ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. கைது

டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இக்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வரை பலர் மீது லஞ்சம், ஊழல், சட்ட மீறல் மற்றும் பாலியல் புகார்கள் எழுந்து வருகின்றன. டெல்லி துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின், பிரகாஷ் ஜார்வால், விஜய்சிங்லா உல்ளிட்டோர் இதில் அடக்கம். இந்த சூழலில்தான், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் மாநில சட்டமன்ற உறுப்பினர் அமித் ரத்தன் கோட்பட்டா லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலம் சண்டிகரை அடுத்த பதிண்டா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான இவரது உதவியாளர் ரஷிம் கர்க். அரசு மானியமாக வழங்கும் 25 லட்சம் ரூபாயை வழங்குவதற்கு, ரஷிம் கர்க் 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக பதிண்டாவிலுள்ள குடா கிராமத் தலைவியின் கணவர் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விசாரணை நடத்திய லஞ்ச ஒழிப்பு காவலர்கள், 4 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் உதவியாளர் ரஷிம் கர்க்கை கடந்த பிப்ரவரி 16ம் தேதி கைது செய்தனர். தொடர்ந்து, இந்த வழக்கில் அமித் ரத்தன் கோட்பட்டாவுக்கு தொடர்பு இருக்கிறதா என்று லஞ்ச ஒழிப்பு காவலர்கள் விசாரணை நடத்தி வந்தனர். ரஷிம் கர்க்குக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அமித் ரத்தன் கோட்பட்டா கூறிவந்தார். மேலும், பஞ்சாப் ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்த சூழலில், 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில், அமித் ரத்தன் கோட்பட்டாவுக்கு தொடர்பு இருப்பதை பஞ்சாப் குற்றப் புலனாய்வுத்துறை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர அமித் ரத்தன் கோட்பட்டா கைது செய்யப்பட்டார்.