புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் தொட்டியில் மலம் கலந்தவர்களை இன்று வரை ஏன் கைது செய்யவில்லை என கேள்வியெழுப்பியுள்ள பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், “வெட்ககரமான நூறாவது நாள் இன்று. வேங்கைவயலில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மனித மலத்தை கலந்து இந்த நூற்றாண்டின் மாபெரும் அவமான சின்னத்தை உருவாக்கி நூறு நாட்கள் நகர்ந்து விட்டன. ஆனால், இன்றுவரை இந்த கொடூரத்தை, கேவலத்தை, அராஜகத்தை, குரூரத்தை செய்த குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த முடியாத தமிழக அரசின் ‘கையாலாகாத்தனம், அலட்சியம்’, நடந்த சம்பவத்தை விட அருவருக்கத்தக்கது. ஆனால், தமிழக முதல்வர், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் சமூக நீதி குறித்து பேசுவது நகைப்புக்குரியது. இரண்டு சீட்டுகளுக்கு பல கோடிகளை பெற்றுக்கொண்டு உல்லாசமாக இருக்கும் கம்யூனிஸ்டுகளின் கோரமுகம் இந்த விவகாரத்தில் அந்த கட்சிகள் கொண்டிருக்கிற அக்கறையின்மையால் (?) வெளிப்பட்டு விட்டது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே வாழ்வதாக மார்தட்டிக் கொள்ளும் தொல். திருமாவளவன் அவர்கள் இந்த விவகாரத்தில் ஒடுங்கி, ஒதுங்கி மௌனம் காப்பது சந்தர்ப்பவாத அரசியலின் உச்சக்கட்டம்.
“ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க மனமில்லாத திமுக அரசை கண்டித்து நான் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறேன், அந்த கூட்டணியில் இணைந்து நான் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று திருமாவளவன் முழங்கியிருக்க வேண்டாமா? அரசியல் சந்தர்ப்பவாதத்தின் சூழ்ச்சியால் ஒரு சிறு கிராமத்தை சேர்ந்த பட்டியலின மக்கள் ‘அருவருப்பான மனநிலையோடு’ நூறு நாட்களை கடந்து தினம் தினம் மடிந்து கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கைது செய்யப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். “ஓர்ந்து கண்ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும் தேர்ந்து செய்வதே முறை” என்ற வள்ளுவரின் குறளுக்கேற்ப ஆட்சி செய்ய வேண்டிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், அக்கடமையிலிருந்து தவறி விட்டார் என்பதே வருந்தத்தக்க உண்மை. ‘வெட்ககரமான’ நூறாவது நாள் இன்று” என கூறியுள்ளார்.