உலக சந்தையை சார்ந்திருந்த பாரதம், இன்று அதையே வழிநடத்தும் சக்தியாக உயர்ந்து வருகிறது. உலகின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இரண்டு முக்கிய துறைகள் – செமிகண்டக்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ). இந்த இரண்டிலும் வலிமை பெறும் நாடுகளே, அடுத்த தலைமுறை உலக பொருளாதாரத்தின் தலைவர்களாக மாறப்போகின்றன. அந்தப்போட்டியில் இன்று பாரதம் வேகமாக முன்னேறி, உலக சக்திகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பல ஆண்டுகளாக அமெரிக்கா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் ஏ.ஐ ஆராய்ச்சியில் ஆதிக்கம் செலுத்தின. உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், இவர்களது ஆதிக்கத்தை மையமாகக் கொண்டு இயங்கின. ஆனால் இப்போது அந்த சமநிலை மாறத் தொடங்கியுள்ளது. பாரதம் தனது நீண்டகால தொழில்நுட்பக் கனவை நனவாக்கும் கட்டத்தை எட்டியுள்ளது.
ரூ.1.64 லட்சம் கோடி முதலீட்டில், 12 செமிகண்டக்டர் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பது, பாரதத்தின் தொழில்நுட்ப வரலாற்றில் ஒரு திருப்புமுனை. இதுவரை வெளிநாடுகளிலிருந்து சிப்புகளை இறக்குமதி செய்து வந்த பாரதம், இன்று உற்பத்தி, சோதனை, பேக்கேஜிங், வடிவமைப்பு ஆகிய அனைத்தையும் உள்நாட்டிலேயே செய்யும் திறனை உருவாக்குகிறது. இது வெறும் தன்னிறைவு அல்ல; உலகளாவிய சிப் விநியோகச் சங்கிலியில் பாரதத்தை ஒரு முக்கிய மையமாக மாற்றும் முன்னேற்றம்.
அதேபோல், செயற்கை நுண்ணறிவு துறையிலும் பாரதம் வலுவான அடித்தளத்தை அமைத்து வருகிறது. இந்தியா ஏ.ஐ மிஷன் மூலம் ரூ.10,372 கோடி முதலீட்டில் 45,000 GPU-கள், 12,500 தரவுத்தொகுப்புகள் மற்றும் 307 ஏ.ஐ மாதிரிகள் உருவாக்கப்படுகின்றன. இது உலகளவில் மிகப்பெரிய ஏ.ஐ கட்டமைப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பாரதம் தனது சொந்த ஏ.ஐ தொழில்நுட்பங்களை உருவாக்கி, உலக சந்தைகளுக்கு வழங்கும் திறனை பெறுகிறது.
இந்த வளர்ச்சி வெறும் தொழில்நுட்ப வெற்றியாக மட்டும் பார்க்க முடியாது. இது பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு, வேலைவாய்ப்பு மற்றும் உலக அரசியலில் பாரதத்தின் செல்வாக்கை உயர்த்தும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக மாறுகிறது. ஆயிரக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். புதிய ஆராய்ச்சி மையங்கள் உருவாகும். உலக தரத்தில் இளைஞர்கள் புதுமைகளை உருவாக்கும் வாய்ப்புகள் பெருகும்.
கல்வி, மருத்துவம், விவசாயம், பாதுகாப்பு, விண்வெளி என ஒவ்வொரு துறையிலும் இந்த தொழில்நுட்பப் புரட்சி நேரடி மாற்றத்தை உருவாக்கும். நோய்களை விரைவில் கண்டறியும் ஏ.ஐ, விவசாயத்தில் உற்பத்தியை அதிகரிக்கும் சிப் தொழில்நுட்பம், பாதுகாப்புத் துறையில் மேம்பட்ட கண்காணிப்பு, விண்வெளியில் புதிய ஆராய்ச்சிகள் என இவை அனைத்தும் பாரதத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன.
உலகம் இப்போது பாரதத்தை வெறும் நுகர்வோர் சந்தையாக பார்க்கவில்லை; எதிர்கால தொழில்நுட்பத்தின் உற்பத்தி மையமாக பார்க்கத் தொடங்கியுள்ளது. வரவிருக்கும் தசாப்தங்களில், உலக தொழில்நுட்பத்தின் இதயத் துடிப்பாக மாறக்கூடிய சக்தி பாரதத்திடம் உள்ளது.
கட்டுரையாளர்: சமூக ஆர்வலர்