வான் சிறப்பு அதிகாரத்தின் முதல் குறளான “வான்நின்று உலகம்…” எனும் குறளில் மழையை அமிர்தம் என்று எண்ணத்தக்கதாகும் என வான் மழையின் சிறப்பையும் அதன் மாண்பையும் வள்ளுவர் எடுத்துரைக்கின்றார்.
வாழும் உயிர்களுக்கு ஜீவாதாரமான நீரை தரும் மழைகாலம் நம் தமிழகத்தில் தற்போது ஆரம்பித்துள்ளது, இதை நாம் எப்படி பயன்படுத்திக்கொள்ளபோகிறோம், அதை நமது நிலத்தின் பொது நீராதாரங்களாகிய ஏரி, குளம், குட்டை, கண்மாய் போன்றவற்றில் சேகரித்து பயன்படுத்தப்போகிறோமா, நம் நிலங்களில் உள்ள பண்ணை குட்டைகள், மழைநீர் சேகரிப்பு அமைப்புகள், கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் போன்றவற்றில் சேகரித்து நிலத்தடி நீர் மட்டத்தை பெருக்கி புத்திசாலிதனமாக பயன்படுத்தப்போகிறோமா அல்லது வழக்கம்போல வீணாக கடலில் கலக்கவிட்டு அரசை குற்றம் சாட்டி போராட்டம் நடத்துவது, பிறமாநிலங்களிடம் கையேந்தி நிற்பது, நீதிமன்றத்தில் முறையிட்டு காத்துகிடப்பது என இருக்கப்போகிறோமா என்பது நம் கையில்தான் உள்ளது.
மழைநீர் சேகரிப்பு என்பது ஏதோ சில காலங்களாக ஏற்படுத்தப்பட்ட விஷயம் அல்ல, உலகில் மழைநீர் குறைவாக கிடைக்கும் அனைத்து இடங்களிலும் நம் முன்னோர்களால் பல்லாயிரம் வருடங்களாக தொடர்ந்து இருந்து வரும் நடைமுறைதான் இது. தமிழகத்தில் நமது முன்னோர்கள் இதனால்தான் இயற்கையான நீர்நிலைகளுடன் சேர்த்து ஆயிரக்கணக்கான குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளை வெட்டியும் அதனை ஒன்றுடன் ஒன்று இணைத்தும் வைத்து பாதுகாத்தனர், நீர்நிலைகளில் குளிப்பவர்கள் அதில் இருந்து ஒருகைப்பிடி மண்ணை எடுத்து கரையில் வைத்த பின்புதான் குளிக்கவேண்டும் என ஒரு நியதியையும் வகுத்து இயற்கையாகவே அவைகளை தூர்வாரி விசும்பின் துளியாகிய மழைநீரை சேமித்தனர்.
வள்ளுவரை போன்றே நீரின் சேமிப்பை உலகறிய செய்த பெருமை நம் தமிழகத்தையே சாரும் என்றால் அது மிகை அல்ல அதற்கு நம் தமிழகத்தில் இன்றுவரை உயிரோட்டமாக இருக்கும் உலகின் முதல் அணையான கல்லணையே சாட்சி, கல்லணையை கட்டி நீர் தேக்கி பாசனத்திற்கு பயன்படுத்திய கரிகாலசோழனின் வரலாற்றைதான் உலகறியுமே. ஆனால் நீர் இன்றி அமையாது உலகு என நன்றாக அறிந்திருந்தும் கடந்த 60 வருடங்களாக மக்கள்தொகை பெருக்கத்திற்கேற்ப புதிய அணைகளை அதிகம் கட்டாமல், இருப்பவற்றையும் சரியாக பராமரிக்காமல், கிடைக்கும் மழைநீரையும் சேமிக்காமல் கடலில் வீணாக்கி வருகின்றனர் நம் மக்கள். அது மட்டுமா!!! மணல் கொள்ளை, ஏரி குளங்கள் ஆக்கிரமிப்பு, நீரின் பாதைகளை அடைத்தல், ஆழ்குழாய் மூலம் நிலத்தடி நீரை தேவைக்கு அதிகமாக உறிஞ்சுதல், ஆறுகளை மாசுபடுத்துதல், நீர் மறுசுழற்சிக்கு குறைந்த முக்கியதுவம் என அரசும் பொதுமக்களும் பல்வேறு வகைகளில் நீராதாரங்களை வீணாக்கி வருகிறோம்.
மழைநீர் சேகரிப்பின் முக்கியதுவம் என்பது தமிழகத்திற்கு மட்டும் அல்ல நம் தேசத்தில் மழை குறைவாக பொழியும் மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான், உத்திரபிரதேசம் உட்பட 15க்கும் மேற்பட்ட மாநிலங்களுக்கும் அதிகம் தேவை இதைதான் அங்கு நம் முன்னோர்கள் ஏற்படுத்திய ஏரிகளும் குளங்களும் நமக்கு உணர்த்துகின்றன. நம் நாடு மட்டும் அல்ல பாலஸ்தீன், கிரீஸ் உட்பட மழை குறைவாக பொழியும் பல நாடுகளில் மழைநீர் சேகரிப்பு என்பது 4000 வருடங்களுக்கு முன்பே இருந்துள்ளது என்பதை வரலாறும் நமக்கு உணர்த்துகிறது.
ஐந்து தலைமுறைகளாக மகாத்மா காந்தியின் குடும்பத்தினர் வாழ்ந்துவந்த குஜராத்தில் உள்ள போர்பந்தர் வீட்டில்கூட தாழ்வாரத்தின் அடியில் மழைநீர் சேகரிப்பிற்கென 20 அடி நீளம், 20 அடி அகலம், 15 ஆழமும் கொண்ட சுமார் 75000 லிட்டர் கொள்ளவு கொண்ட ஒரு தொட்டியை அமைத்திருந்தனர். அவர்கள் வாழும் பகுதியில் நிலத்தடி நீர் மிகுந்த உப்புதன்மையுடன் கடினமாக இருப்பதால் சமையலுக்கு உபயோகிக்க இயலாததாக இருக்கிறது. ஆகவே காந்தியின் வீட்டில் மழை நீரை இந்தப் பெரிய தொட்டியில் சேகரித்து வருடம் முழுவதும் உபயோகப்படுத்தி வந்தனர்.
மழைநீர் சேகரிப்பிற்கென நமது மத்திய அரசின் நீர்வள அமைச்சகமும், நிலத்தடி நீர்வள வாரியமும் ஆராய்ச்சிகள் பல செய்து நமக்கு பல்வேறு உத்திகளையும் ஆலோசனைகளையும் தொடர்ந்து வழங்கிவருகிறது, நமது மாநில அரசும்கூட இதற்கு உதவி வருகிறது ஆயினும் அனைத்தையும் அரசே செய்யவேண்டும் என அரசை மட்டுமே நம்பி இருக்காமல் மக்களும் தங்களால் முடிந்தவரை மழை நீரை சேகரித்து பயன்படுத்துவதுடன் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதில் தங்களுடைய பங்களிப்பையும் வழங்கமுடியும். உதாரணமாக கிராமத்தில் உள்ளவர்கள் தங்கள் நிலங்களில் அரசின் மானியத்துடன் பண்ணைகுட்டைகள் அமைத்தல், பயன்படுத்தும் அல்லது தூர்த்துபோன கிணறு, ஆழ்குழாய் கிணறுகளில் மழைநீரை சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், ரீசார்ஜ் டிரன்ச் போன்றவற்றில் வண்டல், குப்பைகள் இல்லாமல் வடிகட்டிய மழைநீரை சேகரித்து பயன்படுத்தலாம்.
கான்கிரீட் மயமாகிப்போய், நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாய் குறைந்து அபாய அளவை தொடும் நிலையில் குடிநீர் பஞ்சத்தை வருடாவருடம் சந்தித்துவரும் நகர்புற மக்களும் பூமிக்கடியில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள், கிணறுகள், ரீசார்ஜ் குழிகள், ரீசார்ஜ் ஆழ்குழாய் கிணறுகள் போன்றவற்றின் வாயிலாக வடிகட்டிய மழைநீரை சேமிக்க வேண்டியது தங்களின் எதிர்கால தண்ணீர் தேவையை சமாளிக்க மிகவும் அவசியமாகவே உள்ளது.
மேகத்தை ஈர்த்து மழையை வரவழைக்க மட்டும் அல்ல அந்த நீரை நிலத்தின் அடியில் இயற்கையாக கொண்டு சென்று சேமிக்கவும் மரங்கள் நமக்கு மிகவும் பயன்படுகிறது எனவே நகர்புறமோ கிராமபுறமோ அனைத்து பகுதிகளிலும் மரம் நடுதல் என்பது தொலைநோக்கு பார்வையில் நமக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்பதை உணர்ந்து நாம் ஒவ்வொருவரும் நம்மால் முடிந்த அளவு மரங்களை நட்டு அதனை பேணிகாக்க வேண்டும்.
மாநில அரசும் சட்டங்களை இயற்றுவதுடன் நின்றுவிடாமல் மழைநீர் சேகரிப்பின் முக்கியதுவத்தை உணர்ந்து மக்களுடன் இணைந்து அதற்கான வழிமுறைகளை மேற்கொள்வது மிக அவசியம். நாங்கள் அணைகள் கட்டி தண்ணீரை சேகரிக்கமாட்டோம், அது எங்களால் முடியாதது அதனால் மற்ற மாநிலங்களும் அணைகளை கட்டக்கூடாது என வீணாக மல்லுக்கு நிற்ப்பதைவிட சிறிய பெரிய தடுப்பணைகளை ஆங்காங்கே கட்டுவது, ஏரி குளங்கள், அணைகளை தூர்வாருதல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் போன்றவற்றை திட்டமிட்டு விரைவாக செயல்படுத்த வேண்டும் மேலும் மழைநீரை சேமிக்க புதிய உத்திகளை ஆராய்ந்து வகுத்து அதனை செயல்படுத்த வேண்டும்.
உதாரணமாக நகர்புற பகுதிகளில் மழைநீர் வடிகால் கட்டி அதை வீணாக கடலில் கொண்டு சேர்ப்பதற்க்கு மாற்றாக மழைநீர் வடிகால் கால்வாயில் 30 மீட்டர் இடைவெளிக்கு ஒரு ரீசார்ஜ் போர்வெல் 20 மீட்டர் ஆழத்திற்கு அமைத்து அதில் பாயும் மழைநீரை வடிகட்டி பூமியினுள் செலுத்தி நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்தல். நீர் தேக்கங்களில் தெர்மாகூல் அட்டை யோசனைகளுக்கு மாற்றாக தாமரையை விதைத்து அதனை கொண்டு நீர் ஆவியாதலை தடுத்தல், குஜராத் அரசை போல சோலார் பேணல்களை நீர் வழிதடங்களின் மீது அமைத்து நீர் ஆவியாவதை குறைப்பதுடன் சூரியஒளி மின் உற்பத்தியையும் அதிகரித்தல் போன்ற பல முறைகளை செயல்படுத்தி மழைநீரை சேமித்து நீராதாரத்தை பெருக்கலாம்.
நமது பிள்ளைகளின் எதிர்காலத்திற்கென அவர்களுக்கு சிறந்த கல்வி, நல்ல வேலையை தேடி தருவதிலும், பணம் சொத்து போன்றவற்றை சேகரித்து வைப்பதிலும்தான் அதிக கவனம் செலுத்துகிறோம் ஆனால் நமக்கு இருப்பது ஒரு பூமி அதில் நம் தலைமுறைகள் வாழ நீர் இன்றியமையாது, நீர், நிலம், காற்று போன்றவை மாசுபடாமல் பாதுகாக்கப்படவேண்டியது மிகவும் அவசியம் என்பதை இனியாவது உணர்வோம், அன்னை பூமியை காப்போம்.