மேற்கு வங்காளத் தேர்தல் முடிவுகள் நாடு முழுவதையும் ஆச்சரியத்திலும், மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளன. 2025 டிசம்பர் மற்றும் 2026 பிப்ரவரி மாதங்களில், மேற்கு வங்காளத்துக்குச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அங்குள்ள பெரும்பாலான மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள். ஆனால் அந்த மாற்றம் உண்மையில் சாத்தியமாகும் என்று நம்பியவர்கள் மிகவும் குறைவு, நிலைமை அப்படியிருந்தது, அந்தச் சூழலில் மாற்றம் என்பது கிட்டத்தட்ட ஒரு அதிசயமாகவே இருந்தது.
சுதந்திரமாகவும், அச்சமின்றியும் மக்கள் வாக்களிக்கக்கூடிய சூழலை உருவாக்குவதே, மிகப்பெரிய சவாலாக இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் பாதுகாப்புப் படைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியால், அது சாத்தியமானது.
இந்த முறை வங்காள மக்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்களித்தனர். 2001, 2006, 2011, 2016 மற்றும் 2021 ஆகிய ஐந்து தேர்தல்களில் சராசரி வாக்குப்பதிவு 79.22 சதவீதமாக இருந்த நிலையில், 2026ல், அது 92.47 சதவீதமாக உயர்ந்தது. கிட்டத்தட்ட 13 சதவீத உயர்விற்கு, எஸ்.ஐ.ஆர் காரணமாக இருந்ததை மறுக்க முடியாது. அதே நேரத்தில், அச்சமற்ற சூழலும் மாற்றத்தின் மீதான மக்களின் ஆழமான விருப்பமும், இந்த உயர்வுக்குப் பின்னுள்ள முக்கிய காரணிகளாகும்.
சமுதாயம் இந்தத் தேர்தலை வெறும் அரசியல் போட்டியாக அல்லாமல், நாகரிகப் போராட்டமாகக் கண்டது. பாதுகாப்புப் படைகள் தங்களுடைய பொறுப்பை திறம்பட நிறைவேற்றியதும், ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கை மக்களிடையே உருவானதும் குறிப்பிடத்தக்கவை.
2026 பிப்ரவரியில், கொல்கத்தாவில் இடதுசாரி சிந்தனைகளைக் கொண்ட மூத்த பெண் பத்திரிகையாளர் ஒருவரை சந்தித்தேன். பின்னர் மே 29ல், மீண்டும் அவருடன் பேசினேன். தனது 18வது வயதில் முதல் முறையாக வாக்களித்த அவர், தற்போது 46 வது வயதில், மீண்டும் வாக்களித்ததாகக் கூறினார். மாற்றத்திற்கான தீவிர விருப்பமும், அது சாத்தியம் என்ற நம்பிக்கையும், மக்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் சென்ற முக்கிய காரணிகளாக இருந்தன.
நீண்ட காலமாக வங்காளத் தேர்தல்கள் வன்முறையுடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்தன. ஆனால் இந்தத் தேர்தல், ஒப்பீட்டளவில் அமைதியானதாக இருந்தது. அதற்கான பாராட்டின் ஒரு பகுதி, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கும் சேரும். அதனால் தான் மக்கள் அச்சமின்றி தைரியமாக வெளியே வந்து வாக்களித்தனர்.
இந்த வெற்றி வெறுமனே பாஜகவின் வெற்றி மட்டுமல்ல, பாரதத்தின் ஆன்மிக மரபும், ஹிந்துத்துவ சிந்தனையும் பெற்ற வெற்றி என்று இதைக் கருதலாம். வங்காளத்தின் ஆன்மா மீண்டும் விழித்தெழுந்துள்ளது போலத் தோன்றுகிறது. இது ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர், பங்கிம் சந்திர சட்டோபாத்யாய், ரவீந்திரநாத் தாகூர், ஜகதீஷ் சந்திரபோஸ், பிபின் சந்திர பால் போன்ற எண்ணற்ற தேசிய மற்றும் ஆன்மிக முன்னோடிகளின் வெற்றியாகும்.
இந்த தருணம் 1905 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் முன்வைத்த வங்காளப் பிரிவினைக்கு எதிராக எழுந்த மகத்தான எதிர்ப்பை நினைவூட்டுகிறது. “வந்தே மாதரம்” என்ற முழக்கத்துடன் வங்காளத்தில் எழுந்த தேசிய உணர்வும், ஒற்றுமையும் அத்தனை வலிமையானதாக இருந்ததால், 1911ல் பிரிட்டிஷ் அரசு தனது பிரிவினைத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. அதுமட்டுமல்லாமல், பாரதத் தலைநகரையும் கொல்கத்தாவிலிருந்து டெல்லிக்குத் மாற்ற வேண்டிய சூழல் உருவானது. அந்தக் கோணத்தில் பார்க்கும்போது, இந்தத் தேர்தல் முடிவுகளை வங்காளத்தின் “வந்தே மாதரம் தருணம்” என்று அழைப்பது பொருத்தமானதாகும்.
“வந்தே மாதரம்” பாடலை 1875ல், பங்கிம் சந்திர சட்டோபாத்யாய் தனது “ஆனந்தமடம்” நாவலுக்காக இயற்றினார். 1896ல், இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் ரவீந்திரநாத் தாகூர் அதை முதல் முறையாகப் பாடினார். பின்னர் 1905 ஆம் ஆண்டு, வங்காளப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தில், அது விடுதலை இயக்கத்தின் மந்திரமாக மாறியது.
பாரதம் வங்காளப் பிரிவினைக்கு எதிராக எழுந்தது. லாலா லஜபத் ராய், பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆகியோர் மக்களின் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர். “வந்தே மாதரம்” என்ற பாடல் மக்களிடம் தேசிய உணர்வையும், அடக்க முடியாத ஆற்றலையும் உருவாக்கியது. எண்ணற்ற புரட்சியாளர்கள் “வந்தே மாதரம்” என முழங்கியபடியே தங்கள் உயிரைத் தியாகம் செய்தனர்.
வழக்கமாக ஷ்ரவண (ஆடி) மாதம் பௌர்ணமியன்று, அதாவது ஆகஸ்டில் ரக்ஷாபந்தன் கொண்டாடப்படும். ஆனால் அக்டோபர் மாதம் 16ல், தங்களது எதிர்ப்பைக் காட்ட நடைபெற்ற ரக்ஷாபந்தன் நிகழ்வு வரலாற்றுச் சிறப்புடையது. அன்றைய தினம் ஹிந்துக்களும், முஸ்லிம்களும் கங்கையில் நீராடி, ஒருவருக்கொருவர் ராக்கி கட்டிக் கொண்டு, “இந்த நூல் நம்மை இணைப்பது போல, வங்காளமும் ஒருபோதும் பிரிக்கப்படக்கூடாது” என்று உறுதியெடுத்தனர்.
“வந்தே மாதரம்” விடுதலை மந்திரம் என்று முதலில் வர்ணித்தவர் ஸ்ரீ அரவிந்தர். தேசிய உணர்வை எழுப்புவதற்காக, “வந்தே மாதரம்” என்ற வார இதழையும் நடத்தினார். 1907ல், ஜெர்மனியில் மேடம் பிகாஜி காமா ஏற்றிய பாரத சுதந்திரக் கொடியில் “வந்தே மாதரம்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இந்தப் பாடலால் உருவான புரட்சிகர எழுச்சியைக் கண்டு அச்சமடைந்த பிரிட்டிஷ் அரசு, 1906ல் பொதுவெளியில் வந்தே மாதரம் பாடலை பாடுவதற்கு தடை விதித்தது. ஆனால் அந்தத் தடை மக்களிடையே இன்னும் அதிக உற்சாகத்தை உருவாக்கியது. இறுதியில் பிரிவினைத் திட்டமே திரும்பப் பெறப்பட்டது.
இந்த எழுச்சி வங்காளத்தில் மட்டுமே நின்றுவிடவில்லை, நாடு முழுவதும் பரவியது. நாக்பூரில் பத்தாம் வகுப்பு மாணவராக இருந்த டாக்டர் ஹெட்கேவார், பொதுவெளியில் “வந்தே மாதரம்” முழங்கியதற்காக பள்ளியிலிருந்து நீக்கப்பட்டார்.
அதன்பிறகு இந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டு மாநாடுகளில் முழுமையான “வந்தே மாதரம்” தொடர்ந்து பாடப்பட்டது. ரவீந்திரநாத் தாகூர், விஷ்ணு திகம்பர் பலுஸ்கர், ஓம்கார்நாத் தாக்கூர் போன்ற இசை மேதைகள் அதைப் பாடினர். ஹிந்து, முஸ்லிம் என அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும், அதை விடுதலைப் போராட்டத்தின் உயிர்மூச்சாக ஏற்றுக்கொண்டனர்.
ஆனால் 1921-க்குப் பிறகு, பிரிட்டிஷ் ஆட்சியின் பிரிவினை அரசியலின் தாக்கத்தால், “வந்தே மாதரம்” மீது எதிர்ப்புகள் எழத் தொடங்கின. 1923-க்குப் பிறகு, அது “மதவாதப் பாடல்” என்று சிலரால் சித்தரிக்கப்பட்டது. இதுவே பாரதப் பிரிவினைக்கான விதைகள் விதைக்கப்பட்ட காலம்.
பாரதியச் சிந்தனையில், மனிதன் வெறும் உடலாகக் கருதப்படுவதில்லை; உடல், உயிர், மனம், புத்தி, ஆன்மா ஆகிய ஐந்து அடுக்குகளைக் கொண்ட முழுமையான இருப்பாகப் பார்க்கப்படுகிறது. அதேபோல “வந்தே மாதரம்” பாரதத்தின் முழுமையான உருவத்தைப் பிரதிபலிக்கிறது. அதன் முதல் சரணம், பாரதிய நிலத்தை வர்ணிக்கிறது; இரண்டாவது சரணம், பாரதிய மக்களைச் சித்தரிக்கிறது; பின்னர் வரும் சரணங்கள், பாரதியர்களின் மனம், புத்தி, உயிர்சக்தி மற்றும் ஆன்மிக உணர்வை வெளிப்படுத்துகின்றன.
“துமி வித்யா, துமி தர்மா” என்று வந்தே மாதரம் பாடல் கூறுகிறது. இங்கே “வித்யா” என்பது, மனிதனை முக்தியின் பாதைக்கு வழிநடத்தும், பாரதத்தின் ஆன்மிக ஞானத்தைக் குறிக்கிறது. “தர்மம்” என்பது மதத்தைக் குறிக்கும் சொல்லல்ல; தனிமனித ‘நான்’ என்ற உணர்வின் ஆதிக்கத்தைக் குறைத்து, ‘நாம்’ என்ற கூட்டுணர்வை விரிவுபடுத்தி, சமூகத்திற்குத் தன்னுடைய பங்களிப்பை உரிமையுடனும், பொறுப்புடனும் திருப்பிக் கொடுக்கும் வாழ்க்கை முறையைக் குறிக்கிறது.
சகோதரி நிவேதிதா இதைப் பற்றி குறிப்பிடுகையில், “மக்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாகத் தங்களுக்காக மட்டுமே வைத்துக்கொள்ளாமல், சமூக நலனுக்காகவும் பகிர்ந்தளிக்கும் போது, அந்தச் சமூகத்தின் சமூக மூலதனம் பெருகுகிறது; அது வளம்பெற்று செழிக்கிறது; அதன் பயனாக ஒவ்வொரு தனிமனிதனும், வளர்ச்சியடைய வாய்ப்பைப் பெறுகிறான்” என்று கூறுகிறார். இதுவே “தர்மம்” ஆகும்.
அந்த அர்த்தத்தில் பார்க்கும்போது, சமூகத்தின் சமூக மூலதனத்தை வளப்படுத்துவதுதான் தர்மம். அதனால்தான் சுதந்திரத்திற்குப் பிறகு, பாரதத் தலைமைகள் “தர்மசக்கரப் பிரவர்த்தனாய” என்ற லட்சியத்தை மக்களவைக்கும், “சத்யம் வத, தர்மம் சர” என்ற கொள்கையை மாநிலங்களவைக்கும், “யதோ தர்மஸ்ததோ ஜய” என்ற கோட்பாட்டை உச்சநீதிமன்றத்திற்கும் ஏற்றுக்கொண்டனர். தேசியக் கொடியிலும், தர்மச் சக்கரம் இடம்பெற்றது. இந்த வித்யாவும், இந்த தர்மமும் பாரத மாதாவின் இதயத்தில் உறைகின்றன; அவையே பாரதத்தின் உயிர்ச் சக்தி என்று கருதப்படுகிறது.
பாரதமாதா என்பது சக்தியின் வடிவமான துர்கை, செல்வத்தின் வடிவான லட்சுமி, ஞானத்தின் வடிவான சரஸ்வதி ஆகிய மூன்று தெய்வீக சக்திகளின் ஒருங்கிணைந்த உருவம். இதுவே பாரதத்தின் ஆன்மிகக் கண்ணோட்டம். அதனால்தான் 1905 முதல், இந்திய தேசிய காங்கிரஸின் ஆண்டு மாநாடுகளில், வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்பட்டு வந்தது. முழுப் பாடலையும் பாடுவதற்கு சுமார் 3 நிமிடங்கள் மட்டுமே ஆகும், இத்தகைய கண்ணோட்டத்தில் மதவாதம் எங்கே இருக்கிறது? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.
ஆனால் பின்னாளில், பிரிவினை மற்றும் மத அடிப்படையிலான அரசியலின் தாக்கத்தால், வந்தேமாதரம் பாடலுக்கு எதிரான குரல்கள் உருவாகத் தொடங்கின. பல வடிவங்களில் வெளிப்பட்ட அந்தப் போக்கு இன்றும் தொடர்கிறது. இதில் மதவாதத்தைக் காண்பவர்கள், பாரதத்தின் ஆன்மிக மரபுகளையும், பாரம்பரியங்களையும் அறியாதவர்களாக இருக்கலாம். அல்லது ஒருகாலத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்குச் சேவை செய்த பிரிவினை சக்திகளின் தாக்கத்திற்குள், அறிந்தோ அறியாமலோ செயல்படுபவர்களாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
ஆனால் வந்தே மாதரம் பாரதத்தின் ஆன்மாவையே உலுக்கியது; அது தேசிய உணர்வைத் தூண்டியது; ஒவ்வொரு இதயத்திலும் விடுதலைக்கான தீயை ஏற்றியது. அதனால்தான் வங்காளப் பிரிவினைக்கு எதிராக நாடு முழுவதும் எழுந்த மக்கள் எதிர்ப்பின் வலிமை, இறுதியில் பிரிட்டிஷ் அரசை தனது திட்டத்தைத் திரும்பப் பெறத் தள்ளியது.
அண்மைக் காலங்களில் மத்திய அரசு வந்தே மாதரத்திற்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து, அதன் முழுப்பாடலையும் பாடுவதற்கு ஊக்கமளித்து வருகிறது. அது பொருத்தமானதோடு, பாராட்டத்தக்க நடவடிக்கையாகும்.
2026 ஆம் ஆண்டு வங்காளத் தேர்தல் முடிவுகள், 1905 முதல் 1911 வரையிலான காலகட்டத்தில் வங்காளத்தில் உருவான “விழிப்புணர்வு, தளராத உறுதி, தேசிய உணர்வு மற்றும் எழுச்சிமிக்க மக்கள் இயக்கம்” ஆகியவற்றின் நினைவுகளை மீண்டும் உயிர்ப்பித்துள்ளன.
இந்தத் தேர்தல், மொழி அடிப்படையில் வங்காளத்தை தனிமைப்படுத்த முயன்ற அரசியல் முயற்சிகளுக்கு முடிவுகட்டியதாகக் கருதப்படுகிறது. வங்காள மொழி தனித்துவம் கொண்டதாக இருந்தாலும், அதன் அடையாளம் பாரதத்தின் ஆன்மிக அடையாளத்திலிருந்து பிரிந்ததல்ல; மாறாக அதனுடைய பிரிக்க முடியாத ஓர் அங்கமே என்பதை, இந்தத் தேர்தல் முடிவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன.
1905ல், பிரிட்டிஷ் காலனித்துவ சக்திகளும், ஜிஹாதி தீவிரவாத சக்திகளும் இணைந்து பாரதத்தின் தேசிய அடையாளத்தை பலவீனப்படுத்த முயன்றதாகக் கூறப்படுவது போலவே, 2026-லும் சில அரசியல்வாதிகள், ஜிஹாதி தீவிரவாதிகள் மற்றும் கலாசார மார்க்சியவாதிகள் இணைந்து, வங்காளத்தின் பாரதத் தொடர்பைத் துண்டிக்க முயன்றன.
1905-லும் 2026-லும், வங்காள ஹிந்துக்கள் தங்களது இருப்பையே கேள்விக்குள்ளாக்கும் ஒரு நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரது வங்காளத்தின் ஆன்மாவும், அடையாளமும் மீண்டும் விழித்தெழுந்துள்ளது போலத் தோன்றுகிறது. ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் உள்ளடக்கும், ஒருங்கிணைந்த ஆன்மிக வாழ்க்கைத் தத்துவமான பாரதத்தின் ஹிந்துத்துவம், மீண்டும் ஒரு முறை வலிமையாகவும், தெளிவாகவும் வெளிப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை சாத்தியமாக்கிய அரசு மற்றும் நிர்வாக அதிகாரிகள் அனைவருக்கும், அச்சமின்றி வெளிவந்து முன்னெப்போதும் இல்லாத அளவில் வாக்களித்து, துணிச்சலையும், உறுதியையும் வெளிப்படுத்திய வங்காளத்தின் பெண்கள் மற்றும் ஆண்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள் உரித்தாகின்றன. ஜனநாயகத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கையும், மாற்றத்திற்கான அவர்களின் ஆழமான விருப்பமுமே, இந்த வரலாற்று வெற்றியை சாத்தியமாக்கியுள்ளது. சந்தேகமின்றி, இது வங்காளத்தின் “வந்தே மாதரம் தருணம்” ஆகும்.
கட்டுரையாளர்: அகில பாரத செயற்குழு உறுப்பினர், ஆர்.எஸ்.எஸ்
தமிழில்: மருத்துவர் சுபா