நாட்டிற்கு நற்பயன் தந்த பிரதமரின் 3 நாடுகளுக்கான பயணம்

பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய மூன்று நாடுகளைக் கொண்ட இந்தோ-பசிபிக் பயணத்தின் போது, 2026 ஜூலை 6-−8 ஆம் தேதிகளில், இந்தோனேசியாவுக்கு பயணம் செய்தார், இந்த பயணம் இரண்டு நாடுகளுக்கு இடையில் பண்பாட்டு தொடர்புகள், கலாச்சார, தூதரக, வணிக உறவுகளை மேம்படுத்தும் மிக முக்கியமான வரலாற்றுச் சம்பவமாகும்.
இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, விமான நிலையத்தில் பாரத பிரதமரை மிக சிறப்பான (Guard of Honour) கௌரவத்துடன் வரவேற்றார். பிரதமர் மோடிக்கு இந்தோனேசியாவின் மிக உயர்ந்த கௌரவமான விருதான “பிந்தாங் அடிபூர்ணா ஆஃப் தி ரிபப்ளிக் ஆஃப் இந்தோனேசியா மெடல்”, ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ வழங்கினார். பாரதம் மற்றும் இந்தோனேசியா இடையேயான உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை பலப்படுத்தும், பாரத பிரதமரின் பங்களிப்புக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
2026 ஜூலை 8 அன்று, பிரதமர் மோடி மற்றும் பிரபோவோ சுபியாண்டோ இந்தோனேஷியாவின் ஜோக்யகர்த்தா நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக இருக்கும் பழமைவாய்ந்த பிராம்பனன் கோயிலை பார்வையிட்டார்கள்.
இந்தோனேசியாவின் 9 ஆம் நூற்றாண்டு பிரம்பனன் ஆலயம், 47 மீட்டர் உயரமான சிவன் கோயில், ராமாயணம், பாகவத புராண காட்சிகள் சிற்பங்களில் ஆகியவை சனாதன கட்டிடக்கலை கோயில்கள் ஆகும். பாரதத்தில் இருந்து யாரேனும் பிரம்பனுக்கு வந்தால், காசி மற்றும் கேதார்நாத்தில் உணரும் அதே ஆன்மீக உணர்வை உணருவார்கள் என்று கூறிய பிரதமர் மோடி, இந்த 9 ஆம் நூற்றாண்டு கோயிலை, ஆசியாவில் பாரதத்தின் பாரம்பரியக் காப்பகம் தொடர்பான தொல்லியல் துறையுடன் (ASI) இணைந்து, 2029-க்கும் முன் புதுப்பிக்க பாரதம் உதவுமென தெரிவித்துள்ளார். இந்த பயணம் மிகப்பெரிய கலாச்சார முக்கியம் வாய்ந்த தருணமாக இருந்தது.
பெரும்பான்மையான முஸ்லிம் ஜனத்தொகை கொண்ட இந்தோனேஷியா, ஹிந்து வழிபாட்டிற்கு எதிராக இல்லாமல், மதநல்லிணக்கத்துடன் இருப்பதே சிறப்பான நட்புறவாகும். 1998ல், இந்தோனேஷியாவின் ரூபாய் நோட்டுகளில் விநாயகர் படம் இருந்தது, அங்குள்ள விமான நிலையத்தின் பெயர் “கருடா”. ஆகவே, அதிபர் பிரபோவோ அவருடைய உரையில், தங்களது மரபணு “பாரதியன்” என்பதை தெளிவாக கூறினார்.
பாரத பிரதமர் மோடி அவர்களின் உரையில், கலாச்சார பந்தம், பொதுவான சின்னங்கள், பல்வேறு தன்மையில் ஒற்றுமை, மற்றும் பாரதம்-இந்தோனேஷியா இடையேயான ஆன்மீக இணைப்பு பற்றி பல விசயங்களை முன் எடுத்து வைத்தார். பாரதம் மற்றும் இந்தோனேஷியாவின் பிணைப்பு, ராமாயணம்-, மகாபாரதத்தின் பாரம்பரியத்தில் மற்றும் நாளந்தாவின் பழங்கால ஞானத்தில் வேரூன்றியுள்ளது என்று அவர் கூறினார்.
இரு நாடுகளும் வாயாங் (Wayang) நடனம், இசை, மிகப்பெரிய பௌத்த கோயில் போரோபுடூர், பிரம்பானன் மற்றும் இந்தோனேஷியாவின் தேசிய கருட சின்னம் மூலம் கலாச்சார ரீதியாக இணைக்கப்படுகிறது. இந்தோனேஷியாவில் கோயில்கள் மற்றும் புத்த விகாரங்களை புதுப்பிப்பதன் மூலம் பாரதம், பாரதிய கலாச்சார உறவுகளை வலுப்படுத்த முயற்சிக்கிறது. பாரம்பரிய தொடர்புகளுக்கு மேலாக, உத்தரவாத மற்றும் பாதுகாப்பு தொடர்புகளும் நடைபெற்றன.
இந்தோனேஷியா நமது நாட்டின் தயாரிப்பான ப்ரஹ்மோஸ் ஏவுகணைகளை ரூ. 5,500 கோடிக்கு வாங்க உள்ளது. பாரதம், மலாக்கா நீரிணை அருகே உள்ள சபாங்க் துறைமுகத்தை (Sabang Port) மேம்படுத்த உதவ உள்ளது. இந்தோனேஷிய கப்பற்படை வீரர்களுக்கு கடல் பயிற்சி கொடுக்க ஒப்புக்கொண்டன. 130க்கும் மேற்பட்ட பாரத நிறுவனங்கள், இந்தோனேஷியாவில் செயல்பட்டு வருகின்றன. இந்தோனேஷியா, பாரதத்தின் 2-வது மிகப்பெரிய ஆசியன் வணிக கூட்டாளி. 2025-−26ம் ஆண்டுக்கான இரு நாட்டின் வர்த்தகம் $24.78 பில்லியனாக இருந்தது. இப்போது அதனை $100 பில்லியன் இலக்கு நோக்கமாக்கியுள்ளது. பாரதம் மற்றும் இந்தோனேஷியா பொது கடல் மட்டுமல்ல, பொது வரலாற்றையும் பகிர்கின்றோம் என பிரதமர் மோடி அவர்கள் பாரம்பரிய தொடர்புகளை வலியுறுத்தினார்.
அடுத்து பாரத பிரதமர் ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்தார், அங்கே அவர் ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் கோயில்களில் இருந்து திருடப்பட்டு சர்வதேச கருப்புச் சந்தையில் விற்கப்பட்ட, மூன்று 12ஆம் நூற்றாண்டு சாமி சிற்பங்களை மீட்டார். இந்த மூன்று சிலைகளின் மதிப்பு பல கோடி ரூபாயாகும். பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் (Mutual Legal Assistance Treaty – MLAT) அடிப்படையில் ஆஸ்திரேலியா இந்த மூன்று கடவுள் சிலைகளை பாரத நாட்டிற்கு திருப்பி கொடுக்க ஒப்புக்கொண்டது.
பாரத பண்பாடு, “சர்வே சுகினோ பவந்து” என்ற கோட்பாட்டில் எல்லோரும் சுகமாக இருக்கட்டும் என்ற உலக நன்மையை வேண்டி பயணிக்கும் நாகரீகமாகும். உலகத்தில் பல நாடுகள் இன்றைக்கு போரிட்டு கொண்டு இருக்கும் இந்த நேரத்தில், பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்து தத்தளிக்கும் நிலையில், உலக அமைதி சீர் குலைந்து வரும் நிலையில், பாரதம் இந்த இந்தோ-−பசிபிக் பயணத்தின் மூலம் நமது பாரதத்திற்கும், இதில் பங்கேற்கும் நாடுகளுக்கும் ஆக்கப்பூர்வமான பொருளாதார, வர்த்தக, பாதுகாப்பு, மதநல்லிணக்கம், நாடுகளுக்கிடையே ஒற்றுமை, கலாச்சார சீரமைப்பு போன்றவை மக்களுக்கும், நாடுகளுக்கும் பயனளிக்கும் முயற்சியை எடுத்துள்ளது பாராட்டத்தக்கது.
நாற்பது வருடங்களுக்கு பிறகு நியூஸிலாந்துக்கு சென்ற பாரத பிரதமர், அங்கு நியூஸிலாந்து பிரதமருடன் உரையாடினார், அதில் இரு நாடு உறவுகளை மேம்பத்துடுவது குறித்தும், 2030ம் ஆண்டிற்குள் வர்த்தகத்தை 35 ஆயிரம் கோடிக்கு உயர்த்த திட்டமிட்டனர். அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நிலையான வர்த்தகத்திற்கான ஒரு முன்மாதிரியாகவும், புத்தாக்கம் மற்றும் செழிப்புக்கான ஒரு தளமாகவும் அமையக்கூடும் என இரண்டு நாடுகளை சேர்ந்த பிரதமர்கள் வலியுறுத்தினர்.

கட்டுரையாளர்: டாக்டர் எம். விஜயா

எழுத்தாளர், வழக்கறிஞர்