கதீமா : பரிதாபத்திற்குரிய பணிப்பெண்

மத்திய கிழக்கு நாடுகளில் குறிப்பாக வளைகுடா நாடுகளில் நடைமுறையில் உள்ள தொழிலாளர் ஒப்பந்த முறை ‘கஃபாலா’. அந்த நாட்டில் உள்ள வசதியானவர்களின் வீடுகளிலும், நிறுவனங்களிலும் வேலை செய்ய வெளிநாடுகளில் இருந்து தொழிலாளர்களை வருவித்துக்கொள்ள அந்நாட்டு அரசுகள் அனுமதி அளிக்கின்றன. அவரே வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளியின் சட்டப்பூர்வமான காப்பாளர் (கஃபீல்).
இஸ்லாமியர்களின் புனித நூலில் கஃபாலா விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பணியில் அமர்த்தப்படுபவரின் உரிமைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், செயல்பாடு என்று வரும்போது, விதிமுறைகள் அனைத்தும் செல்லாக்காசாகி விடுகின்றன. கஃபாலா முறையால் அரேபியர்களால் பாதிக்கப்பட்டவர்களில் பிற மதத்தினர் மட்டுமல்ல, இஸ்லாமியர்களும் உண்டு.
பணியமர்த்துபவரின் ஆதிக்க உணர்வும், பணிபுரியும் நாடுகளின் சட்டதிட்டங்கள் உள்ளூர்வாசிகளுக்கே சாதகமாக இருப்பதும், அறவுணர்வற்ற சூழலை உருவாக்கி, தொழிலாளர்களின் கண்ணீர் கதைகளாக உருவெடுக்கின்றன. வேலை அளிப்பதாக அழைத்துக் கொள்ளும் அரேபிய முதலாளியின் கொத்தடிமைகளாக மாறும் அவலம், இந்த 21ஆம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.
உலகம் முழுவதிலும் இருந்து, அதிலும் ஆப்பிரிக்க, தெற்காசிய நாடுகளிலிருந்து லட்சக்கணக்கான ஆண், பெண் தொழிலாளர்கள் இவ்வாறு ஒப்பந்தத் தொழிலாளர்களாக வளைகுடா நாடுகளில் (செளதி அரேபியா, பஹ்ரைன், குவைத், கத்தார், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம்) பணி புரிகின்றனர். இவர்களில் சுமார் 30% பேர் பெண்கள். ஜோர்டான், லெபனான் நாடுகளிலும் இந்த நடைமுறை உண்டு.
இஸ்ரேலில் நடைமுறையில் இருந்த இம்முறை, அந்நாட்டு நீதிமன்றத்தால் 2006ல் ரத்து செய்யப்பட்டது. கஃபாலா ஒப்பந்த முறையை தங்கள் வசதிக்கேற்றபடி மாற்றி அமைத்துள்ள அரசாங்கங்கள், வேலை அளிப்பவருக்கு (முதலாளி என்று வைத்துக் கொள்வோம்) விசா ஏற்பாடு உள்ளிட்ட உச்சபட்ச அதிகாரத்தை அளிக்கின்றன. அதன் காரணமாக, பணியாளரின் பாஸ்போர்ட்டைக் கைப்பற்றி வைத்துக் கொண்டு, தொழிலாளியை சில முதலாளிகள் கொத்தடிமை போல நடத்துகின்றனர். பணியாளரால் அவர்களிடமிருந்து விடுபட்டு வேறு வேலைக்கு மாற முடிவதில்லை; பணியிடத்தில் நல்ல சூழலில் வாழ முடிவதில்லை; இந்த வேலை வேண்டாம் என்று முடிவெடுத்தாலும் கூட, அந்நாட்டை விட்டு வெளியேற முடிவதில்லை.
2020ல் பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த இளம்பெண் ‘ஜெனலின் விலாவண்டே ‘கதீமா’வாகச் சென்று குவைத்தில் முதலாளியால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிக் கொல்லப்பட்டபோது, உலகம் முழுவதிலும் பலத்த கண்டனங்கள் எழுந்தன. கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய முதலாளியால் பாதிக்கப்பட்ட பங்களாதேஷைச் சேர்ந்த சுமி அக்தேர் (2019), முதலாளியின் கொடுமையிலிருது தப்ப மாடியிலிருந்து குதித்ததால், வலது கையை இழந்த தமிழகத்தைச் சார்ந்த கஸ்தூரி முனிரத்தினம் (2015) ஆகியோர் செளதி அரேபியாவில் இருந்து மீண்டு வந்தபோது, கஃபாலாவின் கொடூரத்தை உலகம் உணர்ந்தது.
செளதி அரேபியாவில், 2025 ஜூன் மாதம் முதல் இந்த நடைமுறைக்கு பதிலாக புதிய சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கத்தார் நாட்டில் சில சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 2009ல் பஹ்ரைனில் இந்த ஒப்பந்த முறையில் சீர்திருத்தம் செய்ய முயற்சி எடுக்கப்பட்டது. ஆயினும், இன்னமும் இந்தக் கொடிய ஒப்பந்த முறை சில நாடுகளில் தொடர்கிறது.
இதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கேரளத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்த் கே. சஜி ‘கதீமா; ஒரு பணிப்பெண்’ என்ற அற்புதமான குறும்படத்தை (Khadima: The Caregiver) எடுத்திருக்கிறார். அரபு நாடுகளில் உள்ள குழந்தைகள், வயதானவர்களைப் பராமரிக்க வெளிநாடுகளில் இருந்து பெண் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் குறிப்பிட்ட காலத்திற்கு பராமரிப்பாளராக (கதீமா) நியமித்துக் கொள்வதும் கஃபாலா முறையில் வருகிறது.
14.18 நிமிடங்களே ஓடும் இந்த மலையாளக் குறும்படம், உலக அளவில் கவனத்தை ஈர்த்திருப்பதுடன், பல சர்வதேச விருதுகளையும் கோவிந்த் கே.சஜிக்கு பெற்றுத் தந்திருக்கிறது.
கேரளத்தின் அழகிய கிராமம் ஒன்றிலிருந்து, செளதி அரேபியாவுக்கு பணிப்பெண்ணாகச் செல்கிறாள் ஜானகி. அவளது மகன் சிறப்புக் குழந்தை அச்சு (படத்தில்: அனய் கிருஷ்ணலால்). அவனை தோழியான மரியா கவனித்துக் கொள்கிறாள். நல்ல சம்பளம், நல்ல வேலை என்ற வாக்குறுதியை நம்பி, பல கனவுகளுடன் செல்லும் அவளுக்கு 3 ஆண்டுகள் நடக்கும் கொடுமைகளை சில வசனங்களில் வெளிப்படுத்தி, பார்வையாளர்களை வருந்தவைத்து விடுகிறார் கோவிந்த்.
பணியிடத்தில் முதலாளியால் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தப்படும் ஜானகி, அதனை எதிர்ப்பதால் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறாள். இரண்டு நாட்கள் தண்ணீர் கூட கொடுக்காமல் ஓர் அறையில் அடைத்து வைக்கப்படுகிறாள். பிறகு இஷ்டம் போல அவளைக் கொடுமைப்படுத்துகிறான், முதலாளி சலீம். இதனை நமக்கு தனது மிகையற்ற இயல்பான நடிப்பால், தகவலாகச் சொல்வதன் மூலமாகவே மிக எளிதாகச் சேர்த்து விடுகிறார் ஜானகியாக நடிக்கும் ( அஜிஷா பிரபாகரன்). பாஸ்போர்ட்டைப் பறித்து வைத்துக்கொண்டு, செக்ஸ் அடிமையாக தன்னை முதலாளி (படத்தில்: ரஷீன் கான்) நடத்துவதை அவர்விவரிக்கும்போது,‘போதும், வேண்டாம்’ என்கிறாள் தோழி மரியா (படத்தில்: காயத்ரி கோவிந்த்). தொலைபேசியில் உள்ள வீடியோகால் வசதியைப் பயன்படுத்தி, இருவரும் பேசிக் கொள்வதாக மிகவும் லாகவமாக குறும்படத்தை வடிவமைத்திருக்கிறார், இயக்குநர்.
ஜானகியின் துயரம் கண்டு, அங்கிருக்கும் மற்றொரு மலையாளியான அகமது இக்கா உதவுகிறார். எப்படியாவது இந்தியத் தூதரகம் சென்று விட்டால், அங்கிருந்து மாற்று பாஸ்போர்ட் பெற்றுக்கொண்டு தாய்நாடு திரும்பிவிடலாம் என்ற ஆபத்தான திட்டத்துடன் விமானப் பயணச்சீட்டை வாங்கி வருகிறார் அகமது (படத்தில்: குமார் சுனில்). ஜானகி பாரதம் திரும்பினாளா என்பதே கதை.
விதிவசப்பட்ட மனிதர்களின் பரிதாபகரமான வாழ்க்கை, தனது தாய்க்கு நேரிட்டிருக்கும் விபரீதம் புரியாமல் உலக உருண்டையை உருட்டியபடி நாடுகளின் பெயர்களை ஒப்பிக்கும் சிறப்புக் குழந்தை அச்சு வெளிப்படுத்தும் குறியீடு, மதம் கடந்து உதவி செய்யும் மானுடநேயம், பின்னணியில் மெல்லிய வயலின் இசைக்கோர்ப்பு என, சர்வதேச விருதுகள் தேடிவரத்தேவையான அனைத்தும் இந்தக் குறும்படத்தில் இருக்கின்றன.
கட்டுரையாளர்: எழுத்தாளர்