மத்திய அரசு, அனைத்து வீடுகளுக்கும் இலவசமாக குடிநீர் குழாய் அமைத்து சுத்தமான நீரைத்தர துவங்கப்பட்டதுதான் ‘ஜல் ஜீவன்’ திட்டம். முன்னோடியான சாதனை திட்டமான இதில் தமிழகத்தில் ஒரு வீட்டுக்கு 5 ஆயிரம் 15 ஆயிரம் என வசூலிப்பது, போலி ரசீதுகள் வழங்குவது என பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.
இந்நிலையில், குன்றத்தூர் ஒன்றியம், செரப்பணஞ்சேரி ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டம் மூலம் ரூ. 3 கோடியே 27 ஆயிரம் மதிப்பில் பணிகள் செய்யப்பட்டன. ஆனால், ஒரு கோடி ரூபாய்க்கான பணிகள்கூட முறையாக நடைபெறவில்லை. கிணறுகள், போர்வெல் போன்றவை நிர்ணயிக்கப்பட்ட ஆழத்துக்கு எடுக்கப்படவில்லை. மேல்நிலை நீர்தேக்க தொட்டி தரமாக கட்டப்படவில்லை. அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஜி.ஐ. பைப்புகள், பிளாஸ்டிக் பைப்புகளை பயன்படுத்தாமல் தரமற்ற பைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்ற புகார் எழுந்துள்ளது.
இதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், பொறியாளர் குழுவை அமைத்து விசாரிக்கவேண்டும் என்று அக்கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரிடம் புகார் அளித்துள்ளார். தமிழக அரசின் பட்ஜெட்டில், மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு தமிழக நிதியமைச்சர் தி.மு.க ஸ்டிக்கர் ஒட்டி அதற்கு 2,000 கோடி ஒதுக்கப்படும் என தெரிவித்தது தனிக்கதை.