வீசும் தொற்றுப் புயல் நடுவே தேசம் தேடிய தெம்பு இதோ!

ஹம் ஜீதேங்கே: பாசிட்டிவிட்டி அன் லிமிடெட்” (நேர்மறை எண்ணங்களே எங்கெங்கும்: – வென்று காட்டுவோம்!) என்ற 5 நாள் தொடரை மே ௧௧ அன்று தொடங்கி டெல்லியைச் சேர்ந்த ‘கோவிட் ரெஸ்பான்ஸ் டீம் (சிஆர்டி)’ என்ற சமுதாய உணர்வுள்ள பல்வேறு துறை நல்லோரைக் கொண்ட அமைப்பு நடத்தியது. 100க்கும் மேற்பட்ட ஊடகத் தளங்களில் ஒளிபரப்பப்பட்ட இந்தத் தொடரின் நோக்கம் ஊரில், மக்கள் மனதில், தெம்பு ஓங்கிடச் செய்வதே.

முதல் நாள்
சத்குரு ஜக்கி வாசுதேவ்: இது கலாச்சாரத்தின் வேர்களை ஆழமாக அகழ்ந்து பார்க்கும் நேரம். இடர் களைந்து வெற்றிகரமாக தலைநிமிர்வோம். இது நாம் உலகுக்கு நிரூபிக்க வேண்டிய ஒன்று. பல வழிகளில், உலகம் இதற்காக இந்தியாவை நோக்கி வருகிறது. ஜைன முனி ஸ்ரீ பிரமண் ஸாகர்: இது ஒரு உடல் நோய். இது உங்கள் மனதுடன் தொடர்புடையது அல்ல. இந்த உடல் நோய் உங்கள் மனதை வெல்ல விடாதீர்கள். இந்த ஆன்மிகப் பார்வை தேவை. ஒரு நோய் வந்துவிட்டது, ஆனால் அது போய்விடும். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் அதிலிருந்து பாதுகாப்பாக வெளியே வருவதை நீங்கள் காணலாம். இறப்பு சுமார் 1.5 சதவீதம் மட்டுமே.

இரண்டாம் நாள்
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்: நமது உள்ளார்ந்த கருணை, கஷ்ட காலத்தில் தான் வெளிப்படும். அதற்கான வாய்ப்பு இன்று கிடைத்துள்ளது. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்கிறோம். மன உறுதியுடன், இறை யருளையும் நாடுவோம். எந்தவொரு சக்தியும் நம்மை அடக்க முயற்சிக்கும் போதெல்லாம், நாம் வலிமையுடன் அவற்றை எதிர்கொண்டு வெற்றி பெற்று மீண்டெண்ழுந்து மேலும் வளர்ச்சி கண்டுள்ளோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். யோகப் பயிற்சி, ஆயுர்வேதம் இவற்றில் கவனம் செலுத்துங்கள்.
அஸீம் பிரேம்ஜி: கொரோனாவின் கொடும் பிடியிலிருந்து ஏழை எளியோரை மீட்க நாம் அனைவரும் ஒன்றுபட்டு நம்மால் இயன்றதையும் இன்னும் கூடுதலாகவும், செய்ய வேண்டியது காலமிது. அறிவியல் அடிப்படையில், சவாலான சூழ்நிலையின் வேகம், வீச்சு, ஆழம் இவற்றை உணர்ந்து செயல்பட வேண்டுமென்று அனைவரையும் அன்புடன் வேண்டுகிறேன்.
நிவேதிதா பிடே: நன்றாக நினைவில் கொள்ளுங்கள். பாரத தேசம் தொன்மையான தேசம். எத்தனையோ இடர்களைக் கண்டு வென்று மேலெழுந்த நாடு இது. கூர்ந்து கவனித்தோம் என்றால், ஒவ்வொரு சவாலிலும் பல வாய்ப்புகள் உண்டு. ஊரடங்கு காலமான இன்று குடும்ப உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு. ஒன்றாக சூரிய நமஸ்கார், யோகா செய்வோம். அக்கம் பக்கத்தாரை இவற்றில் ஈடுபட ஊக்குவிப்போம். அது சேவை. சுயநலமற்ற சின்னஞ்சிறு செயலும் கூட நமக்கு ஆன்ம பலம் தரும் என்பார் சுவாமி விவேகானந்தர்.

மூன்றாம் நாள்
பத்ம விபூஷண் சோனல் மான்சிங்: நம் ஒவ்வொருவர் மனதுக்குள்ளும் ஏதாவது ஒரு சில கவிதை வரிகள், ஏதாவது ஒரு சுபாஷிதம், சுலோகத்தின் ஒரு சில வரிகள். பழைய திரைப்படப் பாடல் வரிகள் … இப்படி ஏதாவது ஒன்று மறைந்து கிடக்கும். எனக்கு அது பயன்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்டபோது நான் நொந்து போய் விடவில்லை. அனைவரும் தெம்புடன் இருப்பதுடன் ஆக்கப்பூர்வமான பேச்சால் ஊரில் மற்றவர்களுக்கும் தெம்பு தர வேண்டும். இதற்கு ஏதாவது ஒரு கலை வடிவம் கைகொடுக்கும். ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: நெருக்கடி வந்துவிட்டது, துன்பம் சூழ்ந்து விட்டது. ஆனால் வெளிவர தொடர்ந்து முயற்சி செய்வது அவசியம். அதுதான் நெருக்கடியில் இருந்து விடுபடுகிற சூட்சுமம் என்று வால்மீகி ராமாயணத்தில் ஹனுமான் பேசுகிறார். முயற்சி செய்வதுடன் நாம் நம்பிக்கை வைத்து சுவாமியிடம் பிரார்த்தனை செய்வோம். மற்றவர்களுக்கும் இந்த நம்பிக்கையை ஏற்படுத்துவோம். சென்ற ஆண்டு இந்த நெருக்கடி துவங்கியபோது எல்லா மாநில மக்களும் எல்லா மொழிக்காரர்களும் ஒன்றுபட்டு வேலை செய்தார்கள். நல்ல பலன் கிடைத்தது. ஊரில் நம்பிக்கை பரப்புவோம்.

நான்காவது நாள்
சாத்வி ரிதம்பரா: ஊருக்குள் எல்லோருக்கும் எந்தளவுக்கு தெம்பு, மனோதிடம் வலுவாக இருக்கிறது என்பது ஏடாகூடமான சூழ்நிலை ஏற்படும் போது தான் தெரிகிறது. நம் அனைவரின் உள்ளார்ந்த ஆற்றலைக் காட்டும் தருணம் இது. தன் பாதையில் இடைஞ்சலாக மலையே இருந்தால்கூட அதை உடைத்து, அறுத்து மணல் ஆக்கிவிட்டு பாய்கிறது ஆறு, இல்லையா? இடைஞ்சல்களை பொடிப்பொடியாக்க நதியால் முடியும் என்றால் நம்மால் ஆகாதா என்ன? தெம்பாக இருப்போம். தேசப்பணி ஆற்ற வேண்டுமே? சந்த் ஞானதேவ் சிங்ஜி: நெருக்கடி ஏற்பட்டி ருக்கிறது. ஆனால் நிலைக்காது. உலகில் வரும் எதுவும் நிலையற்றது தானே? எனவே பீதியடையத் தேவையில்லை. மனதில் சோர்வு தலை தூக்கும் போது கீதை பாராயணம் செய்யுங்கள், குரு வாணி ஓதுங்கள். நமது பாரம்பரிய வைத்திய முறைகள், யோகா உதவி கொண்டு உடலைத் துடிப்பாக, மனதை தெம்பாக வைத்திருங்கள். மனமது தெம்பானால் மண்ணுலகை வெல்லலாமே?
தொகுப்பு : பெரியசாமி