நாடு முழுவதும் ஸ்வயம்சேவகர்கள் சங்க நூற்றாண்டை ஒட்டி வீட்டுத் தொடர்பு பேரியக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். சிறப்பு நிகழ்ச்சியாக ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன் பாகவத் டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களுரு ஆகிய பெருநகரத்து சான்றோர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் கடந்து வந்த 100 ஆண்டு பயணம் பற்றிய விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார். டெல்லியை அடுத்து 2025 நவம்பர் 8, 9ல் பெங்களூருவில் நடந்த அந்த நிகழ்வில் பொதுவாழ்க்கைப் பெருமக்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கும் மிக விளக்கமாக பதிலளித்தார் பாகவத். இங்கே சில பகுதிகள்:
ஹிந்து ராஷ்ட்ரம் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில் மோகன் பாகவத், “பொங்கல் பண்டிகையை கொண்டாடி, கோயில்களுக்குச் செல்லும் தமிழகத்தின் திராவிடக் கருத்தியலாளர்கள் அனைவரும் ஹிந்துக்களே. “எங்களுக்கு எல்லா மதங்களும் சமம்” என்று சொல்பவர்கள் அனைவரும் ஹிந்துக்கள். ஆர்க்டிக்கிலிருந்து அண்டார்டிகா வரையிலும், மேற்கிலிருந்து கிழக்கு வரையிலும், இதைத் தங்கள் மனோபாவத்தால் பிரகடனப்படுத்துபவர்கள் அனைவரும் ஹிந்துக்கள்” என்றார். “தாய்நாடு” என்பதும் “பாரத மாதா” என்பதும் காலனிய காலகட்டத்திற்குப் பிந்தைய கருத்துக்கள் அல்ல. வேதங்களும், சாஸ்திரங்களும் பாரதத்தைப் பற்றி கூறுகின்றன. மகாபாரதத்தில் பிருத்வி சூக்தம் பூமி நம் தாய் என்கிறது. 140 கோடி குடிமக்கள் ஹிந்து ராஷ்ட்ரம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தால், நாளை காலையே இது ஹிந்து ராஷ்ட்ரம்தான்; இது நடக்கும் என்றார் திட்டவட்டமாக.
ஹிந்துத்துவம் என்கிற பரவலான குடையின் கீழ் யார் வேண்டுமானாலும் வரலாம். தர்மத்தையும், கலாச்சாரத்தையும் கடைப்பிடித்து “ராஷ்ட்ரம்” என்ற உணர்வோடு இருக்கும் அனைவரையும் ஹிந்துவே − சைவம், வைணவம், சாக்தம், காணாபத்தியம், கௌமாரம், சௌரம் – இவை ஹிந்து இயல்பை கொண்டிருக்கும் சமயங்கள். ஹிந்து மதத்தில், குறிப்பிட்ட வழிபாட்டின் பரிந்துரை எதுவும் இல்லை. ‘ஹிந்து சமயத்தை எளிமைப்படுத்துதல் என்பதில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை – ‘உண்மையின் அடிப்படையில் செயல்படுங்கள்; கருணையுடன் இருங்கள்; உங்கள் உள்ளத்தையும் மனதையும் தூய்மையாக வைத்திருங்கள்’ என்பதே. ‘ஹிந்து’ என்பது ஒரு மனப்பான்மை. அந்த மனப்பான்மையுடன் ஒருவர் அரசாங்கத்தை நடத்தினால், அது மதச்சார்பற்றதாக இருக்கும். மதச்சார்பின்மை’ என்பது மத விஷயங்களில் அரசு தலையிடக் கூடாது என்பதே. ‘அரசு மதச்சார்பற்றதாக இருக்கலாம். ஆனால், தனிநபர்கள் மதச்சார்பற்றவர்களாக இருக்க முடியாது.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் ஆர்.எஸ்.எஸ் எடுக்கும் முயற்சி பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில் மோகன் பாகவத், எல்லா இடங்களிலும் பெண்கள் சமமாக பங்கேற்காத வரை, பாரதத்தின் முன்னேற்றம் சாத்தியமில்லை என்றார். ஆண்களும், பெண்களும் சமமானவர்கள். அவர்களின் உடலில் இயற்கை வைத்திருக்கும் வேறுபாடுகளைத் தவிர, வேறு எந்த வேறுபாடும் இல்லை. அறிவுபூர்வமாக, மனரீதியாக, அவர்கள் சமமானவர்கள். அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் எதுவும் நடக்காது. யார் உயர்ந்தவர்? யார் தாழ்ந்தவர்? அது தவறான விவாதம். இரண்டும் ஒன்றுக்கொன்று இல்லாமல் முழுமையடையாது. இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். எனவே. பெண்களை வேலையாள் போல் நடத்தாமல், மாத்ருசக்தியாக, ஜகத்ஜனனியாக மதிக்க வேண்டும். அம்மாதான் முதல் ஆசிரியை. மனிதனை படைத்தவள் அம்மா. அவள் அடைக்கலம் தருகிறாள், உணவு தருகிறாள், சம்ஸ்காரம் தருகிறாள். எனவே தயவு செய்து அவள் வேலையைச் செய்ய அவளை அனுமதிக்கவும், அவளுக்கு கல்வி கற்பிக்கவும், அவளுக்கு வாய்ப்பளிக்கவும். அன்னையின் பணிக்கு தடையாக இருக்க வேண்டாம்.

நம் வீட்டு குழந்தைகளுக்கு நாம் பண்பையும், மரியாதையையும் கற்றுக் கொடுக்கத் தவறி விட்ட குறையால், ஹிந்துப் பெண் குழந்தைகள் லவ் ஜிஹாத்தில் ஏமாற்றப்படுகிறார்கள். முஸ்லிம்களில் கணிசமான எண்ணிக்கையினர் மதவாதியாக இருக்கிறார்கள். சிலர் அதை எதிர்க்கிறார்கள். சிலர், ‘இந்த இஸ்லாம் வேறு, அரசியல் இஸ்லாம் வேறு’ என்கிறார்கள். எனவே, அனைத்து இஸ்லாமியர்களையும் ஒரே அடைப்புக்குள் வைப்பது நல்லதல்ல. மேலும், இஸ்லாமியர்கள், இஸ்லாமியர்களுக்கு இஸ்லாத்தைப் பற்றிக் கற்பிக்க வேண்டும்.
ஹிந்துக்களாகிய நாம் மிகவும் வலிமையானவர்கள். நாம் யாரையும் விலை கொடுத்து வாங்குவதில்லை, நாம் யாரையும் மதம் மாற்றுவதில்லை, நாம் யாரையும் பிரிப்பதில்லை. ஆனால் கெட்டவர்களின் கூட்டத்திலிருந்து நல்லவர்களை நாம் பிரிக்க வேண்டும். அதற்கான சக்தி உண்டு. தவறு செய்பவர்கள் பயப்பட வேண்டும். தாங்கள் தவறு செய்தால், தகுந்த பதிலடி கிடைக்கும் என்பதையும், அவர்கள் தவறு செய்யவில்லை என்றால் ஹிந்துக்களிடம் பயப்படத் தேவையில்லை என்பதையும், அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெவ்வேறு நபர்களுக்கு சிகிச்சை வெவ்வேறு.

வசதிக்கான ஆப்கள், எலக்ட்ரானிக் கருவிகள், சமூக ஊடகங்கள் இவை குடும்ப பண்புகளைக் குறைக்கிறது, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) என்ற கண்டுபிடிப்பு, நவீன தொழில்நுட்பத்தின் தாக்கம் நம் குழந்தைகளின் மீது படிகிறது. கலாச்சார சீர்குலைவுகளிலிருந்து நம்மையும், குழந்தைகளையும் எவ்வாறு காப்பாற்றுவது?
இந்த கேள்விக்கு பதிலளித்த ஆர்.எஸ்.எஸ். தலைவர், பாயாசம் பலருக்கு நல்லது, அதே பாயாசம் நீரிழிவு நோயாளிக்கு ஆபத்தானது. எனவே, கருவிகளை, தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதை பயனாளிகளாகிய நாம்தான் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்த முடியாது. மனிதன், ஞானப்பசியில், அறிவு தேடுதலில் இருக்கிறான். அதை நீங்கள் தடுக்க முடியாது. தொழில்நுட்ப வளர்ச்சி நடந்து கொண்டே இருக்கும். மேலும் பசியுள்ள மனிதன் சாப்பிடத் தொடங்கினால், கட்டுப்பாடு இல்லை.
எனவே ஆராய்ச்சிக்கும் கட்டுப்பாடு இல்லை. இன்றோ, நாளையோ புதிய கண்டுபிடிப்புகள் வரும், அதற்கு நாம் தான் தயாராக வேண்டும். தொழில்நுட்பம், மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படலாம் அனைத்து ஆபத்துக்களையும் தவிர்க்கலாம். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில், நம் குழந்தைகளுக்கு சரியான பயிற்சி அளித்தால், அது நல்ல பலனளிக்கும்.
பதப்படுத்தப்பட்ட உணவின் (processed food) நுகர்வு ஆரோக்கியமற்றது; நல்ல ஊட்டச்சத்து, சுகாதாரம் இவை பற்றி குழந்தைகளுக்கு கற்பிப்பது பற்றிய கேள்விக்கு, எந்த வகையான செயற்கை தூண்டுதலும் (artificial stimulant) தரக்கூடிய பதார்த்தங்களை பயன்படுத்தக் கூடாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்கள். குறிப்பாக, போதைப் பொருளையோ, போதை ஏற்படுத்தும் மருந்துகளையோ பயன்படுத்துவது, உண்பது தீங்கு விளைவிக்கும், அதைத் தவிர்க்க வேண்டும். பெற்றோர்களும், குழந்தைகளின் பாதுகாவலர்களும் (Guardians) இந்தப் பழக்கங்களைப் பற்றி குழந்தைகளுடன் பேச வேண்டும். குடும்பங்களில் ஒழுக்கம், குடும்ப பண்புகள் சொல்லித்தரப்பட வேண்டும்.
இயற்கை வளங்களை, சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும், டெல்லி போன்ற பெருநகரங்களில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதிலும், ஆர்.எஸ்.எஸ் வகிக்கும் பங்கு குறித்து, ஆர்எஸ்எஸ் தலைவர் கூறுகையில், ‘தண்ணீரைச் சேமிக்கவும், பிளாஸ்டிக்கை அகற்றவும், மரங்களை நடவும்’ ஆகிய மூன்று அம்சங்களில் குடும்பங்கள் மத்தியிலும் தனிநபர்களின் சிந்தனையிலும், செயலிலும் கொண்டு வர ஆர்.எஸ்.எஸ் முயற்சிக்கிறது. ஒழுங்கும், தூய்மையும் அவசியம். நமது தொழில்நுட்பத்தை, பசுமை தொழில்நுட்பமாக மாற்ற வேண்டும் என்றார்.
அரசியல் குறித்த கேள்விக்கு, அரசியலில் இருந்து விலகி இருக்கிறோம், நாங்கள் கொள்கைகளை ஆதரிக்கிறோம், சரியான கொள்கையை ஆதரிக்க எங்கள் ஆற்றலை பயன்படுத்துவோம். தனிநபரையோ, கட்சியையோ இல்லை. கொள்கையை மட்டும் ஆதரிப்போம். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என விரும்பினோம். இதனால், கோயில் கட்டுவதற்கு ஆதரவானவர்களை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் ஆதரித்தனர். பா.ஜ.க தான் கோயில் கட்ட ஆதரவு தெரிவித்தது. காங்கிரஸ் ஆதரவு தெரிவித்து இருந்தால், அக்கட்சிக்கு தொண்டர்கள் ஓட்டு போட்டிருப்பார்கள். எங்களுக்கு எந்தவொரு கட்சி மீது தனிப்பாசம் ஏதும் இல்லை. எந்தக் கட்சியும் எங்களுடையது அல்ல. நாங்கள் “ராஷ்ட்ர நீதி”யை ஆதரிக்கிறோம். “ராஜ நீதி”யை அல்ல.
அரசியல் கட்சிகள் ஊழல் ஆகியவை பற்றிய அடுத்த கேள்விக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர், கட்சி என்பது ஒரு பார்வை, ஒரு கண்ணோட்டத்தை குறிக்கிறது (perspective) என்று கூறினார். ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு கண்ணோட்டங்கள் உள்ளன. நல்ல சமுதாயம் இருந்தால்தான், நல்ல அரசியல் சாத்தியம். நமது சமூகம் நேர்மையான சமூகமாக இருந்தால், அது ஒருபோதும் உண்மையை விட்டுக் கொடுக்காது. அப்படி நடந்தால், அரசியலில் இருந்து ஊழல் ஒழிக்கப்படும்.
கலை, கலாச்சாரத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மத்திய அரசு வழங்கும் நிதியை கலை மற்றும் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு பயன்படுத்த வேண்டும் என்றார். ஆரோக்கியமான போட்டி இருக்கலாம், ஆனால் விரோதம் இருக்க கூடாது. கலையை வளர்க்கும் கலைஞர்களுக்கு, பார்வையாளர்கள் தேவை. பார்வையாளர்கள் உற்சாகமாக பங்கேற்று கலையையும், கலைஞர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார்.
கல்வியில் வெளிநாட்டு செல்வாக்கு, வெளிநாட்டு பல்கலைக்கழக அச்சுறுத்தல் குறித்தும் மெக்காலேயிசத்திலிருந்து, இடதுசாரி சித்தாந்தத்திலிருந்து கல்வியை விடுவிப்பது எப்படி என்பது குறித்தும் நமது பாடத்திட்டத்தில் பாரம்பரிய கல்வி முறைகளை உள்ளடக்குவதை பற்றியுமான கேள்விக்கு பதில் அளித்த மோகன் பாகவத், தேசிய கல்விக் கொள்கை வரைவு பற்றிக் குறிப்பிட்டார். ஆய்வு மேற்கொள்ள வேண்டும், அரசு சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும், சமூக ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும். இந்த வழியில் கல்வியில் பரிசோதனை செய்ய பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
அண்டை நாடுகள் உறவு, பாரத − சீன உறவு இவை பற்றி சிறந்த புரிதலை எவ்வாறு உருவாக்குவது; திபெத்துடனான எல்லைப் பிரச்சினைகள் குறித்தும் நீதித்துறையில் சீர்திருத்தங்கள் தேவை என்பதை பற்றியும் விளக்கிப் பேசினார் மோகன் பாகவத்.
சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1925ல் நிறுவப்பட்டது, நாங்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா? என்று வினவினார். நாங்கள் தனிநபர்களின் அமைப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளோம், நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. வருமான வரித் துறையும், நீதிமன்றங்களும் ஆர்.எஸ்.எஸ்.ஸை தனிநபர்களின் அமைப்பாகக் குறிப்பிட்டுள்ளன.
நாங்கள் மூன்று முறை தடை செய்யப்பட்டோம். அரசாங்கம் எங்களை அந்த வகையில் அங்கீகரித்தாயிற்று! பதிவு செய்யப்படவில்லையே என்றால், ஹிந்து தர்மம் கூடத்தான் பதிவு செய்யப்படவில்லை! சங்கத்தில் “காவிக் கொடி” குருவாகக் கருதப்பட்டாலும், “பாரத மூவர்ணக் கொடி” மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறோம் என்று மோகன் பாகவத் தெரிவித்தார்.
தென் பாரத மாநிலங்களின் கல்வியாளர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், முன்னாள் ராணுவ உயரதிகாரிகள், டாக்டர்கள், ஆடிட்டர்கள், சமூக ஆர்வலர்கள் மிகுந்திருந்த பார்வையாளர்கள் ஒவ்வொரு பதிலுக்கும், பலத்த கரகோஷம் எழுப்பி, தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
கட்டுரையாளர்: டாக்டர். எம். விஜயா
எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர்