இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த கர்நாடக இசை மேடைகளில் தங்களது இசைத் திறமையால் தங்களை நிலைநாட்டிக்கொண்ட பெண் மும்மூர்த்திகளான டி.கே.பட்டம்மாள், எம்.எஸ்.சுப்புலட்சுமியும் எம்.எல்.வசந்தகுமாரி ஆகிய மூவரில் ஒருவர். `கான சரஸ்வதி’ என்றும், `இசைப் பேரரசி’ என்றும் அழைக்கப்பட்ட ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகி டி.கே.பட்டம்மாள்.
`அலமேலு’ என்று அழைக்கப்பட்ட பட்டம்மாள், காஞ்சிபுரம் மாவட்டம் தாமல் என்ற ஊரில், 1919ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் தேதி -தந்தை கிருஷ்ணசுவாமி தீட்சிதர், தாயார் காந்திமதி (ராஜம்மாள்) ஆகியோருக்கு மகளாக பிறந்தார். அவரது தாயார் ஒரு சிறந்த பாடகி. அக்கால வழக்கப்படி, ராஜம்மாள் பொது மேடைகளிலோ அல்லது குடும்ப நண்பர்கள் அல்லது உறவினர்களின் முன்னிலையிலோ பாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனாலும் பட்டம்மாள் தனது 4வது வயதிலேயே, பாடத் தொடங்கினார். அவருடன் பிறந்த மூன்று சகோதரர்கள். டி.கே.ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் இவர்கள் பாடகர்கள். பட்டம்மாளுக்கு, 1939ம் ஆண்டில் ஆர். ஈசுவரன் என்பவருடன் திருமணம் நடந்தது.
பட்டம்மாள் முறையாக கர்நாடக இசையை கற்கவில்லை. எனினும் அவரது தாயாரின் கச்சேரிகளில் பாடல்களைக் கேட்டே, தன் திறமையை வளர்த்துக் கொண்டார். சிறு வயதிலேயே, தனது தந்தை சொல்லிக்கொடுத்த பக்திப் பாடல்களைப் பாடுவார். தெலுங்கு ஆசிரியர் ஒருவரிடம் சிறிது காலம் இசை பயிற்சி எடுத்துக் கொண்டார். 1929ம் ஆண்டு, தனது 10வது வயதில் முதல் முறையாக அகில இந்திய வானொலியில் பாடினார். அந்த பாடலுக்குப் பிறகு தான் டி.கே.பட்டம்மாள் என்ற பேர் பிரபலமானது. அதன் பிறகு, 1932ல் எழும்பூர் மகளிர் மன்றத்தில் தனது முதல் மேடை கச்சேரியை அரங்கேற்றினார். 1933ம் ஆண்டு, பட்டம்மாள் மெட்ராஸ் ரசிக்க ரஞ்சனி சபாவில் ஒரு முழு நேர கச்சேரியை வழங்கினார். பிராமண குடும்பத்திலிருந்து அவ்வாறு கச்சேரி செய்த முதல் பெண்மணி இவரே என்று அறியப்படுகிறார். பின்னர் காங்கிரஸ் கூட்டங்களில் நிறைய தேசபக்த பாடல்களை பாட ஆரம்பித்தார். மகாகவி சுப்பிரமணிய பாரதியின் பாடல்களைத் தமது மேடைக் கச்சேரிகளிலும், திரைப்படங்களிலும் பாடிவந்த இவர், பாபநாசம் சிவன், கோபாலகிருஷ்ண பாரதி மற்றும் முத்துத் தாண்டவர் பாடல்களையும், பதிகங்களையும் பாடி தமிழ் பாடல்களின் சிறப்பை பறைசாற்றினார்.
பட்டம்மாள் நாடு முழுவதும் உள்ள அனைத்து முக்கிய மாநிலங்களில் உள்ள பிரபலமான சபைகள் மற்றும் அரங்குகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அத்துடன் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இலங்கை மற்றும் பிற நாடுகள் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பல இடங்களிலும் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பல வெளிநாட்டைச் சேர்ந்த மாணவர்களும் இவரிடம் இசை பயின்றுள்ளனர். ஜப்பானின் ‘அகிகோ’வை திருவையாற்றில் பாட வைத்திருக்கிறார். பாரத குடியரசின் 50வது ஆண்டைக் குறிக்கும் வகையில், 2000ம் ஆண்டு ஜனவரி 26 அன்று வெளியிடப்பட்ட, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த ‘ஜன கண மன’ காணொளி ஆல்பத்தில் இடம்பெற்ற கலைஞர்களில் பட்டம்மாளும் ஒருவர். பட்டம்மாள் 2009ம் ஆண்டு, ஜூலை மாதம் 16ம் தேதி சென்னையில் காலமானார். அவருக்கு சிவகுமார், லட்சுமண குமார் என்ற இரு மகன்கள் உள்ளனர். பிரபல கர்நாடக இசைபாடகி நித்யஸ்ரீ மகாதேவன் இவரது பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.