பஸ்தார் என்றாலே மாவோயிஸ்டுகளின் அட்டூழியங்கள் தான் நினைவுக்கு வருவது வழக்கம். பல தசாப்தங்களாக மாவோயிஸ்டுகளின் பிடியில் பஸ்தார் பிராந்தியம் சிக்கித் தவித்தது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிகழாண்டு மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் பாரதம் முழுவதும் மாவோயிசம் ஒழிக்கப்பட்டு விடும் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளார். இது நனவாகிக் கொண்டிருக்கிறது. மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் வலுவாக இருந்த காலகட்டத்தில், எந்த விழாக்களும் பஸ்தார் பிராந்தியத்தில் கொண்டாடப்பட்டதில்லை. அங்குள்ள மக்கள் எப்போதும் அச்சத்திலேயே உறைந்திருந்தனர். இசை, நடனம், உற்சாகப் பூரிப்பு என்பதெல்லாம் அங்குள்ள மக்களுக்கு அந்நியமாகவே இருந்தன. துப்பாக்கி, கண்ணிவெடி போன்றவைதான் பஸ்தாரில் தொடக்கத்தில் இருந்தன. ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட எவரும் இயல்பாக இருக்க முடியவில்லை.
கடந்த சில மாதங்களாக பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப் பட்டன. மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் இருந்தபோது, பஸ்தார் பிராந்தியத்தில் போக்குவரத்து வசதி, சுகாதார வசதி, தகவல் தொடர்பு வசதி போன்றவை பெயரளவுக்கு மட்டுமே இருந்தன. இப்போது இந்த மூன்று முக்கிய வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அண்மையில் ஹோலிப் பண்டிகை பஸ்தார் பிராந்தியத்தில் உள்ள நாராயண்பூர் மாவட்டத்தில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அபுஜுமத் பகுதியில் உள்ள ஜத்வார், குதுல் போன்ற கிராமங்களில் மக்கள் உற்சாகப் பூரிப்புடன் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். எங்கு பார்த்தாலும் வண்ணங்கள் தெறித்தன. மக்களின் நெஞ்சங்களில் மகிழ்ச்சி தெறித்தது. பள்ளிக் கூடங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி விட்டன. ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பிக்கிறார்கள். மாணவர்கள் நேரம் தவறாமல் பள்ளிக் கூடங்களுக்கு வருகிறார்கள். இருளிலிருந்து வெளிச்சத்துக்கு பயணமாகிக் கொண்டிருக்கிறார்கள்.
செந்தாழ்வாரம் என்று கருதப்பட்ட பஸ்தார் பிராந்தியம் மாவோயிஸ்ட் களையெடுப்புக்குப் பிறகு அமைதியின் வடிவாக மாறி விட்டது. அங்கு மத்திய அரசும், சத்தீஸ்கர் மாநில அரசும் ஒருங்கிணைந்து பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகின்றன. ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, சரணடைந்த முன்னாள் மாவேயிஸ்டுகளுக்கு புனர்வாழ்வு அளிப்பதற்குத் தேவையான எல்லா நடவடிக்கைகளையும் இரு அரசுகளும் இணைந்து எடுத்து வருகின்றன. பஸ்தார் பகுதியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் சில ஆண்டுகளுக்கு முன் கற்பனைக்கும் அப்பாற்பட்டவையாகவே இருந்தன. மாவோயிஸ்டுகள் நீதித்துறையையும் விட்டு வைக்கவில்லை. கட்டப்பஞ்சாயத்து எனப்படும் கங்காரு நீதிமன்றங்களை மாவோயிஸ்டுகள் நடத்தினார்கள். இந்த கங்காரு நீதிமன்றங்கள் தண்டனைகளையும் விதித்தன. மாவோயிஸ்டுகளின் விருப்பம் போல வசூல் வேட்டை நடத்தப்பட்டது. மக்கள் எப்போது, என்ன நடக்குமோ என்ற நிச்சயமற்ற, நிராதரவான நிலையிலேயே பரிதவித்து வந்தனர்.
இப்படிப்பட்ட மக்களின் வாழ்வில் நம்பிக்கை ஒளியை பாய்ச்சியுள்ளது மிகப்பெரிய சாதனையாகும். பல தன்னார்வ அமைப்புகளும் இதில் பங்கெடுத்து கொண்டுள்ளன. `குதுல்’ என்ற கிராமத்தில், ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மாணவர்கள் வண்ணப் பொடியை ஏந்தியபடி வீடு, வீடாகச் சென்று பெரியவர்களின் ஆசிகளைப் பெற்றார்கள். பல தசாப்தங்களுக்குப் பிறகு, இந்த வருடம்தான் ஹோலி கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அதுவும் மக்களுக்கு மனநிறைவைத் தரும் வகையில் வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பஸ்தார் அமைதி குழு உறுப்பினர் ஜெயராம்தாஸ், `இந்தப் பிராந்தியத்தில் மகத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது, இது ஒரே நாளில் திடீரென ஏற்பட்டு விடவில்லை, அச்சத்தின் பிடியிலிருந்து மக்களை மீட்டெடுத்தோம், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் முடிவுக்கு வரப் போகிறது என்பதை எடுத்துரைத்தோம். முதலில் இதை நம்புவதற்கு மக்கள் தயங்கினார்கள். பல்வேறு நல்லெண்ண நடவடிக்கைகள் வாயிலாக மக்களிடம் நம்பிக்கையை விதைத்தோம். இந்த நம்பிக்கை இன்று விருட்சமாக வளர்ந்தோங்கியுள்ளது. இந்த நம்பிக்கைதான் எதிர்கால எழுச்சிக்கான ஆணி வேர்’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் மாவோயிஸ்டுகள் கடந்த காலத்தில் தாங்கள் செய்த தவறுகளை எண்ணி வருந்துகிறார்கள். “எங்களுக்கு யாரும் சரியான முறையில் வழிகாட்டவில்லை. இதனால்தான் பாதை தவறி சென்று விட்டோம். இப்போது உண்மையிலேயே நல்ல பாதை எது, மோசமான பாதை எது என்பதை உணர்ந்து திருந்தி விட்டோம். நாங்கள் இனிமேல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபடுவோம். தேசிய நீரோட்டத்தில் நாங்களும் சங்கமித்து விட்டோம்’’ என்று முன்னாள் மாவோயிஸ்டுகள் கூறுகின்றனர்.
பாரதத்திலேயே சத்தீஸ்கரில் உள்ள பஸ்தார்தான் மாவோயிஸ்டுகளின் சொர்க்கபுரியாக விளங்கியது. அடர்ந்த காட்டுப்பகுதி, போக்குவரத்து வசதியே இல்லாத சூழ்நிலை போன்றவற்றால், இந்த பிராந்தியம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. இதனால்தான் மாவோயிஸ்டுகள் இங்கு `போட்டி அரசை’ நடத்தி வந்தார்கள். இப்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது. எதிர்காலத்தில் வேறு எங்கும் மாவோயிஸ்டுகள் தலைதூக்க முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டு விட்டது. மத்திய அரசும், மாநில அரசும் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் வாயிலாகவே இதை சாதிக்க முடிந்துள்ளது. வருங்கால பாரதத்தில் மாவோயிஸ்டுகளுக்கு ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பு கூட கிடையாது என்பதை பஸ்தாரில் ஏற்பட்டுள்ள திருப்பம் நிலைநாட்டியுள்ளது. இதை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு, மற்ற பகுதிகளிலும் மாவோயிஸ்டுகளை துடைத்தெறியும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை குஜராத் முதல் அருணாச்சலப் பிரதேசம் வரை வரவேற்பும், ஆதரவும் பெருகி வருகின்றன.
கட்டுரையாளர் : செய்தியாளர்
ஆர்கனைசர் ஆங்கில இணையத்திலிருந்து
தமிழில் : அடவி வணங்கி