‘சிவசேனை’ என்றால் ‘சிவாவின் படைகள் என்று பொருள். சிவா என்பது சத்ரபதி சிவாஜியைக் குறிக்கும். வீர சிவாஜியின் ஹிந்துத்வ கொள்கைகளை வலியுறுத்த களமிறங்கியது தான் சிவசேனை. அதன் நிறுவனர் பால்தாக்கரே இருந்தவரை அவரோ, அவரது குடும்பத்தினரோ தேர்தலில் போட்டியிட்டதும் இல்லை, அரசுப் பதவிகளை வகித்ததும் இல்லை. அவரது மறைவிற்குப் பிறகு அவரது மகன் உத்தவ் தாக்கரே தலைவராக இருந்து வருகிறார். முதல் தடவையாக, உத்தவ் மகன் ஆதித்ய தாக்கரே சட்டமன்றத் தேர்தலில் நின்று வெற்றியும் பெற்றுவிட்டார். தேர்தல் முடிவு வெளிவரும் போதே அவரது கட்சியினர் அடுத்த முதல்வர் ஆதித்ய தாக்கரேதான் என்று பேச ஆரம்பித்துவிட்டனர்.
நெறிமுறைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, மக்களின் தீர்ப்புக்கு எதிராக, முதல்வர் பதவி என்ற ஒரே காரணத்துக்காக பாஜகவிற்கு துரோகம் செய்துவிட்டு காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கை கோர்த்துள்ளது சிவசேனை. காங்கிரஸ் கட்சி சிவசேனைக்கு ஆதரவு கொடுப்பதற்கு பல கடுமையான நிபந்தனைகளை வகித்துள்ளது. அதில் ஒன்று சிவசேனை தனது ஹிந்துத்வ கொள்கைகளை வலியுறுத்தக் கூடாது என்பதாகும். முஸ்லிம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற காங்கிரசின் தேர்தல் வாக்குறுதியை சிவசேனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது இன்னொரு நிபந்தனை. கொள்கைகளை குழிதோண்டிப் புதைத்துவிட்டு பதவிக்காக அலையும் சிவசேனையின் போக்கு வெட்கக்கேடானது.
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைத்த குமாரசாமியின் நிலமையைப் பார்த்த பிறகும்கூட சிவசேனை படிப்பினை பெறவில்லை என்றால் சிவசேனைக்காகப் பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழி?
சிவசேனை தனது அழிவுக்கு தானே குழிபறித்துள்ளது என்பது தான் உண்மை.