ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
ஸ்ரீ ஆண்டாள் தனது திருப்பாவையின் பாசுரங்களில் வைஷ்ணவ சித்தாந்தத்தை எத்தனைக்கு எத்தனை அழகாக செதுக்கி இருக்கிறாளோ அத்தனைக்கு அத்தனை பாசுரங்களின் அமைப்பு ஏற்றம் பெறுகிறது. கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் இவற்றை மோக்ஷ சாதனங்களாக இத்தகைய சிந்தாந்தம் சொல்ல வரவில்லை. மாறாக, ப்ரபத்தி என்னும் சரணாகதியையே மோக்ஷ சாதனமாக உரைக்கிறது. இதன் தாக்கத்தை எதிரொலிக்கும் வகையில், முதல் பாசுரத்தில், நாராயணன் என்று பரமபத நாதனைச் சொல்கிறாள். . பாற்கடலில் பையதுயின்ற பரமன் என்று வியூஹ மூர்த்தியைச் சொல்கிறாள். இன்று பதிவிட்டுள்ள மூன்றாவது பாடலில்,ஓங்கி உலகளந்த உத்தமன் என்று விபவ அவதார மூர்த்தியைச் சொல்கிறாள் ஆண்டாள். !
த்ரிவிக்ரமாவதாரத்தை விபவ அவதார மூர்த்தியாகக் கருதியதற்கு ஸ்ரேஷ்டமான பொருள் பொதிந்துள்ளது. . கருணையின் வடிவம் இவ்வவதாரம். மஹாபலி சக்ரவர்த்தி – ஒரு அசுரன் என்பது தெரிந்த விஷயம். அவன் தேவர்களை துன்புறுத்தினான் என்பதும் அறிந்ததே . எல்லாம் இருந்தும், தெரிந்தும், அவனை சம்ஹாரம் பண்ணாமல் வாழ்வளித்த அவதாரம் த்ரி விக்கிரம அவதாரம். நல்லவன், தீயவன், ஆஸ்திகன் – நாஸ்திகன் என்று எந்த வித பாரபட்சமுமில்லாமல் எல்லோர் தலையிலும் தன் பாத ஸ்பரிசம் வைத்த அவதாரம் என்கின்ற பெருமை உடையது. . அதனால் ஓங்கி உலகளந்த உத்தமன் – புருஷோத்தமன் என்று அழைக்கிறாள் ஆண்டாள். பகவான் கட்டிப்பொன்போலே – அவன் நாமம் ஆபரணம் போலே என்று அவன் நாமத்துக்கு ஏற்றம் சொல்வர்கள் பெரியோர். ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷரத்தை இடைவிடாது அனுசந்தித்து வந்தால் என்னென்ன நன்மைகளெல்லாம் ஏற்படும் சொல்ல த் தலைப்படுகிறாள் ஆண்டாள். அந்த வகையில் இந்த பாடல் ஒரு மங்களாசாசனம்.
இந்த புருஷோத்தமனின் நாமத்தை ஜெபித்து நீராடி பாவை நோன்பிருந்தால் தீங்குகள் நீங்க மாதம் மும்மாரி பொழியும். அவனது பாதத்தை நோக்கி ஓங்கி வளர்ந்தது போல் நெற்பயிர்கள் வயல் வெளியெங்கும் நிறையும். அவ்வயல் வெளிகளில் ஊடே ஓடும் ஓடைகளில் மீன்கள் துள்ளி விளையாடும். குவளை மலர்களின் துளிரில் வண்டுகள் தூங்கும்.ஆசார்யர்கள் மிகுந்து ஞானம் தழைத்திருப்பதால் குவளைப்போதில் துயின்ற வண்டைப்போல், பாகவதோத்தமர்களின் இதயத் தாமரைதனில் அந்த பரமன் உறங்குகிறான்.அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் வள்ளலைப்போல் குடம் குடமாக பாலை நிறைக்கின்றன. வள்ளன்மை பரமாத்மாவின் குணம். அவன் எவ்வளவு
கொடுத்தாலும் குறைவில்லாத வள்ளல். அத்துடன் பாலை கன்று குட்டிகளும், இடையர்களும் கொள்ளாவிடில் பசு எப்படி தவியாய் தவிக்குமோ அதுபோல் பரமனும் ஜீவாத்மாக்கள் அவனை கொள்ளாவிடில் தவித்து போகிறான். ஜீவாத்மாக்கள் முக்தி பெற்று அவனை எவ்வளவு அனுபவிக்கிறார்களோ அதே போல் அவனும் அவர்களை கொண்டு சுகிக்கிறான். அவனது பெயரைக் கூறிப் பாடி நீராடி நோன்பிருந்து இச் செல்வங்களை எந்த நாளும் விட்டு நீங்காமல் பெற்று நிறைவோடு வாழ்வோம் .” என்று ஆண்டாள் மங்களாசாசனம் செய்கிறாள்.