தேசியத்தை வலுப்படுத்தும் வகையில் புத்தகங்கள் வெளியிடும் விஜயபாரதம் பிரசுரம்

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை தேசியக் கருத்தாக்கம் கொண்ட நூல்கள் வெளியிட்டு வரும் ‘விஜயபாரதம் பிரசுரம்’ பற்றி அறிவோம்…

 

‘எழுத்தாளர்கள் இன்று சிந்திப்பதே நாளைய உலகின் எதிர்காலமாக இருக்கிறது’ என்று கூறப்படுவதுண்டு. ‘பேனாவின் முனை வாளின் முனையை விடக் கூர்மையானது’ என்றும் கேட்டிருக்கிறோம். காலத்தை முந்தி நின்று சிந்திக்கும் எழுத்தாளர்கள் தான் புதிய உலகிற்கான திசைகளைக் காட்டுகின்றனர்.
தமிழகத்தில் ஆரம்பத்தில், 1980ல் பெரம்பூரில் “ஜனசேவா பதிப்பகம்”, “கேசவர் பதிப்பகம்” ஆகிய பெயர்களில் நூல்கள் வெளியிடப்பட்டு வந்தன. அதற்கு முன் “தேசிய சிந்தனைக் கழகம்” என்ற பெயரில் தேசியக் கருத்தாக்கம் கொண்ட நூல்கள் பல வெளியிடப்பட்டுள்ளன.
சித்தாந்த ரீதியாகவும், தேசியத்தை வலுப்படுத்தும் வகையிலும், அதிக அளவில் நூல்களை வெளியிட வேண்டியதன் தேவை 1990களில் உணரப்பட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் பிரசாரத்துறை (பிரஸார்) சங்கத்தில் 1995ல் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நூல் வெளியீடுகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.
1990 முதல் 2019 வரை, “சக்தி புத்தக நிலையம்”, “சக்தி பதிப்பகம்”, “விஜயபாரதம் பதிப்பகம்”, “சென்னை மீடியா சென்டர்” ஆகிய பெயர்களில் நூற்றுக் கணக்கான நூல்கள் வெளியிடப்பட்டன. மேலும், சங்கத்தின் துணை அமைப்புகளும், கல்வி அமைப்புகளும் தேவையான பல நூல்களை வெளியிட்டு வந்தன.
இந்த நிலையில்தான், முழுமையான பதிப்பகத்தின் தேவையை உணர்ந்து, 2019ல் சென்னை, சேத்துப்பட்டில் விஜயபாரதம் பிரசுரம் தொடங்கப்பட்டது. இதுவரை 250க்கும் மேற்பட்ட தலைப்புகளில் நூல்களை வெளியிட்டிருக்கிறது.
கருத்தாக்கமே அறிவுலகின் ஆயுதம்
இன்றைய நவீன உலகில் கருத்தாக்கங்களே பிரதான ஆயுதங்களாக மாறியுள்ளன. கருத்தாக்கங்கள் (Narratives) மூலமாக எந்த ஒரு நாட்டையும் வலுப்படுத்த முடியும்; பலவீனப்படுத்தவும் முடியும். எனவேதான், பல்வேறு நாடுகளில் எதிர்மறைக் கருத்தாக்கங்களை வல்லரசு நாடுகள் முன்னெடுக்கின்றன. மேற்கத்திய சிந்தனைகளான முதலாளித்துவம், உலகாயத வாதம், கிறிஸ்தவ விடுதலை இறையியல், உலகளாவிய வஹாபியிஸம் ஆகியவை தங்கள் கருத்துச் செல்வாக்கால் உலகை ஆள முற்படுகின்றன. இந்த சிந்தனைத் தளங்களின் கருத்து மோதல்களே உயிர் குடிக்கும் போர்களாகவும், பயங்கரவாதத் தாக்குதல்களாகவும் உருவெடுப்பதை நாம் காண்கிறோம்.
இந்தக் கருத்தாக்கங்களை உலக நாடுகளில் செயல்படுத்த பல நன்கொடையாளர்கள் (உ.ம்: ஜார்ஜ் சோர்ஸ், ஃபோர்டு ஃபவுண்டேஷன்) பல்லாயிரம் கோடி டாலர்களைச் செலவிடுகின்றனர். ராபர்ட் முர்டோக் போன்ற ஊடகப் பெருந்தலைகள், தனிப்பட்ட நோக்கங்களுடன் கோணலான கருத்தாக்கங்களுடன், பிரம்மாண்டமான ஊடகங்களை நடத்துகின்றனர். நமது நாட்டிலும் கோணல் புத்தியுடன் செயல்படும், இடதுசாரி சிந்தனையுடன் கூடிய ஊடகங்களை நாம் அறிவோம்.
வெளிநாடுகளில் இருந்து ஆராய்ச்சி நிதியுதவி, சேவைக்கு உதவி, கல்விக்கு உதவி, தன்னார்வலர்களுக்கு உதவி என்ற பெயர்களில் இவ்வாறு பல கோடி ரூபாய் நமது தேசத்திற்குள்ளும் பாய்கிறது. அவை, பாரத ஒருமைப்பாட்டிற்கு எதிரான சிந்தனைகளையும் கருத்தாக்கங்களையும் பரப்பவும், மக்களிடையே நிலவும் இணக்கமான பிணைப்பைக் கெடுக்கவும் பயன்படுகின்றன. ஒரு நாட்டின் அறிவுலகத்தைக் குழப்பத்தில் ஆழ்த்தி விட்டால், அந்த நாட்டை மறைமுகமாக ஆக்கிரமித்து விடலாம் என்பதே இவர்களின் அடிப்படை பாலபாடம்.
தமிழகத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஆரிய – திராவிட இனவாதம், பிராமண வெறுப்பு, ஹிந்தி எதிர்ப்பு, பிரிவினைவாத கருத்துகள் போன்ற கருத்தாக்கங்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் விதைக்கப்பட்டவையே. அதன் தீய விளைவுகளை இன்றும் நாம் அனுபவித்து வருகிறோம்.
அண்மைக்காலமாக தேசமெங்கும் பரவலாக அறியப்படும் ‘அர்பன் நக்ஸல், ‘ஒக்கேயிஸம்’ போன்ற சொற்கள், இடதுசாரி சிந்தனையின் அராஜக விளைவுகள், மஹாராஷ்டிர மாநிலம், பீமா கோரேகானில் 2018ல் நடத்தப்பட்ட கலவரம், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகளாகத் தொடரும் அமைதியின்மை ஆகியவற்றை, மனம் சீரழிந்த அறிவுலகின் விளைவாகவே கொள்ள வேண்டும்.
எனவே தான், எதிர்மறைச் சிந்தனைகளுக்கு (Negative Narratives) எதிராக, நாட்டு மக்களை ஒன்றிணைக்கும், தேசத்தை வலுப்படுத்தும் நேர்மறையான கருத்தாக்கங்களை (Positive Narratives) பதிவு செய்ய வேண்டி இருக்கிறது. இந்த இடத்தில்தான், தேசநலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்படும் ஊடகங்கள், பதிப்பகங்களின் தேவை இன்றியமையாததாகிறது. எனவே தான், எதிர்மறைச் சிந்தனைகளுக்கு (Negative Narratives) எதிராக, நாட்டு மக்களை ஒன்றிணைக்கும், தேசத்தை வலுப்படுத்தும் நேர்மறையான கருத்தாக்கங்களை (Positive Narratives) பதிவு செய்ய வேண்டி இருக்கிறது.
இந்தத் திசையில் தான் ‘விஜயபாரதம் பிரசுரம்’ இயங்கி வருகிறது; 2019ல், முறைப்படியான நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்ட ‘விஜயபாரதம் பிரசுரம்’ நேர்த்தியான பல நூல்களை சிறப்பாக வெளியிட்டு வருகிறது. முந்தைய பதிப்புலக அனுபவங்களுடன், நவீனத் தொழில்நுட்ப உதவியுடன், தற்காலத்துக்குத் தேவையான நூல்களை நேர்த்தியாக வெளியிட்டு வருகிறது.
அச்சுப் புத்தகங்களின் அடுத்தகட்ட மின்-புத்தகங்களை (E-Books) வெளியிடுவதிலும் பிரசுரம் தற்போது கவனம் செலுத்தி வருகிறது. இதுவரை வெளியான சங்க வெளியீடுகள் அனைத்தையும் மின்னூலாக்கவும், தேவையானவற்றை மீண்டும் வெளியிடவும் திட்டமிட்டு விஜயபாரதம் பிரசுரம் செயல்படுகிறது. மேலும் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் விஜயபாரதம் பிரசுரம் பங்கேற்று, மக்களிடையே நேரடியாக தமது நூல்களைக் கொண்டு சேர்க்கும் பணியினை செவ்வனே செய்து வருகிறது.
தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தும் தமிழ் இலக்கியங்கள், இளைஞர்களுக்கு உதவும் எதிர்கால வழிகாட்டி நூல்கள், மகளிர் மேம்பாட்டை உறுதிப்படுத்தும் நூல்கள், குழந்தைகளைப் படிக்கத் தூண்டும் களஞ்சியங்கள், முக்கியமான நூல்களின் மொழி பெயர்ப்புகள் ஆகியவற்றை வெளியிட்டு, தொலைநோக்குத் திட்டங்களுடன் ‘விஜயபாரதம் பிரசுரம்’ இயங்கி வருகிறது. நேர்மறைக் கருத்தாக்கங்கள் கொண்ட நூல்களை ஆண்டுதோறும் வெளியிட வேண்டும் என்பது இதன் திட்டம்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நூற்றாண்டை முன்னிட்டு, ஐம்பெரும் மாற்றங்கள் என்று கூறப்படும் – குடிமக்களின் கடமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம், குடும்ப நலம், சிந்தனையிலும் செயலிலும் சுதேசித் தன்மை ஆகிய பஞ்ச பரிவர்த்தன் செயல்முறையை ஒட்டி புதிய நூல்களை வெளியிட்டது, 2025ம் ஆண்டின் சிறப்பு அம்சமாகும்.
வாசகர்களின் பூரண ஒத்துழைப்போடு விஜயபாரதம் பிரசுரம் தனது அறிவுலகப் பயணத்தில் திட்டமிட்ட இலக்குகளை நோக்கி தொடந்து முன்னேறுகிறது. நமது பிரசுரத்துடன் இணைந்து பணியாற்றும் பல எழுத்தாளர்கள் சமுதாய நலன், பண்பாட்டு விழுமியங்கள், தேச ஒருமைப்பாடு ஆகிய கருத்துகளை தங்கள் எழுத்துகளால் தமிழ் பதிப்புத்துறையில் பதியமிட்டு, நமக்கு கலங்கரை விளக்கமாக வழிகாட்டி வருகின்றனர்.
விருது வழங்கி கௌரவம்
தமிழில் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் நிகழ்வை, 2024ஆம் ஆண்டு முதல் தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி விஜயபாரதம் பிரசுரம் தொடர்ந்து நடத்தி வருகிறது. முதல் ஆண்டு விழாவில் (2024) இரு எழுத்தாளர்களும், இரண்டாம் ஆண்டு விழாவில் (2025) நான்கு எழுத்தாளர்களும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த ஆண்டு மூன்றாம் ஆண்டு விழாவில் (2026) நான்கு எழுத்தாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
தமிழால் இணைவோம்; பாரதத்தின் ஒருமைப்பாட்டுக்கு தமிழால் பாலம் அமைப்போம்; புத்தம் புதிய நூல்களால் இதனை நாம் சாத்தியமாக்குவோம் – இதுவே விஜயபாரதம் பிரசுரத்தின் பிரகடனம்.
விஜயபாரதம் பிரசுரத்தின் திட்டங்கள்
நூலுக்கும், வாசகருக்கும் இணைப்புப் பாலமாக ஆண்டு உறுப்பினர் திட்டத்தை (விஜயபாரதம் புஸ்தகம் உறுப்பினர் திட்டம்), கடந்த சில வருடங்களாக விஜயபாரதம் பிரசுரம் நடைமுறைப்படுத்தி வருகிறது. ஆண்டுக்கு ரூ. 2,000 செலுத்தும் உறுப்பினரின் இல்லம் தேடி, ஓராண்டில் வெளியாகும். (சந்தாதாரர் செலுத்திய தொகைக்கு மேற்பட்ட மதிப்புடன் கூடிய) அனைத்து நூல்களும் அனுப்பி வைக்கப்படுவதே இத்திட்டத்தின் சிறப்பு.
இந்த திட்டத்தில் இணையும் உறுப்பினர்களின் காலம் 1 ஆண்டு வரை இருக்கும், உறுப்பினர் காலம் நிறைவு பெரும் சமயத்தில் மீண்டும் உறுப்பினர் தொகை செலுத்தி, அடுத்த 1 ஆண்டு திட்டத்தில் உறுப்பினராக புதுப்பித்துக் கொள்ளலாம். திட்டத்தில் முதன்முறையாக இணையும் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரசுரத்தின் சில முந்தைய புத்தக வெளியீடுகள் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும். (1 ஆண்டு திட்டத்தில் இணைவோருக்கு ரூ. 300 மதிப்புள்ள புத்தகங்கள் பரிசுத் தொகுப்பாக அனுப்பி வைக்கப்படும்)
பிரசுரம் வெளியிடும் புத்தகங்களின் கூடுதல் பிரதிகளை வேண்டும் உறுப்பினர்கள் அவற்றை சிறப்புத் தள்ளுபடி விலையில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் உறுப்பினர்களுக்கு சிறப்பு வாய்ப்பாக, தாங்கள் விரும்பும் நண்பர்களுக்கு, பிரசுரத்தின் புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும். (புத்தக விலை மட்டும் செலுத்தினால் போதும், தபால் செலவு இலவசம்).

 

புத்தகங்களை ஆன்லைனில் வாங்க: –

Home


மின்-புத்தகங்கள் (E-Books) வாங்க: –
https://vbooks.in
தொடர்புக்கு (வாட்சப் எண்):
89391 49466
கட்டுரையாளர்: எழுத்தாளர்