உலகில் ஆண்டுக்கு ஆண்டு மக்கள் தொகை அதிகரித்து வருகிறது என மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவுகள் தெரிவிக்கின்றன. மக்கள் தொகையில் சீனாவை பாரதம் விரைவில் பின்னுக்குத் தள்ளும் என்று சொல்லப்படும் நிலையில், ஆப்பிரிக்க நாடுகளிலும் மக்கள்தொகை அதிகமாகி வருகிறது. 2019ம் ஆண்டு நிலவரப்படி நைஜீரியாவில் உள்ள ஒரு பெண் சராசரியாக ஆறு குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார் என தெரியவந்துள்ளது. ஆனால் இதே நேரத்தில் சில நாடுகளில் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருகிறது என்பது ஆச்சரியமான தகவல். ஆம், உலகின் 20 நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.நா சபையின் தரவுகளின்படி, 2020ம் ஆண்டிலிருந்து 2050ம் ஆண்டுவரை, பல்கேரியா 22.5 சதவீதம், லிதுவேனியா 22.1, லாட்வியா 21.6, உக்ரைன் 19.5, செர்பியா 18.9, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா ஆகியவை தலா 18.2, குரோஷியா 18, மால்டோவா 16.7, ஜப்பான் 16.3, அல்பேனியா 15.8 என்ற அளவில் மக்கள் தொகை அதிகமாக குறையும் என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் தொகை குறைவுக்கு முதல் காரணம் பிறப்பு விகிதங்கள் குறைவதுதான் என பீட்டர்சன் இன்ஸ்டிடியூட் ஃபார் இன்டர்நேஷனல் எகனாமிக்ஸ் என்ற அமைப்பின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதைத்தவிர, புலம்பெயர்வு, வயதானோரின் இறப்பு விகிதம், திருமணத்தில் நாட்டமின்மை போன்றவையும் காரணமாகக் கூறப்படுகிறது.