சம்பளம் தராத ஆம் ஆத்மி அரசு

ஆம் ஆத்மி கட்சி, விரைவில் தேர்தல் வரவுள்ள மாநிலங்களில் எல்லாம் இலவசங்களை தருவதாக தொடர்ந்து வாக்குறுதிகளை அள்ளிவிட்டு வரும் நிலையில், அக்கட்சி ஆளும் பஞ்சாப் அரசு இலவசங்களால் தற்போது நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. பஞ்சாப் அரசு, தனது ஊழியர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கான சம்பளத்தை இன்னும் வழங்கவில்லை. இந்த தாமதத்திற்கு மாநில அரசிடம் போதிய பணம் இல்லாமல் போனதே காரணம் என்று கருதப்படுகிறது. பொதுவாக, மாநில அரசு நிர்வாகங்கள் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் முந்தைய மாதத்திற்கான சம்பளத்தை செலுத்தும். ஜி.எஸ்.டி இழப்பீட்டு முறை காலாவதியானதில் இருந்து நிர்வாகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று மாநில அரசு அதிகாரிகள் கூறினர். முந்தைய நிதியாண்டில், பஞ்சாப் மத்திய அரசிடமிருந்து ஜி.எஸ்.டி இழப்பீடாக ரூ.16,000 கோடியைப் பெற்றது. இந்த ஆண்டு, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான இழப்பீட்டை பெற்றுள்ளது. அதன்பிறகு ஜூன் 30ம் தேதி ஜி.எஸ்.டி இழப்பீட்டு முறை காலாவதியானது. மாநில அரசின் மூத்த அதிகாரி ஒருவர், ஆம் ஆத்மி அரசு, கருவூலத்தில் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ததால், சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் குறைந்தது ஒரு வாரமாவது பொறுத்தாக வேண்டும்  என்று தெரிவித்தனர். இது தவிர, தேர்தலுக்கு முந்தைய இலவச மின்சார வாக்குறுதிகளை ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றியதன் காரணமாக, மாநில கருவூலத்தில் ஏற்கனவே பெரும் மின் கட்டணச் சுமை ஏற்பட்டுள்ளது. அரசுத்துறையில், ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களை பணியில் சேர்க்கும் புதிய கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் மாநில அரசுக்கு ரூ. 400 கோடி கூடுதல் சுமை ஏற்படும். ஏற்கனவே, 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடும்பப் பெண்ணுக்கும் மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என ஆம் ஆத்மி கட்சியும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தபோது அந்த வாக்குறுதியை நிறைவேற்ற எந்த ஏற்பாடும் செய்யாமல் தமிழகத்தை போலவே புறக்கணித்தது என்பதும் சிந்திக்கத்தக்கது.