தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி, 2வது முறையாக தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில அரசின் பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். அதில், துணைவேந்தர்கள் தங்களுடைய கல்வி நிறுவனங்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விளக்கினர். 75வது சுதந்திர தின கொண்டாட்டம் தொடர்பாக பல்கலைக்கழகங்கள் எடுத்துள்ள முயற்சிகளை பாராட்டிய ஆளுனர், சுப்பிரமணிய பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற நமது தேசத்தின் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்களின் பெயர்களில் இருக்கைகளை அமைத்து, அவர்களின் நோக்கங்களையும், மகத்தான இந்தியாவை கட்டமைக்கும் நோக்கங்களையும் நிறைவேற்ற வேண்டும். 2047ம் ஆண்டில் பாரதத்தின் வரையறைகளை கோடிட்டு காட்டும் ஆவணங்களை தயாரிக்க அறிஞர்களின் குழுக்களை பல்கலைக்கழகங்களில் அமைக்க வேண்டும். காலனி ஆதிக்கத்துக்கு முன், பாரதம் எவ்வளவு செழிப்பாக இருந்தது என்பதையும், அதை ஆங்கிலேயர்கள் எவ்வாறு சுரண்டினார்கள் என்பதையும் குறித்த ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆலோசனைகளை வழங்கினார்.