சங்கப்பணி மூலம் நாத்திகரான தந்தையின் மனதை மாற்றிய இராஜேந்திரன் ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும், அசாதாரமானவர்களாக மாற்றுகிறது அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி, எளிய வாழ்க்கை வாழ்ந்து, சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, இராஜேந்திரன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகில் உள்ள மேட்டுத்தெரு என்ற கிராமத்தில், 1959 ஆம் ஆண்டு மே 11ல், இராஜமாணிக்கம் – மங்களம் தம்பதியினருக்கு கடைசி மகனாகப் பிறந்தார், இராஜேந்திரன் ஜி. அவருடன் பிறந்தவர்கள் ஐந்து சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி. பள்ளிப்படிப்பு முடித்தவுடன் கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் பி.யு.சி, அதன்பிறகு பி.எஸ்.சி வேதியியல் பட்டப்படிப்பு படித்தார். மூத்த சகோதரர் கௌதமன் இரண்டு ஆண்டுகள் விசுவ ஹிந்து பரிஷத்தில் இருந்தபோது, சங்கம் அறிமுகம் கிடைத்தது.
1977ல், அப்போதைய பிராந்த பௌத்திக் பிரமுக்காக இருந்த இராம கோபாலன் ஜி நிகழ்ச்சிக்கு வந்தார், அவரது உரையை கேட்டு சங்கத்தைப் பற்றிய புரிதல் ஏற்பட்டது. அதன்பிறகு கல்லூரி விடுதியில் தங்கி படித்தபோது, கும்பகோணம் காவிரி ஆற்றங்கரையில் உள்ள டபீர் படித்துறை ஷாகாவிற்கு செல்வார். 1980ல், கல்லூரிப்படிப்பு நிறைவு பெற்றதும், கும்பகோணத்தில் நடைபெற்ற பிராத்தமிக் 7 நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டார். அப்பா நாத்திகர். அவருக்கு ஆர்.எஸ்.எஸ் பிடிக்காது. எனவே அம்மாவிடம் மட்டும் கூறிவிட்டு, முகாமில் கலந்து கொண்டார்.
பிறகு கபிஸ்தலத்தில் ஷாகா ஆரம்பித்தார், ஜில்லா பிரச்சாரக் எம்.என். சுந்தர் ஜி, ஜில்லா காரியவாஹ் ராமரத்தினம் ஜி வருவார்கள். 1981ல், தூத்துக்குடி ஸ்பிக் நிறுவனத்தில் வேலை கிடைத்தது, அங்கே சேர்ந்து ஒரு வாரம் கழித்து தூத்துக்குடி ஜில்லா பிரச்சாரக் சண்முக சுடலையாண்டி ஜி, கன்னியாகுமரி கோட்ட பிரச்சாரக் பாஸ்கர்ராவ் ஜி வந்தனர். ஆச்சரியமாக இருந்தது, நான் இங்கு இருப்பது எப்படி தெரியும் என இராஜேந்திரன் ஜி வினவிய போது, எம்.என்.சுந்தர் ஜி கடிதம் எழுதியதாக கூறினார்கள்.
மாணவ – மாணவியர்கள் கல்வி வளர்ச்சிக்காக, 1983ல் “ஹிந்து ஏழை மாணவர் கல்வி வளர்ச்சி கழகம்” தொடங்கி, இன்று வரை நன்றாக நடைபெற்று வருகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவி பெற்றுள்ளனர். 1986ல், தூத்துக்குடியில் நடைபெற்ற முதலாம் ஆண்டு சங்கப்பயிற்சி முடித்தவுடன், தூத்துக்குடி தாலுகா பௌத்திக் ப்ரமுக் என்ற பொறுப்பு கொடுக்கப்பட்டது. 1987ல், ஆந்திர மாநிலத்தில் உள்ள தெனாலியில் இரண்டாம் ஆண்டு சங்கப்பயிற்சி முகாம் நிறைவு செய்தார்.
1987 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ல், இல கணேசன்ஜி மற்றும் தனுசுஜியின் அளப்பரிய முயற்சியால், சங்க குடும்பத்தைச் சேர்ந்த வள்ளிநாயகி அம்மாளுடன், திருமணம் நடந்தது. அவருடைய துணையோடு தான், சங்கப்பணியை செய்து வருகிறார். மனைவி சமிதி பொறுப்பில் உள்ளார். இவர்களுக்கு கேசவ், மாதவ் என்ற இரண்டு மகன்கள்.
1987 டிசம்பர் 24ல், அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் காலமானதால், தமிழகமே ஸ்தம்பித்தது, போக்குவரத்து சுத்தமாகவே இல்லை. பல ஜில்லாக்களில் பிராத்தமிக் சிக்ஷண வர்க நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. தூத்துக்குடி ஜில்லா ஆறுமுகநேரியில் திட்டமிட்டபடி நடக்கும் என முடிவு செய்யப்பட்டது. ஜில்லா பிரச்சாரக் விநாயகன்ஜி சைக்கிளில் காய்கறி மூட்டையுடன் ஆறுமுகநேரி சென்றார். பல ஊர்களில் இருந்து, ஸ்வயம்சேவகர்கள் பயிற்சிக்காக சைக்கிளில் வந்தனர்.
1988 ஆம் ஆண்டு, நாகபுரியில் மூன்றாம் ஆண்டு பயிற்சி நிறைவு செய்த இராஜேந்திரன் ஜி, தூத்துக்குடி ஜில்லா கார்யவாஹ் ஆனார். டாக்டர் ஜி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அப்போதைய இந்து முன்னணி மாநில தலைவர் தாணுலிங்க நாடார்ஜி, விஸ்தாரக்காக இருந்தார். ஏரல் பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, தாணுலிங்க நாடார்ஜி மேடையிலேயே மாரடைப்பால் காலமானார். அவருடைய மரணமானது மிகவும் தியாகமயமானதாக இருந்தது.
1990 ஆம் ஆண்டு, தடையை மீறி அயோத்தியில் கரசேவை நடந்தது, சங்கம் தடை செய்யப்பட்டது. அதனால் இராஜேந்திரன் ஜி தலைமறைவாக இருந்தார். ஒருநாள் இரவு 3 மணிக்கு, வேனில் போலீசார் வந்து, வீட்டில் இருந்த தந்தையை அழைத்து செல்ல முற்பட்டனர். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்த தந்தையாரை பார்த்த போலீசார், காலையில் உங்களுடைய மகனை காவல் நிலையத்திற்கு அனுப்புங்கள் எனக்கூறி சென்று விட்டனர். காலையில் வீட்டுக்கு வந்த பொழுது, சங்கம் தடை செய்யப்பட்டது என்றால், போராடி ஜெயிலுக்குதானே போக வேண்டும், ஏன் இப்படி தலைமறைவாக இருக்கிறாய்? என்று கூறினார். அதனை கேட்ட இராஜேந்திரன் ஜி, மிகவும் அதிர்ச்சியடைந்தார். நாத்திகராய் இருந்து சங்கத்தை எதிர்த்த தந்தை, தற்போது சங்கத்திற்காக ஜெயிலுக்குக்கூட போகலாம் என்ற எண்ணம் வந்தது, அவருக்கு மிகவும் ஆச்சரியம் அளித்தது.
1992ல், தாமிரபரணி ஆற்றில் கடுமையாக வெள்ளம், கரையோர கிராம வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு ஆத்தூர் கிராமத்தில், முன்பு சங்க நிகழ்ச்சி நடந்தபோது, சில தி.க.வினர், சங்க காரியகர்த்தர்கள் சிலரை தாக்கினர். அதே நபர்கள் ஸ்வயம்சேவகர்கள் செய்த நிவாரணப்பணியை கண்டு, மனம்மாறி சங்க காரியகர்த்தர்களை பாராட்டினர். எந்தவித விளம்பரமும் செய்யாமல், தேவையான நிவாரண உதவிகளை செய்த ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை மக்கள் பெரிதும் பாராட்டினர்.
1995ல், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கொடியங்குளம் என்ற கிராமத்தில் ஏற்பட்ட ஜாதி கலவரத்தை கட்டுப்படுத்த வந்தவர்கள், பட்டியலின மக்கள் வாழக்கூடிய வீடுகளுக்குள் புகுந்து, பொருட்களை சேதப்படுத்தி மக்களை கடுமையாகத் தாக்கி, பாரபட்சமாக நடந்து கொண்டனர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, சங்க காரியகர்தர்கள் ஆறுதல் கூறினார்கள்.
பிராந்த பௌத்திக் ப்ரமுக், பிறகு தென்தமிழக சேவா பிரமுக், குடும்ப ப்ரபோதன் ப்ரமுக் பொறுப்பில் இருந்தார். 2017ல், ஸ்பிக் நிறுவனத்தில் பணிஓய்வு பெற்றதும், தென் தமிழகத்தின் ஸாமாஜிக் ஸத்பாவ் ப்ரமுக் பொறுப்பில் இருந்தார். தற்போது ஓசூரில் வசித்து, வட தமிழகத்தின் தர்மஜாகரன் மாநிலக் குழுவில் உள்ளார். சங்க வேலையை வாழ்நாள் முழுவதும் செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் வாழும் இராஜேந்திரன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.

 

அ. ஓம்பிரகாஷ்