அனைத்து மதத்தினருக்கும் நன்மை பயக்கும் பொதுசிவில் சட்டம்

பொதுசிவில் சட்டம் என்பது பாரதத்தில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும், அவர்களின் மதம், ஜாதி, இனம் ஆகியவற்றைக் கடந்து திருமணம், விவாகரத்து, சொத்துரிமை, தத்தெடுப்பு மற்றும் ஜீவனாம்சம் போன்ற தனிநபர் சார்ந்த குடும்ப விஷயங்களில், ஒரே மாதிரியான பொதுவான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது. தற்போது பாரதத்தில் குற்றவியல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும், குடும்ப விஷயங்களில் ஒவ்வொரு மதத்தினருக்கும் ( ஹிந்து, இஸ்லாமியர், கிறிஸ்துவர்) என தங்களின் தனிநபர் சட்டங்களையே பின்பற்றி வருகின்றனர். எவ்வாறு கிரிமினல் சட்டங்கள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்கின்றதோ, அதேபோல் பொதுசிவில் சட்டமும், அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில், கொண்டு வரப்படும் சட்டமாகும். தற்போது பாரதத்தில் முதன் முதலில் உத்தராகண்ட் மாநிலத்தில் அமுல்படுத்தப்பட்டது. பின்னர் குஜராத் மற்றும் அஸ்ஸாமிலும் பொதுசிவில் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது.
இந்த சட்டம் கொண்டு வரவேண்டிய அவசியம் என்ன என்பதையும் கவனிக்க வேண்டும். 1985 ஷா பானு வழக்கிற்கு பின்னர், பொதுசிவில் சட்டத்தின் அவசியத்தை புரிந்து கொள்ள வேண்டும். பாரத அரசியலமைப்பின் பகுதி 4-ல், ‘அரசு கொள்கையினை நெறிப்படுத்தும் கோட்பாடுகள்’ (DPSP) என்பதன் கீழ் சட்டப்பிரிவு 44 (Article 44) இதைப் பற்றிக் குறிப்பிடுகிறது: பாரதத்ததின் எல்லை முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஒரே மாதிரியான சிவில் சட்டத்தைப் பாதுகாக்க அரசு முயல வேண்டும்.” அரசியலமைப்பு நிர்ணய சபையில் இது விவாதிக்கப்பட்டபோது, நாட்டின் பன்முகத்தன்மையைக் கருத்தில் கொண்டு, இது கட்டாயமாக்கப்படாமல் எதிர்கால அரசின் முடிவுக்கு வழிகாட்டுதலாக (Directive Principle) மட்டும் வைக்கப்பட்டது.
பொதுசிவில் சட்டம் அமலுக்கு வந்தால், அனைத்து மதத்தினருக்கும் திருமணப் பதிவு கட்டாயமாக்கப்படும். பலதார மணம் (Polygamy) முற்றிலும் தடைசெய்யப்படும். விவாகரத்து நடைமுறைகள் நீதிமன்றங்கள் மூலமாக மட்டுமே சட்டப்பூர்வமாக நடக்கும். பெற்றோர் அல்லது கணவரின் சொத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் சமஉரிமை வழங்கப்படும். மத அடிப்படையிலான பாலினப் பாகுபாடுகள் நீக்கப்படும். தற்போதைய நிலையில் சில மத தனிநபர் சட்டங்களில் தத்தெடுப்பதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் முழுமையாக இல்லை. பொதுசிவில் சட்டம் வந்தால், அனைத்து குடிமக்களும் எந்தக் குழந்தையையும் சட்டப்படி தத்தெடுக்க முடியும். விவாகரத்துக்குப் பின் கணவன் அல்லது மனைவியால் கைவிடப்படும் துணையின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய சமமான சட்டப் பாதுகாப்பு வழங்கப்படும்.
தற்போது பாரதத்தில் மூன்று மாநிலங்களில் பொதுசிவில் சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் பொதுசிவில் சட்டம் கொண்டு வருவதற்கு 9 பேர் கொண்ட குழுவை அம்மாநில அரசு நியமித்துள்ளது.

 

கட்டுரையாளர் : ஈசன்