ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் நூற்றாண்டைக் கடந்து விட்டது. இதையொட்டி பல்வேறு நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சமூகத்தை தொடர்பு கொள்வது விரிவாக்கப்பட்டுள்ளது. தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 5 முக்கிய அம்சங்களைக் கொண்ட செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. குடும்ப ரீதியாக விழிப்புணர்வை வலுப்படுத்துதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், சமூக நல்லிணக்கம், சமூகத்துக்காக பணியாற்ற வேண்டிய கடமை, சுதேசி வாழ்க்கை முறை ஆகியவையே இந்த 5 அம்சங்களாகும்.
சுதேசி வாழ்க்கை நெறியை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். பன்நாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளை விலக்க வேண்டும். தாய்மொழியிலேயே கலந்துரையாட வேண்டும். பாரம்பரிய உடையையே அணிய வேண்டும். உள்ளூர் திருவிழாக்களை சிறப்பாகக் கொண்டாட வேண்டும். குலதெய்வங்களை தவறாமல் வழிபட வேண்டும். பஜனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள வேண்டும். பாரதிய உணவு வகைகளையே சாப்பிட வேண்டும். வீட்டை பாரதிய முறைப்படியே அலங்கரிக்க வேண்டும். புண்ணியத் தலங்களுக்கு தீர்த்த யாத்திரை செல்ல வேண்டும். வரலாற்று புகழ்பெற்ற இடங்களுக்கு குடும்பத்துடன் செல்ல வேண்டும்.
சுதேசி வாழ்க்கை நெறியில் உள்ள சுதேசி என்பதன் ஆழ்ந்த பொருளை உள்வாங்கிக் கொள்ள வேண்டும். இது தனிநபர் சார்ந்தது. அதன் நீட்சியாக குடும்பம் சார்ந்தது. அதன் விரிவாக்கமாக சமூகம் சார்ந்தது. தொழில்சார்ந்த, சமூகம் சார்ந்த, நாடு தழுவிய அளவில் சுதேசி நெறியை நாம் பின்பற்ற வேண்டும். சுதேசி வாழ்க்கை நெறி மூன்று முக்கிய அம்சங்களைக் கொண்டது.
ஆன்மிகம்
பாரதம் என்றாலே ஆன்மிகம் தான். உலகையே ஒரு குடும்பமாக நாம் பார்க்கிறோம். இதனால்தான் `வசுதைவ குடும்பகம்’ என்று கூறுகிறோம். நமது உள்மனம் மிகுந்த ஆற்றல் உடையது. இது பல்வேறு வழிகளில் தன்னை வெளிப்படுத்துகிறது. இந்த பன்மைத் தன்மையை வித்தியாசங்களாக எண்ணக் கூடாது. பல்வேறு வெளிப்பாடுகளாகவே கருத வேண்டும். ஒவ்வொரு ஆத்மாவும் தெய்வ அம்சம் கொண்டது. இதை உயர்நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். பணி (கர்ம யோகா), வழிபாடு (பக்தி யோகா), அறிவு (ஞான யோகா), தியானம் (ராஜ யோகா) என பல வகைகள் உள்ளன. பாதைகள் வெவ்வேறானவை என்ற போதிலும், சேரும் இடம் ஒன்றுதான். நாம் மோட்சத்திற்கு செல்ல வேண்டும். இந்தப் பாதை ஆளுக்கு ஆள் மாறுபடும். இது இயல்பானதுதான். பாரதத்தில் ஆன்மிக ஜனநாயகம் செழுமையாக உள்ளது. மதம், ஆன்மிகத்தை உயர்நிலைக்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. தர்மம்தான் சிகர நிலை. இதை நோக்கிப் பயணிக்க மதம் உறுதுணையாக உள்ளது.
சமூகமே பிரதானம்
சமூகத்தின் அடிப்படையிலேயே தேசம் என்பது நமது கோட்பாடு. மற்ற நாடுகளில் அரசுக்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. ரவீந்திரநாத் தாகூர் எழுதிய `சுதேசி சமாஜ்’ கட்டுரை புகழ்பெற்றது. கடந்த காலத்தில் நீதி பாதுகாப்பு, வெளியுறவு போன்றவை மட்டுமே அரசின் கட்டுப்பாட்டில் இருந்தன. கல்வி, சுகாதாரம், வர்த்தகம் உள்ளிட்டவற்றை சமூகமே நிர்வகித்தது. அரசிடமிருந்து சமூகம் நிதியை எதிர்பார்க்கவில்லை. சமூகமே நிதியை திரட்டிக் கொண்டது. அரசை சார்ந்திருக்காத சமூகமே சுதேசி சமாஜ்.
பூரணத்துவம்
வாழ்க்கை முழுமையானது. நல்லிணக்கம் இன்றியமையாதது. ஹிந்துக்கள் அனைவரும் சகோதர, சகோதரிகளே. நாம் அனைவரும் பாரதத்தாயின் மக்கள். ஒரு கதையை சுட்டிக் காட்டுகிறேன். தேர்தலின்போது தண்ணீர் மாசு, காற்று மாசு, நில மாசு, உணவு மாசு ஆகிய 4 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். இந்த 4 வேட்பாளர்களும் தங்களுக்குரிய சின்னமாக மனிதன் தான் வேண்டும் என்று கோரினார்கள். ஏன் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளீர்கள் என தேர்தல் அதிகாரி கேட்டதற்கு, நாங்கள் உருவானதற்கே மனிதர்கள்தான் காரணம் என்று 4 வேட்பாளர்களும் பதில் அளித்தனர்.
நமது வளர்ச்சி முறை இயற்கைக்கு இணக்கமானது. பல்லாயிரம் ஆண்டுகளாக நாம் இதை பின்பற்றி வருகிறோம். ஆனால், வெளிநாட்டு வளர்ச்சி முறை இயற்கையைச் சுரண்டுவதாகும். இதனால்தான் சுற்றுச்சூழல் கேடு அடைந்துள்ளது. நாம் அதிகம் மரங்களை வளர்க்க வேண்டும். ஒருமுறை மட்டுமே உபயோகிக்கக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
மூன்று குழந்தைகள்
நமது பாரம்பரியத்தில் குடும்பத்துக்கு முக்கிய இடம் உண்டு. உலக வாழ்க்கையை வெறுக்க வேண்டியதில்லை. ஆன்மிகத்தில் மேம்பாடு அடைய உலக வாழ்க்கை தடைக்கல்லாக இருக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நமது பாரம்பரியத்தில் இதுதொடர்பான எண்ணற்ற உதாரணங்களைப் பார்க்க முடிகிறது.
மக்கள் தொகை குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தினரும் குறைந்தபட்சம் 3 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் வாரம் ஒருமுறையாவது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக கலந்துரையாட வேண்டும். உணவை பகிர்ந்து கொள்ள வேண்டும். இதுதான் சுதேசி வாழ்க்கை நெறி.
கட்டுரையாளர் : ஆர்.எஸ்.எஸ். செயற்குழு உறுப்பினர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி