பாரதத்தில் பல நதிகள் உரிய பராமரிப்பு இல்லாததால், கால ஓட்டத்தில் பயனற்றுப் போய்விட்டன. நதிகள் தூய்மையாக பராமரிக்கப்பட்டால்தான் விவசாயம் அபிவிருத்தியடையும், மக்களின் ஆரோக்கியமும் மேம்பாடு அடையும்.
பிரதமர் நரேந்திர மோடி நதிகளுக்கு புத்துயிர்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதன் பொருட்டு தொடங்கியுள்ள ‘நமாமி கங்கை திட்டம்’, நாடு முழுவதும் விரும்பதக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
இவ்வருடம் பிப்ரவரி மாத நிலவரப்படி நமாமி கங்கை திட்டத்தின் கீழ், 524 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இதற்காக 43,030 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் 355 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பிஹார், ஜார்கண்ட், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்கள் இதனால் பயனடைந்துள்ளன.
2013- − 2014ல், உத்தரகாண்ட்டில் உள்ள ஹரித்துவாரில் கங்கை நதியின் தரம் நான்காவது வகைப்பாட்டின் கீழ் இருந்தது. இது மிகவும் மோசமான நிலையாகும். தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, இப்போது ரிஷிகேஷ் முதலாவது தர நிலைக்கு உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்திலுள்ள அசம்கர் மாவட்டத்தில் தம்சா ஆறு பாய்ந்தோடியது, இது கங்கையின் துணை நதியாகும். அம்பேத்கர் நகர், அயோத்தி, அசம்கர் ஆகிய மாவட்டங்கள் தம்சா நதியின் சீரழிவால் பெரிதும் பாதிக்கப்பட்டன.
அசம்கர் மாவட்டத்தில் 89 கீ.மீ தொலைவிற்கு, 111 கிராம பஞ்சாயத்துகளை கடந்து செல்லும் இந்த நதியை புனரமைக்க முடிவு செய்யப்பட்டது. இது அரசின் உத்தரவுபடி, அதிகாரிகளால் நிறைவேற்றப்படவில்லை. இந்த 111 கிராம பஞ்சாயத்துகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், மாணவர்கள், தன்னார்வலர்கள் முழு வீச்சில் ஈடுபட்டதால், குறுகிய காலத்திலேயே நதி புனரமைப்பு சாத்தியமாகிவிட்டது,
நதி நீரை மாசுபடுத்துவதில் ஆகாயத்தாமரைக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில்தான் ஆகாயதாமரை பிரச்சினை இருக்கிறது என்று முடிவு கட்டிவிட கூடாது. உத்தரகாண்ட் முதல் தமிழ்நாடு
வரை பல்வேறு மாநிலங்களிலும் ஆகாயத்தாமரை பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
பிஹாரில் பாயா நதி மீட்டெடுக்கப்பட்டு, ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப்
பிறகு மக்கள் இதை தங்களது தேவைகளுக்காக பயன்படுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் தண்ணீர் தூய்மையாய் இருப்பதால், விவசாயிகளும் பயனடைந்துள்ளனர்.
இந்தப் பகுதி பல ஆண்டுகளுக்கு முன் பசுமை நிறைந்த பூமியாக விளங்கி வந்தது. இடையில், பாயா நதி பயன்பாட்டை இழந்துவிட்டதால் இப்பகுதியில் விவசாயம் வீழ்ச்சி அடைந்துவிட்டது. நதியை நம்
வாழ்வின் ஓர் அங்கமாக மக்கள்
கருத வேண்டும். இந்த உணர்வு அனைவரிடமும் மேலோங்கி இருந்தால் நதியை மாசு படுத்தும் எண்ணம் மேலோங்காது.
பிரதமர் நரேந்திர மோடி தூய்மையான பாரதத்தை, தூய்மையான நதிகளை உறுதிப்படுத்த தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்,
எந்த திட்டமாக இருந்தாலும் மக்களின் பங்களிப்பு இருந்தால்தான் வெற்றிகரமாக நிறைவேறும். பாயா நதி மீட்டெடுக்கப்பட்டதைப்போல பாரதம் முழுவதும் பல்வேறு ஆறுகளை மீட்டெடுக்க தொடர்ந்து பல்வேறு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய முயற்சிகளுக்கு தன்னார்வலர்களின் பங்கேற்பு ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது
பாரதம் முழுவதும் நதிகளை தூய்மைப்படுத்த வேண்டும் என்ற உணர்வு இளம்தலை முறையினரிடையே அதிகரித்து வருகிறது. கங்கைகரை மாநிலங்களில் மட்டுமல்லாமல், மற்ற நதிகளின் கரைகளில் வாழ்ந்து வருபவரிடையேயும் இத்தகைய மனோபாவம் மேலோங்கி உள்ளது.
மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஈடுக்கொடுக்கும் வகையில், விவசாய உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். இதை கருத்தில் கொண்டு, உணவு தானிய உற்பத்தியை பெருக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பாரதம், பசுமை பூமியாக தொடர்ந்து விளங்க, விவசாயம்தான் அடிப்படை. விவசாயத்தை செழுமைப்படுத்த தூய்மையான நதிகள் பெரிதும் உதவுகின்றன.
மாசற்ற ஆறுகளும், சுற்றுச்சூழல் தூய்மையும், உணவு உற்பத்தி பெருக்கமும் ஒன்றொடொன்று நெருங்கியத் தொடர்பு கொண்டவை. எனவே இவை அனைத்துக்கும் உரிய முக்கியத்துவத்தை அளிக்கத் தவறக்கூடாது.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி