நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு பயன்படும் வகையிலான பல்வேறு அமைப்புகளை தொடங்கி, மக்கள் பயன்பெறும் வகையில் பணி செய்து வருகின்றனர். இந்த வாரம் மதமாற்றத்தை தடுத்து உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்த வேலை செய்யும் விஸ்வ ஹிந்து பரிஷத் பற்றி அறிவோம்…
பாரதத்திற்கு சுதந்திரம் கிடைத்தவுடன் உலகம் முழுவதும் இருக்கக் கூடிய ஹிந்துக்களுக்கு பாதுகாப்பாக பாரத அரசு இருக்கும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் மதச்சார்பற்றத்தன்மை பற்றி பேசியவர்கள், ஹிந்துக்களுக்கு உதவி செய்யத் தயாராக இல்லை. ஆர்.எஸ்.எஸ். இரண்டாவது சர்சங்கசாலக் (தலைவர்) பரமபூஜனிய ஸ்ரீ குருஜி அவர்கள் 1951 முதல் பாரதத்திற்கு வெளியில் வாழக்கூடிய ஹிந்துக்களின் நிலைமைகளை பற்றி பலருடன் பேசி வந்தார். 1963ல் சுவாமி விவேகானந்தர் பிறந்த நூற்றாண்டு கொண்டாட்டம் நாடு முழுவதும் நடைபெற்று உற்சாகமான ஒரு சூழ்நிலை நிலவிய காலகட்டம் அது. ஸ்ரீ குருஜி அவர்கள் எஸ்.எஸ் ஆப்தேஜி அவர்களுடன் கலந்து பேசி மதமாற்றத்தை தடுப்பதற்கும் உலகம் முழுவதும் இருக்கக்கூடிய ஹிந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கும் அரசியல் சார்பற்ற ஒரு அமைப்பு தேவை என்று யோசனை செய்யப்பட்டது.
கலியுகாப்தம் 5066 குரோதி ஆண்டு ஆவணி மாதம் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில் 1964 ஆகஸ்ட் 29, 30 தேதிகளில் மும்பையில் சின்மயா மிஷன் தலைமை ஆஸ்ரமமான சாந்தீபனி ஆஸ்ரமத்தில் வைத்து பல்வேறு சமய ஆச்சார்யர்கள் முன்னிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் துவங்கப்பட்டது. (கலியுகத்தில் தர்மத்துக்கு சோதனை வந்தபோது அதே நோக்குடன் அதே கிருஷ்ணனது ஜென்ம தினத்தில் பிறந்தது விஸ்வ ஹிந்து பரிஷத்).
சுவாமி சின்மயானந்தர் தலைவராகவும் எஸ்.எஸ் ஆப்தே ஜி அவர்கள் பொதுச்செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டு ஒரு குழுவானது அமைக்கப்பட்டது.
1966ல் பிராயாகையில் கும்பமேளா நடைபெறும்போது உலகம் முழுவதும் உள்ள ஹிந்து மக்களை அழைத்து மாநாடு நடத்துவது என்றும், அதற்கு முன்பு பாரத நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு துவக்கப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. 1964ம் ஆண்டு தீபாவளி நேரத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அகில பாரத கூட்டத்தில் இந்த அமைப்பு உருவாவதற்கு சங்கம் எல்லா விதத்திலும் ஒத்துழைப்பு கொடுப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. 1965 மே மாதம் ஆர்.எஸ்.எஸ். முகாமில், எல்லா மாநிலங்களில் இருந்தும், பரிஷத் பணிக்காக ஒரு பொறுப்பாளரை நியமனம் செய்தனர்.

தமிழகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் உதயம்:
தமிழகத்தில் அன்று ப்ராந்த ப்ரச்சாரக்காக (மாநில அமைப்பாளராக) இருந்த இராமகோபாலன் ஜி அவர்களும், வழக்கறிஞர் சம்பத்குமார் அவர்களும் பரிஷத் பணிகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஸ்தாபக பொறுப்பாளராக வீரத்துறவி ராமகோபாலன் ஜி அவர்களும், தலைவராக திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளும் பொறுப்பேற்று தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தனர். திட்டமிடப்பட்ட நாட்களில் ராமகோபாலன் ஜி அவர்கள் சுற்றுப்பயணம் செல்வார். அந்த ஊரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் பொறுப்பாளர்களுடன் சேர்ந்து உள்ளூரில் உள்ள பெரியவர்கள் மற்றும் மக்களை தொடர்பு கொண்டு கூட்டம் நடத்துவார்.
அந்த ஊரிலுள்ள முக்கியஸ்தர்களுடன் பேசி விஸ்வ ஹிந்து பரிஷத் பொறுப்பாளர்களை அறிவிப்பார். இதுபோல் பல கிராமங்களுக்கும் சென்று, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை வளர்க்கும் முயற்சியை மேற்கொண்டதுடன், எல்லா மாவட்டங்களிலும் கிளைகள் ஆரம்பிக்கும் பணியையும் மேற்கொண்டார்.
திருநெல்வேலி, விடிந்தகரை கிராமத்தில் தாய் மதம் திருப்புதல்:
தமிழகத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் வந்து கடலோரப் பகுதியில் உள்ள மீனவர்களை கட்டாயமாக மதம் மாற்றி இருந்தார்கள். அதன் காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் கிறிஸ்தவ மக்கள் அதிகமானார்கள். அத்துடன் இல்லாமல் நாடார் சமுதாயத்தையும் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரையும் மதம் மாற்றினார்கள். பாதிரியார்களின் கொடுமை தாங்காமல் கடலோரப் பகுதியான கூடங்குளம் அருகில் விடிந்தகரை கிராமத்திலுள்ள மீனவ குடும்பங்கள் தாய் மதமான ஹிந்து மதத்திற்கு திரும்ப தீர்மானித்தனர். 1967 அக்டோபர் மாதம் 27ஆம் தேதி, 876 கிறிஸ்தவ மீனவர்கள் தாய் மதம் திரும்பி வந்தனர்.
அன்றைய ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் ஸ்ரீ குருஜி அவர்கள் இந்த செய்தியை ‘தெற்கிலிருந்து தாய் மதம் திருப்பும் நிகழ்ச்சி கடல் அலை போல எழுந்து வருகிறது’ என்று தெரிவித்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு, விஸ்வ ஹிந்து பரிஷத் பணிகளை விரிவுபடுத்துவதற்காக ஆர்.எஸ்.எஸ் வேண்டுகோளின் படி பல பொறுப்பாளர்கள் முழு நேர ஊழியர்களாக விஸ்வ ஹிந்து பரிஷத்தில் பணியாற்ற முன்வந்தார்கள். 1980-81ல், தமிழகத்தில் நடந்த மீனாட்சிபுரம் மதமாற்றம், மண்டைக்காடு கலவரம் போன்ற நேரத்தில், ஹிந்துக்களுக்கு உதவி செய்ய அனைத்து ஹிந்து அமைப்புகளிலும் இருந்தவர்கள் சேர்ந்து வேலை செய்தனர். இதில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பங்கு மிக அதிகமாக இருந்தது. பின் தங்கிய கிராமங்களுக்கு பல அறக்கட்டளைகளின் மூலம் ஆலயங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டது. 1983 முதல் பல்வேறு விதமான போராட்டங்கள் நடைபெற்றது.
‘அரசே ஆலயத்தை விட்டு வெளியேறு, மதமாற்ற தடை சட்டத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீ ராமஜென்ம பூமி விடுதலைப் போராட்டங்கள், அதன் மூலமாக ஏற்பட்ட கர சேவை நிகழ்ச்சிகள், பசுவதை தடை சட்டத்திற்காக போராட்டங்கள், முஸ்லிம்கள் ஹிந்து சமயத்தின் மீதும் மக்கள் மீதும் நடத்தும் அக்கிரமங்களை எதிர்த்து போராட்டங்கள், இராமசேது மீட்கும் போராட்டம்’, என பல போராட்டங்கள் நடைபெற்றது.
நாடு முழுவதும் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பணிகள் வளர்ந்த காரணத்தினால்,
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆலோசனைப்படி திருச்சியில் நடைபெற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் அசோக் சிங்கால் அவர்களால் விஸ்வ ஹிந்து பரிஷத் வடதமிழகம், தென் தமிழகம் என்று இரண்டு மாநிலங்களாக செயல்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், 2012 ஜூன் 28,29 தேதிகளில் காசியாபாத்தில் நடைபெற்ற “மத்திய பிரபந்த சமிதி” கூட்டத்தில் இதை அங்கீகரித்து, அன்றைய பொதுச்செயலாளர் சம்பத் ராய் ஜி அவர்கள் ஒப்புதல் வழங்கினார்கள். அன்று முதல் தமிழகத்தில் அமைப்பு ரீதியாக விஸ்வ ஹிந்து பரிஷத் இரு மாநிலங்களாக செயல்பட்டு வருகிறது.
விஸ்வ ஹிந்து பரிஷத் பொதுக்கூட்டம் நடத்தக்கூட தமிழக அரசு அனுமதி மறுத்ததால், உயர்நீதிமன்றத்தில் வழக்கிட்டு, ஆணை பெற்று கள்ளக்குறிச்சியில் அகில உலக தலைவர் அலோக்குமார் ஜி அவர்கள் தலைமையிலும், சென்னை நங்கநல்லூரிலும் மிகப்பிரமாண்டமான அளவில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன்மூலம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் இளைஞர் அமைப்பான பஜ்ரங்தள், இளைஞிகள் அமைப்பான துர்கா வாகிணி, மகளிர் அமைப்பான மாத்ரு சக்தி போன்ற பிரிவுகளில் பொறுப்பேற்று பலர் சேவை செய்து வருகின்றனர். ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்ததால், உயர்நீதிமன்றத்தின் ஆணை பெற்று தமிழகம் முழுவதும் பெருவாரியான பொதுமக்களின் பங்கேற்போடு ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
60 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு துறையில் பணிகள் செய்து, ஹிந்து சமுதாயத்திற்கு நம்பிக்கை ஊட்டிய பல நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆன்றோர்கள், சான்றோர்கள், துறவிகள், சமுதாயத் தலைவர்கள் என பலர் இதன் வளர்ச்சிக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்று உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சனைகளை ஹிந்து சமுதாயம் எதிர்கொண்டு வருகிறது. ஹிந்து தர்மத்தை அழிப்பதற்காக பல்வேறு சக்திகள் முயற்சிக்கும் வேளையில், தமிழகம் தெய்வீக பூமியாக, ஹிந்துக்கள் போற்றும் நாயன்மார்கள், ஆழ்வார்கள் வாழ்ந்த பூமியாக, மீண்டும் உலகப் புகழ் பெறும் விஸ்வ குருவாக நாம் எல்லோரும் பணி செய்வது இன்றைய கடமையாகும்.
− பால. மணிமாறன், மாநில பொதுச் செயலாளர், விஸ்வ ஹிந்து பரிஷத், வட தமிழகம்.