நீலகிரி மாவட்டம், ஊட்டி மஞ்சகல் மந்துவை பூர்வீகமாக கொண்ட தோடர் பழங்குடியினத்தைச் சேர்ந்த நார்ஷ்தோர் குட்டன் – நித்யா தம்பதியின் மகள் நீத்துசின், 18. இவர், குன்னுார் அருவங்காடு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பிளஸ் 2 பயின்று, நீட் தேர்வு எழுதினார். அதில், 54 சதவீதம் மதிப்பெண் பெற்று, நீலகிரி பழங்குடியின மக்களுக்கு பெருமை தேடி தந்துள்ளார். மாணவி நீத்துசின் கூறுகையில், ”மருத்துவத்தில், ‘கார்டியாலஜிஸ்ட்‘ பிரிவில் தேர்ச்சி பெற்று பழங்குடியின மக்களுக்கு சேவை செய்வதே விருப்பம்,” என்றார். தாய் நித்யா கூறுகையில், ”நீட் தேர்வில் பொது பிரிவினருக்கு நிகராக எஸ்.டி., பிரிவிலும் மதிப்பெண் பெற்றுஉள்ளார். ”அர்ப்பணிப்புடன் படித்து சாதனை புரிந்தது பழங்குடியின சமுதாயத்துக்கு பெருமை சேர்த்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தோடர் சமுதாயத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற முதல் மாணவி இவர் தான்,” என்றார். ஊட்டி அருகே உள்ள முத்தநாடு மந்து பகுதியில் மாணவி நீத்துசின்னுக்கு குடும்பத்தினர், உறவினர்கள் பாரம்பரிய முறைப்படி ஆசி வழங்கினர்.