பி.எஸ்.எல்.வி தயாரிப்பில் புது முயற்சி

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் மற்றும் லார்சன் & டூப்ரோ (எல்&டி) இணைந்து இஸ்ரோவின் நியூஸ்ஸ்பேஸ் இந்தியா (என்.எஸ்.ஐ.எல்) நிறுவனத்திடமிருந்து 860 கோடி ரூபாய் மதிப்பில் அடுத்த நான்கு ஆண்டுகளில் ஐந்து பி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளன. பல ஆண்டுகளாக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) வெற்றிகரமான செயற்கைக்கோள் ஏவு வாகனமான பி.எஸ்.எல்.வி, 52க்கும் மேற்பட்ட வெற்றிகரமான செலுத்துதல்களை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் பாரதம் மட்டுமல்ல, உலகின் 33 நாடுகளைச் சேர்ந்த 319 வாடிக்கையாளர் செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. பி.எஸ்.எல்.வி மூலம் 1990 முதல் இஸ்ரோ செயற்கைக்கோள் ஏவுதல் சேவைகளை வழங்கி வருகிறது. செப்டம்பர் 2016ல், பி.எஸ்.எல்.வி மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டன. இது ஒரு உலக சாதனை.