ராஷ் பிஹாரி போஸ்

ராஷ் பிஹாரி போஸ் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் புரட்சி செய்த பாரத விடுதலைப் போராட்ட வீரர். வெளிநாட்டில் வாழ்ந்த பாரதியர்கள், தேச விடுதலைக்கு உதவும் பொருட்டு தொடங்கிய கதர் கட்சியின் அமைப்பாளர்களில் ஒருவர். இந்திய தேசியப் படையை நிறுவியவர். “ஆசாத் ஹிந்” அரசு அமைத்து போர்ப்படை நடத்திய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் முன்னோடியாவார்.
1886-ம் ஆண்டு மே மாதம் 25ம்தேதி மேற்கு வங்காளம், பர்த்வான் மாவட்டத்தில் உள்ள சுபல்தகா கிராமத்தில், வினோத் பிஹாரி போஸின் மகனாகப் பிறந்தார்.

சந்தன் நகரில் தனது கல்வியை முடித்த ராஷ் பிஹாரி, இளமையிலேயே அரவிந்தர் உள்ளிட்ட புரட்சி இயக்கத்தினருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். குதிராம் போஸ் 1908ல் நடத்திய குண்டுவீச்சால் ஆங்கிலேய அதிகாரியின் குடும்பத்தினர் கொல்லப்பட்டதால், அலிப்பூர் சதி வழக்கு தொடரப்பட்டது. அதில் அரவிந்தர் கைது செய்யப்பட்டார். ராஷ் பிஹாரி போஸும் அந்த வழக்கில் தேடப்பட்டார்.

அங்கிருந்து தப்பி டேராடூனில் வனவியல் ஆய்வு மையத்தில் தலைமை எழுத்தராகச் சேர்ந்து பணி புரிந்தார். 1912ம் -ஆண்டு டிசம்பர் மாதம் டில்லியில் வைசிராய் ஹார்டிங் பிரபுவின் மீது குண்டு வீசிவிட்டு, இரவு ரயிலிலேயே டேராடூன் திரும்பிய ராஷ், எதுவும் அறியாதவர் போல மறுநாள் பணியில் ஈடுபட்டார். புரட்சியாளர் அமரேந்திர சட்டர்ஜியுடன் ஏற்பட்ட நட்பின் விளைவாக யுகாந்தர் புரட்சி இயக்கத்தில் இணைந்தார்.

முதல் உலகப் போரை பயன்படுத்தி, பாரதத்திலிருந்து ஆங்கிலேயரை விரட்ட. ஆங்கிலேயப் படைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டம் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூளையாக ராஷ் செயல்பட்டார். ரகசிய ஒற்றர்கள் உதவியுடன் கதர் புரட்சியை அறிந்த ஆங்கிலேய அரசு, கடும் நடவடிக்கை எடுத்ததால், நாடு முழுவதும் புரட்சியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆங்கிலேய அரசு பல இடங்களில் செய்த கொடூரமான நடவடிக்கைகளால் புரட்சியை நசுக்கியது. இதில் ஈடுபட்ட தலைவர்களுடன் ராஷ் பிஹாரி போஸும் ஜப்பானுக்கு தப்பினார். சொமோ ஐசோ என்பவரது மகளைத் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு 1923ல் ஜப்பானின் குடியுரிமையாளராக மாறிய ராஷ், பத்திரிகையாளராகவும், எழுத்தாளராகவும் பணிபுரிந்து வந்தார்.

ஜப்பானில் மாதவன் நாயருடன் இணைந்து, பாரத விடுதலை வீரர்களுக்கு ஜப்பானின் ஆதரவு கிடைக்க செய்தார். பாரத விடுதலைப் போராட்டத்திற்கு கடல்கடந்த ஆதரவு அளிப்பதாக ராஷ் பிஹாரி அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக ‘இந்திய சுதந்திர லீக்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.

1942, ஜூன் 22ல் பாங்காக்கில் போரினால் மட்டுமே பாரதத்திற்கு விடுதலை சாத்தியமாகும்; அதற்கான போர்ப்படைக்கு தலைமை தாங்க நேதாஜி முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். பர்மாவிலும், மலேசியாவிலும், ஜப்பான் படையால் கைது செய்யப்பட்ட பாரத போர்க் கைதிகளைக் கொண்டு ஜப்பான் ராணுவ அதிகாரிகளிடம் பேசி, இந்திய தேசிய ராணுவத்தை (INA) 1942, செப்டம்பர் 1-ல் அமைத்தார்.

பிரிட்டிஷ் அரசின் வீட்டுக் காவலில் இருந்து தப்பிய சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பானுக்கு சென்றபோது, அவரை ராஷ் பிஹாரி, இந்திய சுதந்திர லீகின் தலைமைப் பொறுப்பை ஏற்குமாறு கூறினார். ‘அதன்பிறகு ஜப்பான் அதிகாரிகளுடன் பேசிய நேதாஜி, முடக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தை மீண்டும் கட்டமைத்தார்.

இரண்டாம் உலகப்போர் நடந்தபோது, ஜப்பான் வீழ்ச்சி அடைந்தது. இப்போரில் நேதாஜி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ராஷ் பிஹாரி போஸும் 21.01.1945ல் போரில் கொல்லப்பட்டார். ஜப்பான் அரசு ராஷ் பிஹாரி போஸின் வீரத்தை மெச்சி, அவருக்கு மறைவுக்குப் பிந்தைய ‘ORDER OF RISING SUN’ என்ற உயர் விருதை வழங்கிச் சிறப்பித்தது.