மெல்லத் தமிழினிச் சாகும் –
அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்
என்றந்தப் பேதை உரைத்தான்’
இவை மகாகவி பாரதியாரின் ‘தமிழ்த்தாய்’ எனும் கவிதையின் வரிகளாகும். அவர் சொல்ல வந்த கருத்து: ”மேற்கத்திய நாட்டு மொழிகள் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களின் இயக்கங்களது நுணுக்கங்களை எடுத்துச் சொல்கின்றதனால், அந்த மொழிகள் வளர்ந்து கொண்டே போகின்றன.
தமிழில் அத்தகைய உயர்ந்த அறிவியல் துறைகள் இல்லை. அவற்றைத் தமிழில் எடுத்துரைக்க தமிழறிஞர்கள் முயற்சி செய்வதில்லை. அது மட்டுமன்றி அவற்றை எடுத்துச் சொல்வதற்கான சொல் வளம் தமிழ்மொழியில் இல்லை. எனவே தமிழ்மொழி இனிமேல் மெல்ல மெல்லச் சாகும். அந்த மேலை நாட்டு மொழிகளே உலகில் தலையெடுத்து நிற்கும்” என்று அந்த மூடன் கூறினான்.
ஐயோ இந்த வசைச் சொல் என் காதிற்கு வந்திருப்பது நியாயமா? அன்பர்களே, எல்லாத் திசைகளுக்கும் பயணம் செய்து அறிவியல் வளங்கள் அனைத்தையும் இங்கே கொண்டு வந்து குவியுங்கள்’ என்பதாகும். அவர் ‘தாய்மொழி மீது பற்றின்றி மற்ற அறிவியல் தகவல்களைக் கற்று அறிஞர்களான அனைவரையுமே பேடிக் கல்வி பயின்று உழல் பித்தர்கள்’ என்று கூறுகிறார்.
அவர் ‘சமூகம்’ என்னும் நூலில் எழுதிய ‘தேசியக் கல்வி’ என்ற கட்டுரையில் ‘தேசிய மொழியின் மூலமாகவே எண் எழுத்து, வரலாறு, பௌதீகம், அறிவியல், பூகோளம், சமயம், ராஜ்ய சாஸ்திரம், பொருள் நூல் எல்லாவற்றையும் கற்பிக்க வேண்டும். கைத்தொழில், விவசாயம், தோட்டப் பயிற்சி, சரீரப் பயிற்சி, யாத்திரைப் பயிற்சி போன்றவற்றை முறையாகத் தந்து நாட்டினரை நல்ல தர்ம வீரர்களாக ஆக்க வேண்டும்.
தேசத்தின் வாழ்வுக்கும், மேன்மைக்கும் தேசியக்கல்வி இன்றியமையாதது. தேசியக்கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை, தேசம் என்று சொல்லுதல் தகாது. அது மனித பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடு ஆகும்’ என்று எழுதுகிறார்.
இத்தனைக்கும் பாரதியார் பண்மொழிப் புலவர். அவர் தமது படைப்புகளின் மூலம் பாட்டு, கவிதை, கட்டுரை, சிறுகதை, பெருங்கதை, வர்ணனை, மொழிபெயர்ப்பு அனைத்தையும் செய்து தாமே அதற்கு முன்னுதாரணமாகவும் திகழ்ந்திருக்கிறார். இத்தகைய தமிழ் மீது உண்மையான காதல் கொண்ட அறிஞர்களது பாதையினைத் தற்கால தமிழ் சமூகம் பின்பற்றாமல் இருப்பது கண்கூடு.
அந்த நிலையின் உச்சகட்டமாக, சமீபத்தில் நாளிதழில் வெளியான செய்தி தமிழ்ப் பற்றாளர்களைத் துடிக்கச் செய்துள்ளது. அது தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்து, அதற்கான நுழைவுத் தேர்வு எழுதியவர்களில், 85,000 பேர் தமிழ்ப் பாடத்தில் தோல்வியடைந்ததுதான். இவர்களில் பலர் பி.ஹெச்.டி உள்ளிட்ட உயர் கல்வி பயின்றவர்கள்.
அவர்கள் தமிழில் 50-க்கு, 20 மதிப்பெண்கள்கூட பெறவில்லை. இந்தத் தகுதித் தேர்வுக்கான வினாக்கள் 9,10 வகுப்பு தமிழ்ப்பாடங்களிலிருந்து கேட்கப்பட்டவை. தேர்வர்களில் பலர் ஆங்கிலவழிக் கல்வி பயின்றிருக்கலாம்.
வகுப்பு 10 வரை மட்டுமே தமிழுக்கு முக்கியத்துவம் உள்ளது. 11,12-ஆம் வகுப்பு மொழிப் பாடங்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் பின்னுக்குத் தள்ளப்பட்டன. சமீபத்தில்தான் கல்லூரிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக்கப்பட்டது. எனவே தமிழ் என்பது பேசுவதற்கும், 10-ஆம் வகுப்பு வரை படிக்க மட்டுமே என்ற நிலையில் இருக்கிறது.
தமிழ் அறிவு பெற வேண்டிய நிலையில் மாணவர் மட்டுமல்ல ஆசிரியர்கள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினரும் இருக்கும் நிலையில் தமிழகம் இருக்கிறது என்பது கசப்பான உண்மை. தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையோ பரிதாபமாக உள்ளது.
‘ஆசிரியர் தகுதித் தேர்வின் வாயிலாக பணி நியமனம் பெறாத ஆசிரியர்கள், அப்பணியில் தொடர வேண்டுமெனில், இரண்டு ஆண்டுகளுக்குள் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்’ என்று கடந்த செப்டம்பரில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆயினும் ஆசிரியர்கள் தேர்வினை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கின்றனர். இதற்குக் காரணம் போதிய கல்வி வளமின்றி முறையற்ற வழியில் நியமனம், ஆசிரியர்கள் கல்வியில் கரைகண்டவர்களாக இருக்க வேண்டும்.
அவர்களது வாழ்க்கை உயர்ந்த உதாரணமாக இருக்க வேண்டும். தவறு செய்த மாணவர்களைத் தண்டிக்கும் அதிகாரம் பெற்றிருக்க வேண்டும். இந்த மூன்றும் ஆசிரியர்களுக்கு இருந்தால் மட்டும் போதாது.
தெய்வ பக்தி, தேசபக்தி, அறநெறி, பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்ட அம்சங்களை மற்ற பாடங்களுக்கு இணையாகப் பாடத்திட்டத்தில் புகுத்தி, அவற்றை உண்மையாகவே போதித்தால் மட்டுமே மாணவர் சமுதாயத்தைச் செம்மையாக்க முடியும்.
‘தமிழ், தமிழ்’ என்னும் வெற்று மேடை முழக்கங்களால் தமிழ் மட்டுமல்ல, நல்லன எதுவுமே வளராது. தமிழும், தமிழ் நிலமும், பாரத தேசமும் உயர்வடைய ஒரே வழி பெற்றோர்கள், ஆசிரியர்கள், பிரஜைகள், மாணவர்கள் என அனைவரும் தெய்வ பக்தியும், தேசபக்தியும், நல்லொழுக்கமும் உடையவர்களாக, தத்தமது மொழிகளில் காதல் கொண்டவர்களாக இருந்தபடி ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும், பல்துறைகளிலும் வளம் பெற்று பாரதியின் வழியில் பயணிப்பதே.
நன்றி: ஸ்ரீராமகிருஷ்ண விஜயம்,
ஜனவரி 2026