமையாக தெரிகிறது. ஏனெனில் இதையெல்லாம் அவர்கள் பெற்ற குழந்தைகளிடம் அனுபவித்து மகிழ நேரம் இருந்திருக்காது.வரவுக்கும் செலவுக்கும் போராட்டமான காலம் போய், ஓய்வும், சேமிப்பும், பிள்ளைகள் நம்மை பார்த்து கொள்வதும் நிம்மதியை தந்து விடுகிறது.மனைவி நண்பர்களிடம் அளவளாவ முடிகிறது.சிலருக்கு முகம், சிகை, ஆடை அலங்காரத்தில் ஈடுபாடு காட்ட முடிகிறது.
யோகா, தியானம், நடைபயிற்சிகளுடன், தொலைதூர கல்வியில் முதுகலை பட்டம் வாங்குவது, சிறு தொழில் துவங்கி நாலு பேருக்கு சம்பளம் தருமளவு உயர்வது, என வயோதிகர் உலகம் பரந்து விரிந்து, இளமை ததும்ப காட்சி தருகிறது.35 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே மருத்துவ கல்லூரியில் படித்த மாணவர்களின் சத்திப்பின் மூலமாக தங்களது வாழ்க்கை துணையை இழந்திருந்த பிரபல மருத்துவர்கள், தங்களின் ஆழ்ந்த நட்பின் நீட்சியாக மறுமணம் புரிந்து கொண்டு, வாட்டும் தனிமையின்றி மருத்துவ சேவையை தொடர்கிறர்கள்.
ஓய்வூதியம் பெறுபவர்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்கிறார்கள். நம் நாட்டில் ஆதரவற்ற முதியோர்க்கு கணிசமான ஓய்வூதியம், மருத்துவ காப்பீடு, போக்குவரத்து சலுகை என பலவும் ஏராளமான முதுயோர்களின் வாழ்வில் நிம்மதியை தருகிறது. அது மட்டுமா! சிறு வயதில் படிக்க திணறிய கவிதைகள், போட முடியாத கணக்குகள், வாயில் வராத ஆங்கிலம், மேடை பேச்சு, அதிகாரம், ஆழமான சிந்தனை, அமைதியான அணுகுமுறை, பெரிய வேலைகளை சுலபமாக சாதிக்கும் பேராற்றல் 50 வயதிற்கு மேலே கைகூடி வந்து விடுகிறதே! அற்புதமான திகட்டாத மகிழ்ச்சி வெள்ளம் பெருகுகிறதே.