பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நெதர்லாந்துப் பயணம், அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், வரலாற்று ஆர்வலர்களுக்கு இந்தப் பயணத்தின் மூலம் ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. நெதர்லாந்தில் உள்ள லெய்டன் பல்கலைக் கழகத்தில், நீண்ட நாட்களாகக் காட்சிப்படுத்தி வைத்திருந்த சோழர்களின் ஆனைமங்கலச் செப்பேடுகள் பிரதமர் மோடியிடம், இந்தப் பயணத்தின் போது ஒப்படைக்கப்பட்டன. தமிழக வரலாற்றின் மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றான இந்தச் செப்பேடுகள் பாரதம் திரும்புவது, பிரதமர் மோடியின் தலைமையிலான பாஜக அரசு, வெளிநாடுகளிலிருந்து நமக்குச் சொந்தமான கலைப்பொருட்களை பாரதத்திற்கு கொண்டுவரும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதன் ஒரு பகுதியாகும்.
செப்பேட்டின் வரலாறு
ஆனைமங்கலச் செப்பேடுகளின் முக்கியத்துவத்தைப் பொருத்தவரை, சோழர்கள் வரலாற்றின் முதன்முதலில் ஒளியைப் பாய்ச்சிய பெருமை, இந்தச் செப்பேடுகளையே சேரும். 1700களில், “ப்ளோரென்டியஸ் காம்பர்” என்ற பாதிரியாரால் நெதர்லாந்துக்கு இந்தச் செப்பேடுகள் நாகப்பட்டினத்திலிருந்து கொண்டு செல்லப்பட்டன. அக்காலகட்டத்தில் நாகப்பட்டினம் டச்சுக்காரர்களின் ஆதிக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இது அந்நியர்களின் தாக்குதலின் போது, பூமியில் புதையுண்டிருந்ததாகவும், அது தோண்டியெடுக்கப்பட்ட பிறகு அந்தப் பாதிரியாரின் கைக்குச் சென்றதாகவும், லெய்டன் பல்கலைக் கழகத்தின் குறிப்புத் தெரிவிக்கிறது. காம்பர் பாதிரியாரின் குடும்பத்தினரிடம் நீண்ட காலம் இருந்த பிறகு, 1862ம் ஆண்டு இந்தச் செப்பேடுகள் லெய்டன் பல்கலைக்கழகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. அதன் காரணமாகவே, அவை “லெய்டன் செப்பேடுகள்” என்று அழைக்கப்பட்டன.
1886ம் ஆண்டு பண்டித நடேச சாஸ்திரியார், பர்கேஸ் என்பவருடன் சேர்ந்து “Archaeological Survey of Southern India” என்ற நூலில், இதன் விவரங்களை வெளியிட்டார்.
பிறகு கே.வி.சுப்பிரமணிய ஐயர், அந்தப் பதிப்பில் உள்ள தவறுகளைத் திருத்தி, தொல்லியல் துறையின் எபிக்ராபியா இண்டிகா 22ம் தொகுதியில், செப்பேட்டின் விவரங்களை வெளியிட்டார். பின்னாளில் பல செப்பேடுகள் கண்டெடுக்கப் பட்டிருந்தாலும், சோழர்களின் வம்சாவளியைப் பற்றி முழுமையாகத் தந்த முதல் செப்பேடு இது என்பதால், ஆனைமங்கலச் செப்பேடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பல ஆண்டுகளாக இந்தச் செப்பேட்டை பாரதத்திற்கு கொண்டுவரும் முயற்சியில், பலர் ஈடுபட்டிருந்தனர். அதில் இப்போதுதான் வெற்றி கிடைத்திருக்கிறது.
வரலாற்று முக்கியத்துவம்
இந்தச் செப்பேடுகளின் வரலாற்று முக்கியத்துவம் என்னவென்று பார்ப்போம். “ஆனைமங்கலச் செப்பேடுகள்” என்று பொதுவாக அழைத்தாலும், இதில் இரண்டு செப்பேட்டுத் தொகுதிகள் உள்ளன. முதலாவது பெரிய செப்பேடுகள், 21 இதழ்களைக் கொண்டது. அது ராஜராஜ சோழரால், நாகப்பட்டினத்தில் உள்ள சூடாமணி பௌத்த விஹாரத்திற்கு அளிக்கப்பட்ட நிவந்தங்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்திருக்கிறது.
இரண்டாவது தொகுதியில், மூன்று இதழ்கள் உள்ளன. அது முதலாம் குலோத்துங்க சோழர் காலத்தில், நாகப்பட்டினத்தில் உள்ள இரு பௌத்த விஹாரங்களுக்கு ஐந்து கிராமங்கள் நிவந்தமாக அளிக்கப்பட்ட செய்தியைத் தருகிறது.
இதில் முதலாம் ராஜராஜசோழர் காலத்தில் அளிக்கப்பட்ட செப்பேடு, ராஜராஜனின் 21ம் ஆட்சியாண்டில், தஞ்சாவூர் புறம்படியில் “ராஜஸ்ரயன்” என்ற அரண்மனையில் அவர் அமர்ந்திருக்கும்போது, கடாரத்து அரசனான (ஸ்ரீவிஜயப் பேரரசின் அரசன்) சூளாமணி வர்மன் நாகப்பட்டினத்தில் எழுப்பிக்கொண்டிருக்கின்ற பௌத்த விஹாரத்திற்கு “ஆனைமங்கலம்” என்ற கிராமத்தின் வருவாயையும், அதைச் சுற்றியுள்ள 26 கிராமங்களின் வருவாயையும், பள்ளிச் சந்தமாக, அதாவது பௌத்த ஆலயத்திற்கு அளிக்கும்படி அரசன் ஆணையிட்ட விவரத்தைப் பதிவு செய்கிறது. ஆனால் இந்த பௌத்த விஹாரம் கட்டப்பட்டு முடிக்கும் முன்பே ராஜராஜரும், சூளாமணி வர்மனும் இறந்து விட்டனர்.
ஆகவே சூளாமணி வர்மனின் மகனான ஸ்ரீமாற விஜயோத்துங்க வர்மன், ராஜராஜரின் மகனான ராஜேந்திர சோழரிடம், இந்த ஆணையை செப்பேடுகளாக வடித்துத் தரும்படி கேட்டார். அதன்படி ராஜேந்திரசோழர், தன்னுடைய தந்தையின் ஆணையைச் செப்பேடுகளாக ஆவணப்படுத்திக் கொடுத்தார் என்பதையே, பெரிய ஆனைமங்கலச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
இதில் ஐந்து இதழ்கள் சமஸ்கிருதத்திலும், 16 இதழ்கள் தமிழிலும் எழுதப்பட்டுள்ளன. கிரந்த எழுத்துகளில் எழுதப்பட்ட சமஸ்கிருதப் பகுதியில், சோழர்களின் வம்சாவளி குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்ப் பகுதியில் நிவந்தமாக விடப்பட்ட கிராமங்களின் பெயர்கள், அதன் எல்லைகள், இந்த ஆணையில் கையெழுத்திட்ட அதிகாரிகளின் பெயர்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆணையை நடைமுறைப்படுத்த, என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பதையும் தமிழ்ப்பகுதி விவரிக்கிறது.
இந்த இருபத்தோரு இதழ்களும், நடுவில் துளையிடப்பட்டு ஒரு வளையத்தால் கோர்க்கப்பட்டு இருக்கின்றன. அந்த வளையத்தில், “ஆனைமங்கலம்” என்று எழுதப்பட்டிருக்கிறது. வளையம் இணையும் இடத்தில் “தாமரை மலர்” போன்ற ஒரு உருளை காணப்படுகிறது. அதில் எட்டு இதழ்கள் கீழ்நோக்கியும், 16 இதழ்கள் மேல் நோக்கியும் உள்ளன. அந்த உருளையின் முகப்பில் ராஜேந்திரசோழரின் முத்திரை காணப்படுகிறது. முத்திரையில் சோழர்களின் சின்னமான புலியும், அவர்களால் வெற்றிகொள்ளப்பட்ட பாண்டியர்களின் சின்னமான இரட்டை மீன்களும் காணப்படுகின்றன. தவிர விளக்குகள், சாமரம் போன்ற மங்கலச் சின்னங்களும் முத்திரையில் உள்ளன. அதன் விளிம்பில் “இது ராஜேந்திர சோழரின் சாசனம்” என்று சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
சிறிய செப்பேட்டுத் தொகுதியில் உள்ள மூன்று இதழ்களிலும், தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் குலோத்துங்கரின் ஆட்சியின் போது கடாரத்தில் இருந்து வந்த இரு தூதர்கள், ராஜராஜப் பெரும்பள்ளி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட சூடாமணி விஹாரத்திற்கும், ராஜேந்திரப் பெரும்பள்ளி என்ற மற்றொரு புத்தர் கோயிலுக்கும் ஏற்கனவே கொடையாக அளிக்கப்பட்ட ஐந்து கிராமங்களை, மீண்டும் சாசனம் செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதுதவிர, இந்தக் கிராமங்களில் உள்ள நிலங்களைக் குத்தகைக்காரர்கள் கவனித்து வருகிறார்கள் என்றும், அதை மாற்றி நேரடியாக பௌத்தப் பள்ளியின் மேற்பார்வைக்கு விடும்படியும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதை ஏற்று குலோத்துங்கர், இந்த சாசனத்தைச் செய்து கொடுத்திருக்கிறார்.
இப்படி பல வரலாற்றுச் சிறப்பு மிக்க செய்திகள் அடங்கிய இந்தச் செப்பேடுகள், நீண்டகாலத்திற்குப் பின் மீண்டும் பாரதம் திரும்புவது பெருமைக்குரிய செய்தியாகும். இந்தச் சாதனையைச் செய்த பாரத பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழ் கூறும் நல்லுலகம், என்றென்றும் கடமைப்பட்டு உள்ளது என்றால் அது மிகையல்ல.
கட்டுரையாளர்: வரலாற்று ஆய்வாளர்
மற்றும் எழுத்தாளர்