அந்திர மாநிலம் ரேணிகுண்டாவிலிருந்து பால் கொண்டு செல்லும் பிரத்தியேக ‘தூத் டொரான்டோ’ ரயில் இதுவரை 443 முறை பயணம் செய்து, 2,503 பால் டேங்கர்கள் மூலம் சுமார் 10 கோடி லிட்டர் பாலை டெல்லிக்கு கொண்டு சென்றுள்ளது. கொரோனாவுக்கு முன்பு, டெல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள மக்களின் பால் தேவையைப் பூர்த்தி செய்ய வாராந்திர சூப்பர் பாஸ்ட் ரயில்களில் பால் டேங்கர்கள் இணைக்கப்பட்டன. ஆனால், பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டபோது, தெற்கு மத்திய ரயில்வே இதற்காக தனித்துவமான ‘தூத் டொரான்டோ’ சிறப்பு ரயில்களை இயக்கியது. இந்த ரயில், ரேணிகுண்டாவிலிருந்து ஹசரத் நிஜாமுதீன் ரயில் நிலையம் வரையிலான 2,300 கி.மீ தூரத்தை 30 மணி நேரத்தில் சென்றடைகிறது. இதனால் டெல்லிவாழ் மக்களின் பால் தேவைகள் பூர்த்தியாகின்றன. பால் விற்பனையாளர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கிறது.