மார்ச் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம், ஹரியானா மாநிலம் சமல்காவில் (பானிபட்) நடைபெற்ற போது அமைப்புப் பணிகளை விரிவுபடுத்துவதற்கும், தேசிய நலனில் சமுதாயத்தின் நல்லோர் சக்திகளை ஈடுபடுத்துவதற்கும், சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பிரதிநிதி சபாவின் நிறைவு நிகழ்ச்சியில், சங்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்ரீ தத்தாத்ரேய ஹொசபளே பத்திரிகையாளர்களுடன் உரையாடினார். கடந்த ஆண்டில் அமைப்புப் பணிகள் கணிசமாக விரிவடைந்துள்ளது, சங்க ஷாகாக்களின் எண்ணிக்கை சுமார் 6,000 அதிகரித்து 88,000 ஐ கடந்துள்ளது. நடைபெறும் இடங்களின் எண்ணிக்கையும் 55,000 தாண்டியுள்ளது. கூடுதலாக வாராந்திர (மிலன்), மாதாந்திர (மண்டலி) கூடுதல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றார். மேலும் அவர் கூறுகையில்
அந்தமான் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், லடாக்கின் லே பகுதிகளிலும் தொலைதூர வனவாசி பகுதிகளிலும் ஷாகாக்கள் நடப்பது, சங்கப் பணி விரிவாக்கமே. இந்த வளர்ச்சியை சங்க நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளிலும் தெளிவாகக் காணலாம்.
பணி விரிவாக்கத்துடன், சமுதாயத்தில் தரத்தை மேம்படுத்துவதிலும் சங்கம் தொடர்ந்து முனைந்து வருகிறது என்று தத்தாத்ரேய ஹொசபளே தெரிவித்தார். சமுதாயத்தை நேர்மறையான மாற்றத்தை நோக்கி ஊக்குவிக்க ஐந்து மாற்றங்கள் நிகழ்வது முக்கியம். பாரதியத்தன்மை அல்லது ஹிந்துத்துவா என்பது ஒரு கருத்து மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறை. அதன் மூலம், சமுதாயத்தில் தரம் மேம்படுத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காக, சமுதாயத்தின் நல்லோர் சக்தியை ஒன்றிணைத்து, தேசிய நலனில் செலுத்துவது அவசியம்.
மகான்களின் பணியை ஜாதி, உட்பிரிவு வேறுபாடுகளைக் கடந்து, ஏற்க வேண்டும், அவற்றின் மூலம், சமுதாயத்தில் நேர்மறையான மாற்றத்தை நோக்கி முன்னேற வேண்டும் என்று கூறினார். இந்த திசையில், ஒன்பதாவது குரு ஸ்ரீ தேக் பகதூர் ஜி புரிந்த தியாகத்தின் 350 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் 2,000 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை ஸ்வயம்சேவகர்கள் ஏற்பாடு செய்தனர், இதில் 7,00,000 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதேபோல், தேசிய கீதமான வந்தே மாதரத்தின் 150 வது ஆண்டு விழாவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. மகான் ரவிதாஸ் மகராஜின் 650வது பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், வரும் ஆண்டுக்கான திட்டங்கள் பற்றி ஹொசபளே கூறினார்.
வரும் ஆண்டில் சங்கத்தின் வழக்கமான பயிற்சி வகுப்புகள் பற்றிய தகவல்களை வழங்கிய தத்தாத்ரேய ஹொசபளே, 11 ஷேத்திரங்களின் வர்க, நாக்பூரில் ஒரு வர்க ஆக மொத்தம் 96 பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறினார். கோமாதா சேவை, கிராமப்புற மேம்பாட்டிற்கான திட்டங்கள் ஆகியவையும் இந்த பிரதிநிதி சபாகூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளன. குடிமக்கள் தங்கள் வீட்டு மாடிகளில் காய்கறி தோட்டங்களை உருவாக்கவும், பசு சாணம் மற்றும் பசு கோமியத்தை உரமாகப் பயன்படுத்தவும் ஊக்குவிக்கப்படுவார்கள்; இதன் மூலம் பசு பாதுகாப்புக்கு பங்களிக்கலாம். இதேபோல், குடிமக்கள் பசுமையான வீடுகளைக் கட்டுவதாக உறுதி ஏற்கலாம், இதன் மூலம் தங்கள் வீடுகளில் பாலிதீன் பயன்பாட்டைக் குறைத்து தண்ணீரைப் பாதுகாக்கலாம்.
சங்க கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஹொசபளே, பரவலாக்கம் பரிசீலிக்கப்பட்டு, பிராந்த அமைப்புக்கு பதில் சம்பாக் அமைப்புக்கு மாறுவதற்கான ஒரு திட்டத்தைப் பற்றிக் கூறினார். அது செயல்படுத்தப்பட்டவுடன், 46 பிராந்தங்களுக்குப் பதிலாக 80 க்கும் மேற்பட்ட சம்பாக்-கள் இருக்கும்.
ஒரு கேள்விக்கு, பதிலளிக்கையில், சமுதாயத்தில் ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டை நீக்க, எந்தவொரு தேர்தலிலும் வாக்காளர் கணக்கை ஜாதி அடிப்படையில் குறிப்பிடுவதை நிறுத்த ஊடகங்கள் முன்வர வேண்டும் என்று அவர் கூறினார்.
தற்போதைய சர்வதேச சூழ்நிலையில், தேசிய நலனுக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் ராஜதந்திர முயற்சிகளை அவர் பாராட்டினார், சங்கம் உலகில் அமைதியையும், வளர்ச்சியையும் ஆதரிப்பதாகக் கூறினார். டாக்டர் ஹெட்கேவார் எந்த ஒரு சமூகம் உட்பிரிவு அல்லது வழிபாட்டு முறையை எதிர்க்க சங்கத்தை நிறுவவில்லை என்று ஹொசபளே கூறினார். சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக் ஸ்ரீ குருஜி, “நம் அனைவருக்கும் ஒரே மூதாதையர்கள் உள்ளனர்; வழிபாட்டு முறை வேறுபாடுகள் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தாது” என்றும் கூறினார். “டிஎன்ஏ” என்ற வார்த்தை இங்கே குறிப்பிடப்படவில்லை, ஆனால் தொனி அதுவே. மூன்றாவது சர்சங்கசாலக், பாளாசாகேப் தேவரஸ், பாரதத்தைத் தங்கள் தாய்நாடாக, தங்கள் தேசமாக கருதி பாரதியத் தன்மையுடன் வாழ்பவர்கள் அனைவரும் ஹிந்துக்கள் என்று கூறினார். சங்கத்தில் அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள். சமுதாயத்திற்கு நல்ல பணி செய்யும் எவரையும் சங்க ஸ்வயம்சேவகராகவே கருதுகிறோம். இவ்வாறு தத்தாத்ரேய ஹொசபளே பத்திரிகையாளகளிடம் கூறினார்.
குரு ஸ்ரீ ரவிதாஸ் ஜியின் 650வது ஆண்டை
முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ். சர்கார்யவாஹ்
ஸ்ரீ தத்தாத்ரேய ஹொசபளேவின் செய்தி
குரு ஸ்ரீ ரவிதாஸ் ஜியின் 650வது பிறந்த ஆண்டை முன்னிட்டு அவருக்கு ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் மரியாதைக்குரிய அஞ்சலியை செலுத்துகிறது. குரு பரம்பரை என்பது பாரதத்திற்கு கிடைத்த பெரும் கொடை. நமது நீண்ட நெடிய வரலாற்று பயணத்தில், இந்த குரு பரம்பரையானது பக்தி மற்றும் இறைவழிபாடு உணர்வை எழுப்பியதோடு, சமுதாயத்தில் நிலவி வந்த சமூக தீமைகள் மற்றும் பாகுபாடுகளை நீக்கி, சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்பட வழி செய்தது. மேலும் அந்நியர்களின் ஆட்சி அடக்குமுறைக்கு எதிராக போராட சமுதாயத்திற்கு விழிப் புணர்வும் ஏற்படுத்தியது.
இந்த குரு பரம்பரையில் வந்த ஸ்ரீ ரவிதாஸ் ஜி, தனித்துவமான இடத்தைப் பெற்றவர். அவருடைய உழைப்பும், வாழ்க்கையும் நமக்கெல்லாம் ஊக்கமாக உள்ளது. முனிவர்கள் மீதும், ஞானிகள் மீதும் பெரும் மதிப்பு கொண்டிருந்த அவர், அடித்தட்டு மக்கள் மீது மிகுந்த கருணை கொண்டிருந்தார். குடும்ப வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தபோதும், உலகியல் பற்றுகளிலிருந்து விலகி, ஆன்மீகத்தின் பால் நாட்டம் கொண்டிருந்தார். தனது நடத்தையின் மூலம் உழைப்பு மீது மரியாதையும், தூய்மை, ஒழுக்கம் மற்றும் வெளிப்படையான வாழ்க்கை முறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் சமுதாயத்தில் மீண்டும் நிலைநாட்டினார்.
ஸ்ரீ ரவிதாஸ் ஜி பக்தியின் இடையறாத ஓட்டத்தில் மூழ்கியிருந்த மகான்; அவர் சமுதாயத்தில் புதிய விழிப்புணர்வை உருவாக்கினார். பிறப்பை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடுகளை மறுத்த அவர், செயல்களே ஒருவரின் மகத்துவத்திற்கான உண்மையான அளவுகோல் என்று கருதினார். பழமையான மற்றும் பயனற்ற பழக்கவழக்கங்களை விட்டு விலகி, காலத்திற்கேற்ற மாற்றங்களை ஏற்கும் பக்குவத்தை ஏற்படுத்த அவர் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்காற்றினார். அவரது சிந்தனைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவருடைய 41 வாணிகள் (பாடல்கள்) ‘ஷபத்’ என்ற வடிவில் ஸ்ரீ குரு கிரந்த் சாஹிபில் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒரு எளிய குடும்ப பின்னணியில் பிறந்திருந்தாலும், அவரது உன்னதமான பக்தி, சேவை மனப்பான்மை மற்றும் சமுதாயத்தின் மீதான தூய அன்பு காரணமாக காசியில் இருந்த அறிஞர்கள் உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பினராலும் அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டார். காசியின் மன்னர், ஜாலி ராணி மற்றும் மீராபாய் போன்ற அரச குடும்பத்தினரும் அவரை தங்கள் குருவாக ஏற்றுக்கொண்டார். குரு ஸ்ரீ ரவிதாஸ் ஜி மற்றும் மீராபாய் ஆகியோருக்கிடையேயான குரு–சிஷ்ய உறவு, உருவ வழிபாடு மற்றும் அருவ வழிபாட்டின் சங்கமமாகவும், ஜாதி அடிப்படையிலான பாகுபாடுகளை நம்புவோருக்கு ஒரு பாடம் புகட்டும் வகையிலும் உள்ளது.
முஸ்லிம் படையெடுப்பாளர்களின் ஆட்சிக் காலத்தில் நிலவிய கடினமான சூழ்நிலைகளில்,குரு ஸ்ரீ ரவிதாஸ் ஜி பக்தி மரபின் தூய ஓட்டத்தை வழிநடத்தி, தர்மத்தின் மேன்மையை வலியுறுத்தி, மக்களை நேர்மையான வாழ்வுக்கு அழைத்தார். அவரை இஸ்லாமுக்கு மாற்ற பலமுறை முயற்சிகள் பலமுறை மேற்கொள்ளப்பட்டன ஆனால் அவரது பக்தி மற்றும் ஆன்மீக வலிமையை கண்டு, அவரை மாற்ற முயன்றவர்களே பின்னர் அவரது சீடர்களாக மாறினர்.
இன்றைய காலத்தில், சமுதாயத்தில் வர்க்கம் மற்றும் ஜாதி அடிப்படையில் பிளவுபடுத்த பல பிரிவினைவாத சக்திகள் முயலும் நிலையில், பூஜைக்குரிய குரு ரவிதாஸ்ஜியின் வாழ்க்கை நமக்கு அளிக்கும் வழிகாட்டுதலை புரிந்து கொண்டு, நாடும், சமுதாயமும் ஒன்றுபட்டு நிலைத்திருக்க நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.