லட்சிய ரீதியாக நீர்த்துப்போய்விட்ட மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள்

கேரள அரசியல் களத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி ஆகியவை மோதுகின்றன.
மார்க்சிஸ்ட் கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் கொள்கையில் திடமாக இல்லை. லட்சியத்தில் உறுதியாக இல்லை. அரசியல் ஆதாயத்துக்காக எதையும் செய்யலாம் என்ற தரம் தாழ்ந்த நிலைக்கு மார்க்சிஸ்ட் கூட்டணியும், காங்கிரஸ் கூட்டணியும் வந்து விட்டன.
மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வி.எஸ்.அச்சுதானந்தன், கேரள முதல்வராக இருந்தபொழுது, மக்கள் ஜனநாயக கட்சி எனப்படும் தேசவிரோதிகள் அங்கம் வகிக்கும் கட்சியுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளவில்லை. அப்படிப்பட்ட உறவு வேண்டாம் என்று அவர் மறுத்து விட்டார். ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. தடை செய்யப்பட்டுள்ள பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவுதான்
எஸ்.டி.பி.ஐ. கட்சியாகும். இதைப்போல, ஜமாத்–இ–இஸ்லாமியின் அரசியல் பிரிவு தான் வெல்பேர் கட்சியாகும். இந்த இரண்டு கட்சிகளும் அடிக்கடி பல்டி அடிப்பது உண்டு. எஸ்.டி.பி.ஐ. கட்சியையும், வெல்பேர் கட்சியையும் அரவணைக்க மார்க்சிஸ்ட் கூட்டணியோ அல்லது காங்கிரஸ் கூட்டணியோ சற்றும் தயக்கம் காட்டவில்லை.
காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சேஸ்வரம் தொகுதியில், பாஜகவுக்கு சாதகமான நிலை மேலோங்கி வருகிறது. இந்நிலையில், முஸ்லிம் லீக் வேட்பாளருக்கு ஆதரவாக எஸ்.டி.பி.ஐ வேட்பாளரை வாபஸ் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது வெற்றியும் பெற்று விட்டது. கடந்த காலத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியை ஏறெடுத்தும் பார்க்க முடியாது என முஸ்லிம் லீக் கூறியது. ஆனால், இப்போது அரசியல் ஆதாயத்திற்காக நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
வி.எஸ்.அச்சுதானந்தன் காட்டிய அரசியல் உறுதிப்பாட்டை இப்போதைய மார்க்சிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன் காட்டவில்லை. எதில் சமரசம் செய்து கொள்ளக்கூடாதோ, அதில் சமரசம் செய்து கொள்கிறார்கள். இந்த முயற்சி தற்காலிக ஆதாயத்தை பெற்றுத் தரலாம். ஆனால் அதே நேரத்தில் கட்சிக்கு இது தீரா களங்கத்தை ஏற்படுத்தி விடும். மார்க்சிஸ்ட் கட்சியில் உள்ள நிர்வாகிகள் சிலரே கட்சி மேலிடத்தின் நடவடிக்கை தங்களுக்கு உடன்பாடானது அல்ல என்பதை ஏற்கனவே தெரிவித்து விட்டனர். எனினும் கட்சி கட்டுப்பாட்டைக் கருத்தில் கொண்டு வெளிப்படையாக எதையும் தெரிவிக்க அவர்கள் முன் வரவில்லை.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி