ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட, கனகராஜன் ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் மார்ச் மாதம் நான்காம் தேதி, 1942 ஆம் ஆண்டில் சிதம்பரம் ஆச்சாரி – செல்லம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், கனகராஜன் ஜி. தந்தை தச்சு தொழில் செய்து வந்தார்.
இளம் வயதில் ஊருக்கு அருகே உள்ள தெக்கூர் கிராமத்தில் முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு படிப்பை படித்த பின்னர், மூன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை திருச்சி அருகே உள்ள உள்ள வரகனேரி பள்ளி ஒன்றில் படித்தார். ஆறாம் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்பு வரை காரைக்குடியில் உள்ள பள்ளியில் படித்தார்.
சுதந்திரப் போராட்ட வீரர் சா. கணேசன் தொடங்கிய “கம்பன் விழா” காரைக்குடியில் தொடர்ந்து நடைபெறுவது வழக்கம். அதன் வழியே, “இளங்கோ விழா”, “திருக்குறள் விழா” என பல விழாக்கள் நடைபெறும்
கனகராஜன் ஜி பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சமயத்தில், ஒருமுறை இளங்கோ விழாவிற்கு வருகை புரிந்த சுதந்திரப் போராட்ட வீரர் ம.பொ. சிவஞானம் அவர்கள் கலந்து கொண்டு, சிறப்புரை ஆற்றினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது, ஒரு செய்யுள் ம.பொ.சி.க்கு மறந்து விட்டது, அப்போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த கனகராஜன் ஜி, அந்த செய்யுளை முழுமையாக சொல்ல உதவினார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் ம.பொ.சி அவர்கள், கனகராஜன் ஜியை பாராட்டினார். அங்கிருந்த பலரும் கனகராஜன் ஜியைப் பாராட்டினர். அப்படி பாராட்டியவர்களில் ஒருவர் தான், சங்க கார்யகர்த்தர் வெங்கட்ராமன் ஜி.
அடுத்த சில நாட்களில், கனகராஜன் ஜி படிக்கும் பள்ளிக்கு சென்ற வெங்கட்ராமன் ஜி, அவரை சந்தித்து ஊரில் நடக்கும் ஷாகாவிற்கு அழைத்துச் சென்றார். இந்த நிகழ்வின் மூலமே கனகராஜன் ஜிக்கு, சங்கத் தொடர்பு ஏற்பட்டது.
1959 ஆம் ஆண்டு, கேரளாவின் பாலகாட்டில் முதலாம் ஆண்டு சங்கப் பண்புப் பயிற்சி முகாமை முடித்தார். அதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூரில் இரண்டாம் ஆண்டு சங்கப் பண்புப் பயிற்சி முகாமை முடித்தார்.
1961 ஆம் ஆண்டு, பதினொன்றாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின்னர், ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர தனது மாமாவின் அழைப்பின் பேரில் திருச்சிராப்பள்ளி சென்றார். இரண்டு ஆண்டுகளாக பயிற்சி பள்ளியில் முயன்றும் பலன் கிடைக்கவில்லை.
அப்போது ஒருநாள் சங்க ப்ராந்த ப்ரச்சாரக் இராம கோபாலன் ஜி அவர்கள் திருச்சிக்கு வந்தார்கள். சங்க பத்திரிகையான “தியாக பூமி”யை கவனித்துக் கொள்ள, கனகராஜன் ஜியை சென்னைக்கு வர வேண்டும் என அழைத்தார். கனகராஜன் ஜி வருகிறேன் என சம்மதம் தெரிவித்து சென்னைக்கு புறப்பட்டார். அதற்கு அடுத்த நாள் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர அனுமதி கடிதம் வந்தது.
கனகராஜன் ஜிக்கு மனதில் குழப்பம். தான் மிகவும் விரும்பிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்து ஆசிரியர் ஆவதா? அல்லது இராம கோபாலன் ஜியின் அழைப்பின் பேரில் சென்னை சென்று பத்திரிகை ஆசிரியர் ஆவதா? என சிந்தித்தார். முடிவில் சங்கப் பணிக்கு செல்வது என தீர்மானித்து, 1964ல் சென்னைக்கு வந்தார், தியாக பூமி ஆசிரியராக பொறுப்பேற்றார்.
தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள், 1973 ஆம் ஆண்டு வரை தியாக பூமியின் ஆசிரியராக இருந்தார். திராவிட கருத்துக்கள் மேலோங்கி இருந்த அந்த காலகட்டத்தில், சங்க கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்ல “தியாக பூமி” பத்திரிகை மட்டுமே இருந்தது. நாடு முழுக்க நடந்த பல்வேறு சங்க செய்திகளை தமிழ் மொழியில், தமிழக மக்களிடையே கொண்டு செல்ல தியாக பூமி முக்கியப் பங்காற்றியது. சென்னையில் மாம்பலம் ஷாகா கார்யவாஹ்காக இருந்து, சங்கப் பணியை செய்ததோடு, பத்திரிகை ஆசிரியர் பணியையும் திறம்படச் செய்து வந்தார்.
நேதாஜி அமைத்த “இந்திய தேசிய ராணுவ படை” (ஐ.என்.ஏ.)வின் வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு, பலரையும் பேட்டி எடுத்து, இராம கோபாலன் ஜியின் வழி காட்டுதலில், தியாக பூமி சிறப்பு மலர் வெளியிட்டது.
எமர்ஜென்சி நேரத்தில் “தியாக பூமி” பத்திரிகை தணிக்கை செய்யப்பட்டது. அப்போது கார்யகர்த்தர்களுக்கு ரகசியமாக தகவல்களை கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்கு வகித்தார், கனகராஜன் ஜி. எமர்ஜென்சியின் பெருந்துயரத்தை பொதுமக்களுக்கு கொண்டு செல்ல பல யுக்திகளை கையாண்டார். சில நேரங்களில், காவல்துறையின் அத்துமீறலும் இருந்தது. எனினும், மக்களுக்கு எமர்ஜென்சியின் தீவிரத்தை கொண்டு போய் சேர்ப்பதில் பெரும் பங்காற்றினார்.
எமர்ஜென்சி நெருக்கடி நிலைக்குப் பிறகு, சங்க ஸ்வயம்சேவக் ராமசாமி சேலத்தில் நடத்திய “ஹிந்து மறுமலர்ச்சி” என்ற பத்திரிகையில் பணிபுரிந்தார். அதன் பிறகு 1983 ஆம் ஆண்டு முதல் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பத்திரிகையான “ஹிந்து மித்திரன்”ல் பணிபுரிந்தார்.
பிறகு வி.எச்.பி. மாநில அமைப்புச் செயலாளராக இருந்தார். அதன் பிறகு, “கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை”யின் மாநில அமைப்புச் செயலாளராக இருந்தார். கோயில் பூஜாரிகளை ஒன்றிணைத்து, அவர்கள் மூலம் குலதெய்வ வழிபாட்டை மக்கள் தொடர்ந்து கடைபிடிக்க வலியுறுத்தினார். இவற்றை வேதாந்தம் ஜி வழிகாட்டுதலுடன் செய்தார்.
ராஜாமணி அம்மாளுடன் 1968 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 5ம் தேதி திருமணம் நடந்தது. அவர்களுக்கு முத்து செல்வி, சாந்தா தேவி என்ற இரு மகள்களும், சிவசங்கர் என்ற மகனும் உள்ளனர்.
தான் மிகவும் விரும்பிய ஆசிரியர் பணியைத் துறந்து, சங்கத்திற்காக பத்திரிகை ஆசிரியர் பணிபுரிந்த கனகராஜன் ஜி, நம் அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக திகழ்கிறார்.