தேசிய மருத்துவ ஆணையம், வெளியிட்ட அறிக்கையில், ‘கொரோனா நெருக்கடி, போர் உள்ளிட்ட காரணங்களால், வெளிநாடுகளில் மருத்துவ படிப்பை முடித்தும் இன்டர்ன்ஷிப் பயிற்சியை முடிக்காமல் பாதியில் நிறுத்திவிட்டு பலர் நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் பாரதத்திலேயே இன்டர்ன்ஷிப் பயிற்சியை முடிக்க அனுமதி வழங்கப்படும். அதற்கு பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள், தேசிய தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் வெளிநாட்டு மருத்துவ பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேர்ச்சி பெற்றவர்களுக்கு, 12 மாதங்கள் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெற அனுமதி அல்லது, மீதமுள்ள பயிற்சி காலத்திற்கு மட்டும் அனுமதிகளை மாநில மருத்துவ கௌன்சில்கள் வழங்கலாம். பயிற்சி பெறும் மாணவர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கக் கூடாது. அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.