நிகழாண்டு பல்வேறு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. குறிப்பாக அரசியல் ரீதியாக வரவேற்கத்தக்க பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.
1957ம் ஆண்டு முதல் முறையாக கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பட்டது. வாக்குச்சீட்டு வாயிலாக பதவிக்கு வந்த முதலாவது ஆட்சி என்று இது குறிப்பிடப்படுகிறது. கேரளம், மேற்கு வங்காளம், திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களும் மார்க்சிஸ்ட் கோட்டைகளாக விளங்கி வந்தன. கேரளத்தில் மார்க்சிஸ்ட் அரசும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் மாறி, மாறி ஆட்சிக்கு வருவது மரபாக இருந்தது. ஆனால், 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கேரளாவில் மார்க்சிஸ்ட் கூட்டணி மறுபடியும் ஆட்சியைப் பிடித்து விட்டது. தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடைபெற்று வந்த மார்க்சிஸ்ட் கூட்டணி அரசு, நிகழாண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வீழ்த்தப்பட்டு விட்டது. மார்க்சிஸ்ட் அரசு மீதான வெறுப்பு என்று மட்டும் இதை கருதி விடக்கூடாது. பினராயி விஜயன் 10 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்ததன் வாயிலாக, வெளி நபர்களின் எதிர்ப்பை மட்டுமல்லாமல் சொந்த மார்க்சிஸ்ட் கட்சிக்காரர்களின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டார்.
மேற்கு வங்காளத்தில் ஜோதிபாசு, ஏறத்தாழ 23 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்தார். அவர் பதவி விலகியதையடுத்து, புத்ததேவ் பட்டாச்சார்யா முதல்வரானார். அவர் 11 ஆண்டுகள் முதல்வராக செயல்பட்டார். 2011ம் ஆண்டு, மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கோட்டையை மமதா பானர்ஜி தகர்த்தார். இப்போது நடைபெற்ற தேர்தலில் மமதா பானர்ஜியின் அராஜகத்துக்கு பாஜக முடிவுரை எழுதி விட்டது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் அவ்வப்போது பலமுறை மார்க்சிஸ்ட் கூட்டணி ஆட்சி நடைபெற்றுள்ளது. நிருபன் சக்கரவர்த்தி மாணிக் சர்க்கார் பல ஆண்டுகள் தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார்கள். எனினும், மக்களிடையே மார்க்சிஸ்ட்டுகள் மீதான அதிருப்தி மேலோங்கியதால், 2018ல் திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி தோற்கடிக்கப்பட்டு பாஜக ஆட்சிக்கு வந்தது.
2011ல் மேற்கு வங்காளத்திலும், 2018ல் திரிபுராவிலும், 2026ல் கேரளத்திலும் மார்க்சிஸ்ட் அரசு முடிவுக்கு வந்துவிட்டது. உலகம் முழுவதும் மார்க்சிஸ்ட்டுகள் மீதான அதிருப்தி அதிகரித்து வருகிறது என்பதை அரசியல் நோக்கர்கள் பதிவு செய்துள்ளனர். இடதுசாரி கோட்பாடு காலாவதியாகி வருகிறது.
மேற்கு வங்காளத்தில் உள்ள நக்சல்பாரி என்ற கிராமத்தில் மாவோயிஸ்ட் வன்முறை தொடங்கியது. இது படிப்படியாக பல மாநிலங்களுக்கு பரவியது. 2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சலிசம் முழுமையாக ஒழித்துக் கட்டப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே அறிவித்திருந்தார். இது நனவாகி விட்டது. 2015க்கும், 2025க்கும் இடைப்பட்ட காலத்தில், மாவோயிஸ்ட் பாதிப்பு மிகுந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 100லிருந்து, 20ஆக குறைக்கப்பட்டு விட்டது. பசவராஜ் உள்ளிட்ட முக்கிய மாவோயிஸ்ட்டுகள் தீர்த்துக்கட்டப்பட்டு விட்டனர். அரசிடம் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்த மாவோயிஸ்ட்டுகளின் மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. சாலை வசதி, சுகாதார வசதி, தகவல் தொடர்பு வசதி உள்ளிட்டவை விரிவுபடுத்தப்பட்டுள்ளன. நக்சல்களுக்கு ஆதரவாக பரிந்து பேசிக் கொண்டிருந்த அர்பன் நக்சல்களின் முகமுடியும் கிழித்தெறியப்பட்டு விட்டது.
மாவோயிஸ்ட்டுகள், பழங்குடி மக்களின் உரிமைக்காக பாடுபட்டு வந்தனர். அவர்களுக்காக குரல் எழுப்பி வந்தனர் என்றெல்லாம் அர்பன் நக்சல்கள் அவிழ்த்து விட்ட கட்டுக்கதைகள் தூள் தூளாகி விட்டன. சிவப்பு தாழ்வாரம் என்பதை 2 அம்சங்களை உள்ளடக்கியதாக கருத வேண்டும். ஒன்று தேர்தல் சார்ந்தது. மார்க்சிஸ்டுகள் தேர்தலில் போட்டியிடுவது வழக்கம். இப்போது மார்க்சிஸ்ட் செல்வாக்கு சுருங்கி விட்டது. எந்த மாநிலத்திலும் மார்க்சிஸ்ட் ஆட்சி இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுவிட்டது.
மாவோயிஸ்ட்டுகள், பழங்குடியினப் பகுதிகளின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு வந்தனர். அரசுக்கு எதிராக போட்டி சர்க்காரை நடத்தினார்கள். கட்டாய வரிவசூல் நடவடிக்கையிலும் ஈடுபட்டார்கள்.
நரேந்திர மோடி அரசு தொடர்ந்து மேற்கொண்ட செம்மையான நடவடிக்கைகள் காரணமாக, மாவோயிஸ்ட்டுகள் வீழ்த்தப்பட்டு விட்டனர். மார்க்சிஸ்ட்டுகளும் செல்லா காசுகளாகி விட்டனர்.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி