மைசூர் பிஷப் கன்னிகாதாஸ் வில்லியம், மீது பாலியல் துஷ்பிரயோகம், மிரட்டுதல், குற்றச் செயல்கள், பொதுப் பணத்தை ஆடம்பரத்திற்காகவும், சட்டவிரோத செயல்களுக்காகவும் கையாடல் செய்தல், ஊழல், கிரிமினல்களுடன் தொடர்பு மற்றும் ஒரு குழந்தைக்குத் தந்தை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. மேலும், 37 பாதிரிகள், அவருக்கும் ஊழல் செய்யும் சில காவல்துறை அதிகாரிகள், கிரிமினல்கள் மற்றும் அரசியல்வாதிகளுடன் வலுவான தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டி வாடிகனுக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து மைசூர் பிஷப் கன்னிகாதாஸ் வில்லியம் விடுப்பில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அவருக்குப் பதிலாக பெங்களூரு பேராயர் எமரிட்டஸ் பெர்னார்ட் மோராஸ் மைசூர் மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்டார். முன்னதாக, கன்னட கிறிஸ்தரா சங்க (கேசிஎஸ்) செயலாளர் ரஃபேல் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாக மைசூர் மறைமாவட்டத்தின் பெருமை, பெயர், புகழ், ஆன்மிகம் ஆகியவற்றை பழைய இரண்டு பிஷப்களும் களங்கப்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது. கன்னிகாதாஸ் வில்லியம் 2017ம் ஆண்டு பிஷப்பாக நியமிக்கப்பட்ட பிறகு, “பொதுப் பணத்தை ஆடம்பரத்திற்காகவும், சட்டவிரோத செயல்களை மறைக்கவும் செலவு செய்துள்ளார்” என்று கூறினார். மேலும், நவம்பர் 5, 2019 அன்று, பிஷப் கன்னிகாதாஸுக்கு எதிராக, அசோசியேஷன் ஆஃப் கன்சர்ன்ட் கத்தோலிக்கர்கள் என்ற குடிமக்கள் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ராபர்ட் ரொசாரியோ என்பவரும் புகார் அளித்துள்ளார். “கன்னிகாதாஸ் ஏ வில்லியம் இங்கு நியமிக்கப்பட்டதில் இருந்து எங்கள் மறைமாவட்டத்தின் இருண்ட காலம் தொடங்கியது. ஒழுக்கமற்ற, ஊழல்வாதி, ஆன்மிகமற்ற, பொருள்முதல்வாதி, உலகியல், கெட்ட பெயர், அவமரியாதை, சர்வாதிகாரி போன்ற ஒருவரை மைசூருவின் பிஷப்பாகப் பெற்றிருப்பதற்காக நாங்கள் வருந்துகிறோம்” என்று பாதிரிகள் வாடிகனுக்கு எழுதிய கடிதத்தில் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.