தேசிய மருத்துவர்கள் அமைப்பு

நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த முறை சுகாதார சேவையிலிருந்து தேச சேவை செய்யும் தேசிய மருத்துவர்கள் அமைப்பு (National Medicos Organisation) பற்றி அறிவோம்…

 

ஏ.பி.வி.பி.யின் (ABVP) 23-வது தேசிய மாநாட்டில், 1977 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. தேசிய மருத்துவர்கள் அமைப்பு (National Medicos Organisation). அப்போது, இரண்டு மருத்துவர்களும், ஒரு மருத்துவ மாணவர் குழுவும், “வேலையே வழிபாடு” என்ற கொள்கையின் வழிகாட்டுதலுடன், தேசத்திற்குத் தன்னலமற்ற சேவை செய்ய மருத்துவ சமூகத்தைத் திரட்டத் தீர்மானித்தனர்.
நோக்கம்:
சுகாதார சேவையிலிருந்து தேச சேவை (சுவத்ய சேவா சே ராஷ்ட்ர சேவா) என்ற கொள்கையுடன் செயல்படுகிறது. குரு-சிஷ்ய பரம்பரையைப் போற்றும், பாரதிய மருத்துவ முறைகளை மதிக்கும், ஒழுக்கம், பரிவுணர்வு மற்றும் மனிதகுலத்திற்கான தன்னலமற்ற அர்ப்பணிப்பைக் கொண்டிருக்கும் சேவை மனப்பான்மை கொண்ட, தேசியவாத மருத்துவர்களை உருவாக்குதல்.
அடிப்படைக் கொள்கைகள்:
தேசிய மருத்துவர்கள் அமைப்பானது தேசிய குணத்தை உருவாக்குகிறது. ஒரு நோயாளிக்குத் தகுதியான, கல்லூரிகளில் அரிதாகக் கற்பிக்கப்படும் குணங்களை ஊட்டுகிறது. இது உடல் மற்றும் மனநலனில் ஒழுக்கத்தை ஊக்குவிக்கிறது. சேவையின் மூலம் மருத்துவர்களைப் பல்வேறு புவியியல் பகுதிகளுக்கு வெளிப்படுத்தி சமூகப் பிணைப்பை வளர்க்கிறது. மேலும் நெருக்கடி காலங்களில், எதிர்பார்ப்பின்றி தன்னார்வத் தொண்டு செய்யும், தன்னலமற்ற சேவையை நிலை நிறுத்துகிறது.
முக்கியக் கொண்டாட்டங்கள்:
தன்வந்திரி ஜெயந்தி – தேசிய மருத்துவர்கள் அமைப்பின் ஸ்தாபக தினமாக அனுசரிக்கப்படுகிறது. சேவை மற்றும் தேசியம் ஆகிய கொள்கைகளுக்கான உறுதிமொழியைப் புதுப்பிக்கிறது.
தேசிய மருத்துவர்கள் தினம் (ஜூலை 1) – டாக்டர் பிதான் சந்திர ராயின் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், சமூக முகாம்கள் மற்றும் மருத்துவர், வழிகாட்டிகளைப் பாராட்டுவதன் மூலம் அனுசரிக்கப்படுகிறது.
தேசிய நடவடிக்கைகள்:
தேசிய மருத்துவர்கள் அமைப்பின் முதன்மை வருடாந்திர தேசிய மாநாடான NMOCON, பாரதம் முழுவதிலுமிருந்து மருத்துவ மாணவர்கள், மருத்துவர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொது சுகாதார நிபுணர்களை ஒன்றிணைக்கிறது. இது அறிவுசார் பரிமாற்றம், கொள்கை விவாதம் மற்றும் நிறுவன வழிகாட்டுதலுக்கான மிக உயர்ந்த மன்றமாகும். இதில் தொழில்முறை சகோதரத்துவத்தையும், தேசிய ஒற்றுமையையும் வளர்க்கும் முக்கிய உரைகள், குழு விவாதங்கள், பயிலரங்குகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
“அப்யாஸ் வர்க” (பயிற்சி முகாம்) என்பது மாநில மற்றும் தேசிய அளவில் நடத்தப்படும் கட்டமைக்கப்பட்ட பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் முகாம்கள் ஆகும். இந்த ஆழ்ந்த முகாம்கள் தலைமைத்துவத்தை வளர்க்கின்றன. தேசிய மருத்துவர்கள் அமைப்பின் சித்தாந்தத்தைப் பற்றிய புரிதலை ஆழப்படுத்துகின்றன. மேலும், சமூக சுகாதாரப் பாதுகாப்பு வழங்குதல், பொதுப் பேச்சு மற்றும் ஆளுமை மேம்பாடு ஆகியவற்றில் திறன்களை வளர்க்கின்றன. அப்யாஸ் வர்க, ஆர்வமுள்ள தன்னார்வலர்களை ஒழுக்கமான, லட்சியம் சார்ந்த மருத்துவ நிபுணர்களாக மாற்றுகிறது.
தேசிய மருத்துவர்கள் அமைப்பின் சேவா யாத்திரைகள் அதன் மிக முக்கியமான செயல்பாடுகளாகும். இவை பாரதத்தின் மிகவும் தொலைதூர மற்றும் பதற்றமான பகுதிகளுக்கு குணமளித்தலையும், தேசிய ஒருமைப்பாட்டையும் கொண்டு செல்லும் மருத்துவப் பயணங்கள் ஆகும். ஜம்மூ – காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய பகுதிகளில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ‘ரிஷி காஷ்யப் சேவா யாத்திரை’யும், வடகிழக்கு மாநிலங்கள் ஏழிலும் பயணிக்கும் ‘தன்வந்திரி சேவா யாத்திரை’யும் எல்லைப்புறச் சமூகங்களைச் சென்றடைந்து.
இலவச மருத்துவ முகாம்கள், உடல்நலப் பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வழங்குகின்றன. இம்முயற்சிகள் தன்னார்வலர்களுக்கும், அப்பகுதி மக்களுக்கும் இடையே வலுவான பிணைப்பை உருவாக்குகின்றன. மேலும் இளம் மருத்துவர்களிடையே தேசிய அடையாளம் மற்றும் கடமையுணர்வை ஆழமாகப் பதிக்கின்றன.
இவை கலாச்சாரப் பரிமாற்றம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கும் மகத்தான பயணங்களாகும். உள்ளூர் மற்றும் நாடு முழுவதிலுமிருந்து வரும் மருத்துவர்கள் மற்றும் மாணவர்களை ஒன்றிணைக்கும் இவை, ‘ஏக் பாரத், ஸ்ரேஷ்ட பாரத்’ (ஒரே பாரதம், உன்னத பாரதம்) எனும் கோட்பாட்டிற்கு, வாழும் சான்றுகளாகத் திகழ்கின்றன. மாநில அளவிலான ‘சேவா யாத்திரை’கள் இவற்றுக்குத் துணையாகச் செயல்பட்டு, ஆண்டு முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் அடித்தள அளவிலான மக்கள் நலப் பணிகளைத் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்கின்றன.
தமிழகத்தில் தேசிய மருத்துவர்கள் அமைப்பின் செயல்பாடுகள்:
தமிழகத்தில் தேசிய மருத்துவர்கள் அமைப்பின் பயணம், பல தசாப்தங்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். 2024-ஆம் ஆண்டில் தமிழகத்திற்கான மாநிலக் குழு முறைப்படி அமைக்கப்பட்டது; சென்னை, மதுரை, கோவை, நாமக்கல் மற்றும் புதுச்சேரி ஆகிய நகரங்களில் இக்குழுவின் மண்டலக் குழுக்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன.
1994-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 10 நாட்களுக்கு நடத்தப்பட்டு வரும் ‘சபரிமலை சேவா யாத்திரை’, இச்சங்கத்தின் பெருமைமிக்க மரபுகளுள் ஒன்றாகும். சபரிமலைக்குச் செல்லும் கடினமான நீண்ட நடைபயணத்தை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு, இம்முகாம் வாயிலாக இலவச மருத்துவச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக, தென்காசி அருகே உள்ள பாபநாசத்தில் ‘ஆடி அமாவாசை’த் திருவிழாவின் போது சொரிமுத்து அய்யனார் கோயிலில் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றை தேசிய மருத்துவர்கள் அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்குச் சேவையாற்றி வருகிறது.
மதுரை, கோவை, சென்னை மற்றும் நாமக்கல் ஆகிய நகரங்களில் நான்கு ‘அப்யாஸ் வர்க்’ (பயிற்சி முகாம்கள்) நடத்தப்பட்டுள்ளன. குழுவாகச் செயல்படுதல், தன்னார்வத் தொண்டு மற்றும் சேவை மனப்பான்மை ஆகிய விழுமியங்களை மாணவர்களிடையே வளர்த்தல் மற்றும் எதிர்காலச் சேவைப் பணிகளுக்கான தெளிவான வழிகாட்டுதலை வழங்குதல் ஆகியவையே இம்முகாம்களின் முதன்மை நோக்கங்களாகும். தமிழகத்தில் ‘சேவா யாத்திரை’கள் வாயிலாக, கடலோரப் பகுதிகள், பழங்குடியினப் பகுதிகள் மற்றும் மருத்துவச் சேவைகள் குறைவாகக் கிடைக்கும் இடங்கள் என 20 முதல் 25 பகுதிகளில், ஒரே நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்களும், 20 முதல் 30 மருத்துவர்களும் சேவையாற்றுகின்றனர். கருமந்துறை (சேலம்), கொல்லிமலை (நாமக்கல்), கேத்தனூர் (திருப்பூர்), புதுச்சேரியின் கடலோரக் கிராமங்கள் மற்றும் மிகச் சமீபமாக ஜவ்வாது மலை (திருவண்ணாமலை) ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் இம்முகாம்களில், பின்தங்கிய மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனைகள், மருந்துகள் மற்றும் உடல்நலம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் ஆகியவை ஒருங்கிணைந்து வழங்கப்படுகின்றன.
மருத்துவ மாணவர்களின் தொழில்முறை மேம்பாட்டிற்காக, இணையவழித் தளங்கள் வாயிலாக கல்விசார் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள், சேவை நோக்கத்திலான சுகாதாரப் பராமரிப்பு முறையை உற்றுநோக்கி பயில்வதற்காக, பாலக்காடு மாவட்டம் அகலியில் அமைந்துள்ள ‘விவேகானந்தா ஹெல்த் மிஷன்’ (Vivekananda Health Mission) மையத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். சென்னை மற்றும் தூத்துக்குடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயங்களில், தமிழ்நாட்டை சேர்ந்த தேசிய மருத்துவர்கள் அமைப்பின் தன்னார்வலர்கள் மிக விரைவாகத் திரண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
தேசிய மருத்துவர்கள் அமைப்பின் வாயிலாக, மருத்துவ மாணவர்கள் பல்வேறு கல்லூரிகள், மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த ஒத்த சிந்தனையுடையவர்களுடன் தொடர்புக் கொள்வதற்கான ஒரு தளத்தையும், சேவை செய்வதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர். தற்போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒன்றிணைந்து, பாரத தேசத்திற்காகப் பணியாற்றி வருகின்றனர்.
கட்டுரையாளர்: தமிழக அமைப்புச் செயலாளர், தேசிய மருத்துவர்கள் அமைப்பு (NMO)