பளபளவென்று அழுத்தமாய் வாரப்பட்ட கட்டுக் குடுமி, இரு தடிமனான வெள்ளைக் கல் கடுக்கன்கள், திரிபுண்டரமாய் காதுகளிலும் நெற்றியிலும், மார்பிலும், கைகளிலும் மின்னும் திருநீற்றுப் பூச்சு, சந்தனத்திலகத்தின் நடுவிலே மாணிக்கப்பரலாய்க் குங்குமப் பொட்டு, தார்ச்சுற்று ஜரிகை வேட்டி, மார்பிலே மெல்லிய செயினோடு, சன்னதமான உத்ராட்ச குழைவாய்ப் புரளும் யக்ஞோபவீதம் அர்ச்சகர் மகாதேவன்! என்று, அருமையான மாலை தோற்றத்தில் நல்ல தாழம்பூ நிற மேனியன்! திருத்தமான முகம்! கட்டுக் கோப்பான உடற்கட்டு!
எவரையும் ஆகர்ஷித்து விடுகின்ற தோற்றம்
ஜானுவும் ஆகர்ஷிக்கப்பட்டிருந்தாள்.
அவளின் அத்தை மகன்தான் மகாதேவன்.
அவள் ஹைதராபாத்தில் ஒரு பிரபலமான நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர். வருமானம் ஓர் ஆண்டிற்கு ஒரு கோடியைத் தாண்டும்.
இப்போது லீவில் கல்லிடைகுறிச்சிக்கு வந்திருக்கிறாள்.
தாமிரபரணியில் நீராடிவிட்டு அம்மா ஜெயத்துடன் வீடு திரும்பும் வழியில் தான் மஹாதேவனைப் பார்த்தாள்.

மகாதேவன் ஆலயத்தில் பூஜை செய்ய ஆயத்தமாகிப் போய்க் கொண்டிருக்கிறான்.
“ஹலோ மகா! என்றாள் ஜானு.
“ஹலோ!” என்று கை அசைத்தவன், ஜெயத்தையும் நோக்கிப் புன்னகை செய்தான்.
அது ஓர் உபச்சாரப் புன்னகை மட்டும் தான்.
மற்றப்படி உறவு, உரிமை எல்லாம் கொண்டாடுவதற்காக அல்ல.
ஜெயமும் எதிர்ப்புன்னகை செய்தாள்.
ஆனால் அதுவும் ஓர் ஒப்பிற்கான புன்னகை மட்டும்தான்
உண்மையான, ஆர்வமுள்ள புன்னைகை அல்ல.
‘இது நாடகம், என்பது மூவருக்குமே தெரிந்த விஷயம்தான்
ஒட்டுதல் இல்லை, ஒட்டுதல் கூடாது என்று எண்ணுகிற ஜெயத்தை அறியாதவனா மகாதேவன் ?
அதனால் அவனும் அவள் மாதிரியான எண்ணத்துடன் புன்னகைக்கு அர்த்தம் கொடுக்கவில்லை.
அவன் கோவில் இருக்கும் பக்கமாக, நடக்கத் தொடங்கினான். ஜானுவும், ஜெயமும் வீட்டை நோக்கி நடக்கலாயினர்.
ஜானுவே வலியப்போய் முதலில் பேசியது ஜெயத்திற்குப் பிடிக்கவில்லை. இது வெட்டி விடப்பட வேண்டிய உறவல்லவா என்று எண்ணிக்கொண்டே விரையலானாள் ஜெயம்.
ஒரு கோவில் அர்ச்சகருக்கு என்று ஜெயம் அளிக்கிற மதிப்பு மிக மிகக் குறைவு. உறவுதான் என்றாலும் அதைப் பாராட்ட அவளுக்கு மனம் கிடையாது. மகள் ஜானு தானாகவே போய் மகாதேவனிடம் பேசிக் கொள்வது கோபத்தை உண்டாக்கியது.
உரிய வயதில் திருமணம் செய்து விடலாம் என்று முயல்கிறார்கள். ஜானு பிடிதர மறுக்கிறாள்.
ஒருவேளை வேலை பார்க்கின்ற இடத்தில யாரையாவது நேசிக்கலாமோ என்று கிண்டிக் கிளறினால், அப்படி எதுவும் இல்லை என்றே ஜானு கூறி விட்டாள். அது உண்மை தான். ஆனால் ஜெயம் மனதில் ஒரு சந்தேகம் உள்ளது. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக எண்ணவும் செய்கிறாள்.
ஜானுவின் மனப்பீடத்தில் மகாதேவன் இருப்பதாக எண்ணுகிறாள்.
அதுவே பிரதானமான கோபமும் எரிச்சலுமாக அமைந்து ஜெயத்தை அலைக்கழிக்கின்றன.
ஜெயத்தின் மனதில் வேறொரு திட்டமும் உள்ளது. அவளின் அண்ணன் சிதம்பரநாதனின் மகன் ரிஷியை அவள் குறி வைத்திருக்கிறாள்.
ரிஷி, நியூயார்க் கம்பெனி ஒன்றில் சாப்ட்வேர் என்ஜினியராக இருக்கிறான். ஏற்கனவே- அண்ணன் பெருவசதி படைத்தவர். இப்போது ரிஷி வேறு, நியூயார்க்கில் ஓர் ஆண்டுக்கு, ஒரு கோடியைத் தாண்டிக் கொண்டு வருவாய் ஈட்டுகிறான்.
ஈக்வலான ஸ்டேட்டஸாக அமையும் என்று ஜெயம் கனவு காணுகிறாள்.
அத்துடன் அண்ணன் மகன் என்பதால் உறவு பலப்படும் என்கிற எண்ணம் வேறு.
ஜெயம் பழகுவதற்கே ஸ்டேட்டஸ் பார்க்கிறவள். பார்க்கமாட்டாளா என்ன ?.
அந்தஸ்தில், மகாதேவன் அருகில் வந்து நிற்கக் கூட முடியாது.
சிவா பட்டர் ஏகப்பட்ட சொத்துக்களை மகளுக்கென்று சேர்த்து வைத்திருக்கிறார்.
அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி கல்லிடைக்குறிச்சி, பாபநாசம் என்று ஊருக்கு ஊர் நிலபுலன்களைச் சேர்த்து வைத்திருக்கிறார்.
நன்செய் புன்செய் மாந்தோப்பு, தென்னந்தோப்பு என்று நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிறார்.
ஏற்கெனவே நிலம் நீச்சு உள்ள குடும்பம் இப்போது விவசாய வருமானம் பெருகப் பெருகப் புதிய புதிய சொத்துக்களையும் வாங்கி குவித்திருக்கிறார்.
அக்ரஹாரத்தில் உள்ள வீடுகளில் பெரிய வீடு சிவா பட்டருடையது தான்.
பல்வேறு வங்கிகளிலும் அக்கௌண்ட் தொகையானது உயர்ந்தபடியே இருக்கிறது.
ஜானுவை வேலைக்குப் போகத் தேவையில்லை என்று தடுத்துப் பார்த்தார். ஆனால் தான் கற்ற கல்வியைப் பயனுள்ளதாக ஆக்கப் போவதாகக் கூறிக் கொண்டு ஹைதராபாத்திலுள்ள ஒரு கம்பெனியின் விளம்பரத்தைப் பார்த்து அப்ளை பண்ணிவிட்டாள்.
மறுவாரம் இண்டர்வியூ என்று போனவள் செலெக்சன் ஆர்டரோடு வந்தாள். பெற்றவர்களின் ஆசியுடன் பணியிலும் சேர்ந்து விட்டாள்.
இப்போது விடுமுறை என்று வந்திருக்கிறாள்.
மகாதேவன் ஆள் அம்சம்தான். ஜானுவின் அழகுக்கு ஈடு கொடுக்கும். தோற்றம்தான்.
ஆனால் அந்த ஸ்டேட்டஸ் ?
வில்லை ஓடு போட்டிருக்கும் வீட்டிலா தன் மகள் வாழப் போகவேண்டும் என்று தயங்குகிறாள். ஜானுவுக்கு அம்மாவின் எண்ணங்கள் முழுமையாகவே தெரியும். ஆனால் அம்மாவுடன் ஒத்துப்போக மனமில்லை.
சிவா பட்டரோ மகள் மனதில் இருப்பதை அப்படியே முழுமையாக அறிவார். உள்மனதில் சந்தோசம். தன், தங்கையே சம்பந்தியாக வருவது பெரும் நிறைவு. ஆனால் வெளிக் காட்டிக் கொள்ளமாட்டார்.
ஜெயம் பிடுங்கிவிவிடுவாள் பிடுங்கி.
அதனால் வாயை மூடிக் கொண்டு அடக்கி வாசிக்கிறார்.
திருமணப் பேச்சுத் துவங்கும் போது மூக்கை நுழைக்கலாம் என்றிருக்கிறார்.
ஜெயாவின் மனம்தான் கடலலைப் பாய்ச்சலாக இருக்கிறது. மகளின் பிடிவாத குணத்தை வெல்ல என்ன செய்யலாம் என்று யோசிக்கிறாள்.
ஓர் அர்ச்சகன் பின்னாடி போக நிற்கிறாளே, நம்ப ஸ்டேட்டஸ்க்கு எப்பேர்ப்பட்ட வரன்கள் எல்லாம் வரிசையில் வந்து நிற்பார்கள் என்று யோசனை பண்ணித் தயங்குகிறாள்.
அவள் வணங்கும் தெய்வங்களை எல்லாம் வேண்டுகிறாள்.
கணவர் சப்போர்ட் பண்ண வரமாட்டார். மாப்பிள்ளையாய் ஆக்கிக் கொள்ளவே பார்ப்பார். தங்கை மகனை மகாதேவனும் டிகிரி ஹோல்டர்தான் பிள்ளையார்பட்டிக்குப் போய் முறையாய் எல்லாவற்றையும் கற்றுக் கொண்டு வந்து முறையாய்க் கோவில் பணி செய்து வருகிறான்.
ஸ்டேட்டஸ் பார்க்கிற ஜெயாதான், ஈக்வல் அந்தஸ்து இல்லையே என்று மகாதேவனை வெறுக்கிறாள். சுலபத்தில் சம்மதிக்க மாட்டாள்.
ஆனால் ஜானுவின் அதீதமான பிடிவாதத்திற்கு முன்னால் ஜெயத்தினால் நிற்க இயலாது என்பது சிவாபட்டரின் அபிப்பிராயமும். அதனால் ஓர் ஆறுதலும் கூட,
” அம்மா, நாள் அத்தை ஆத்து வரைல போய்ட்டு வரேன் ” என்று கிளம்பிவிட்ட ஜானுவை குழப்பமான மனதுடன் மட்டுமே பார்க்க முடிந்தது ஜெயத்தினால்.
தடைபோடும் எண்ணம் வந்தாலும் அது நடைபெறாது என்று முடிவு பண்ணிய ஜெயம் வெறும் தலையசைப்பின் மூலம் ஒப்புதல் அளித்தாள்.
‘இவ மனசு மாறி வரமாட்டாள் போலருக்கே! ஒரு படிச்சு முடிச்ச பொண் இப்படி இருப்பாளோ ! இதுல பெரிய லெவல் வேலைல வேற இருக்கா. ஈக்வல் ஸ்டேட்டஸ்லயே இருக்கிறத விட்டுட்டு, கோவில் மணி அடிக்கிறவனைப் போய்ப் பண்ணுவேன்கிறாளே! இந்த வெய்யல் வேளைல கூட அது விசயமாய்ப் பேசத்தான் போறாள்ன்னு நினைக்கிறேன். ஈஸ்வரா இவளுக்கு நல்ல புத்தியக் குடேன். அவ மனசு மாறணும். அந்த மணி அடிக்கிறவனை நினைக்கவே கூடாது, மறந்துடணும். எங்கண்ணா மகன் ரிஷியை திருமணம் பண்ணிக்க ஒப்புதல் தரணும்” என்று வாய் விட்டே வேண்டிக் கொண்டாள் ஜெயம்.
ஜெயத்தின் யூகம் சரியாகவே இருந்தது.
ஏன் மகா – அப்படி நினைக்கிறீங்க ? என்னைப் பற்றி ஒரு அபிப்பிராயமும் கிடையாதா? சொல்லுங்க மகா என்று ஆர்வம் ததும்பும் குரலில் கேட்டாள் ஜானு.
மகாதேவனோ எதுவுமே கூறாமல் அவளையே பார்த்தவாறு இருந்தான்.
நடக்க முடியாத ஒண்ணைப்பத்தி இவ இவ்வளவு தூரம் கற்பனையை வளர்த்துண்டு இருக்காளே ! நானானா ஸ்படிகம் போல மிகத் தெளிவாவே இருக்கேன். நடக்கவே நடக்காதுன்னு நன்னாவே தெரியும் நேக்கு அத்தை மகள் தான்னாலும் அந்தஸ்து பேதம் இருக்கே ! மாமா தடை சொல்ல மாட்டார். ஆனால் மாமீ ? பார்க்கிற பார்வையில எரிச்சிடணும்னு பார்க்கிறாங்க நான்தான் சட்டையே பண்ணாம சிரிச்சு மழுப்பிண்டு போயிண்டே இருக்கேன் ஜானு. என்னன்னா, தன்னை பத்தின என்னோட அபிப்பிராயம் என்னன்னுல்ல கேட்கறா என் அபிப்பிராயம் நிலை நிற்காதுன்னு தெரியும். அப்புறம் என்னத்தச் சொல்றதாம்? அவளுக்குச் சமாதானம் தான் சொல்ல வேணும்.
ஜானு பெரியவா பாத்து முடிவு பண்ண வேண்டிய காரியம்ன்னா இது ! நம்ப மனசிலே ஆசையை வளர்த்துண்டா அது அவஸ்தையிலேதான் போய் முடியும். மாமா வேணுமானால் சாதகமாய் இருப்பாரா இருக்கும். மாமி நிச்சயமாய் எதிர்க்கொடிதான் பிடிப்பாங்க. வேணாம் ஜானு. விட்டுடு ஜானு. மாமி சொல்றாப் போல சமதையான ஸ்டேட்டஸ் இருக்கற எடமாப் பாத்து முடிவு பண்ணட்டும்.நீ உன் அபிப்ராயத்தை மாற்றிண்டு அவங்க சொல்றாப்ல கேட்டு நடந்துக்கோ..” என்றான் மகாதேவள்.
“ப்ஸ…” என்று அலட்சியம் காட்டிச் சிரித்தாள் ஜானு.
பிறகு “ஏன் மகா நான் முடிவு பண்ணக் கூடாதா ?” என்று கேட்டாள்.
“பெரியவாளை மீறிண்டு உன்னிஷ்டமா முடிவு பண்றது அத்தனை நல்லதில்லே ஜானு”.
“அப்படி இல்லே மகா. மனசுக்குப் பிடிச்சிட்ட ஒரு நல்லவரை அந்தஸ்து பேதம் பாத்து இழக்க என் மனம் ஒப்பலே..”என்று கூறி விட்டு மகாதேவனையே பார்த்தாள் ஜானு. இதனால் மகாதேவனின் மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது என்றாலும் அதை அனுபவிக்கவோ தொடரவோ இயலவில்லை. ஏற்கனவே முடிவு பண்ணிவிட்டவன் அவன்.
ஜானு மனம் திறந்து பேசியதால் மகிழமட்டும் தான் முடியுமே தவிர, வேறு நிகழப்போவது ஏதுமில்லை. தன்னுடைய மனத்தினை ஏழுலீவர்கள் உள்ள பூட்டைக் கொண்டல்லவா இறுக்கமாய்ப் பூட்டி வைத்துக் கொண்டிருக்கிறான் மகாதேவன்! இலேசில் திறக்க முடியாது. அப்படியே திறந்தாலும் மனதின் விருப்பம் போல நினைக்கவும் முடியாது என்கிற உறுதியோடு அல்லவா அவன் இருக்கிறான்!
“சரி மகா இப்ப நீங்க என்னதான் சொல்றீங்க?” என்று அவனுடைய இறுதியான முடிவைக் கேட்டாள்.
“ஜானு, பெரியவாளை மீறிண்டு என்னாலே வேற மாதிரி முடிவெல்லாம் எடுக்க முடியாது, சூழ்நிலையைப் புரிஞ்சுண்டு நடக்கப் பாரு ஜானு ” உறுதியாகவும் அழுத்தமாகவும் தனது முடிவைக் கூறிவிட்டாள் மகாதேவன்.
இப்படிக் கூறிய அவனது முகத்தையே சிறிது நேரம் தீர்க்கமாகப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு
சரி மகா ஒங்களோட இக்கட்டு எனக்குப் புரியறது. பரவால்ல பெரியவா சம்மதத்தோட நல்லதே நடக்கும். அப்ப நான் கௌம்பறேன்…” என்றவள். மென்மையாக முறுவல் செய்து விட்டுக் கிளம்பி விட்டாள்.

“என்ன பண்ணிண்டிருக்கே ஜானு?” என்று கேட்டுக் கொண்டே பூஜையறைக்குள் நுழைந்தாள் ஜெயம்.
“தெரியலே… சுவாமி விக்ரகங்களை
யெல்லாம் எடுத்து கீழே வெச்சுண்டிருக்கேன்…” என்றாள் ஜானு வெகு நிதானமான குரலில்.
“ஏண்டி, நாளை சோமவாரம் ஆச்சேன்னு சுத்தம் செய்து அபிஷேகம் செய்து வைக்கப் போறியா?” என்று கேட்டாள் ஜெயம்.
இல்லேம்மா..” என்று கூறிவிட்டு தொடர்ந்து சின்னச் சின்ன விக்ரகங்களையெல்லாம் எடுத்து எடுத்துக் கீழே வைக்கலானாள். வியப்படைந்த ஜெயம்,
“பின்னே ஏண்டி சுவாமி விக்ரகங்களையெல்லாம் யதாஸ்தானத்திலிருந்து எடுத்துக் கீழே வைக்கிறே ? ” என்று கேட்டாள்.
இடமாற்றம் …! என்றாள் சுருக்கமாக
என்ன ஜானு சொல்லறே ? இடமாற்றம் பண்ணப்போறியா? ” என்று கேட்டாள் ஜெயம்.
ஆமாம்மா, இனிமே இந்த சுவாமி விக்ரகங்கள், சுவாமி படங்கள் எதுவுமே இந்தப் பூஜை அறைக்குத் தேவை இல்லே.”
அப்படின்னா..?
எல்லாத்தியும் மரப்பெட்டியில அடுக்கி வைச்சு பரண் மேலே வைக்கப் போறேம்மா.”
என்னடி ஒளர்றே ?” “ஒளறலே! யதார்த்தமாய் நடக்கப் போறேன்.””
நீ என்னத்தைடி சொல்லறே புரியலேடி நேக்கு.”
புரிஞ்சுக்கோம்மா. பூஜை அறையிலே இனிமே இதுங்களுக்கெல்லாம் இடம் கிடையாது. விக்ரகங்கள் இருந்த இடங்களிலே இனிமேல் கட்டுக் கட்டாய்ப் புத்தம் புது ரூபாய் நோட்டுக் கட்டுக்களை வைச்சு அதுங்களுக்கு பூ மாலை போட்டு, தூப தீபம் காட்டப் போறேன். ”
“ஏய் ஜானு என்ன ஒளறல்டி இது ?”
“ஒளறல் இல்லேம்மா” உண்மையாய் நடக்க வேண்டியவற்றைச் சொல்றேன்மா. பணத்தைத்தானே ஆராதனை பண்ணனும்னு சொல்றே நீ. அதனாலே அப்படியே பண்றதுக்கு ஏற்பாடுகள் பண்ணப் போறேன். தேவி லெட்சுமியோட விக்ரகத்தை அப்பாலே எடுத்து வச்சுட்டு உண்மையான லெட்சுமியையே பூஜை பண்ணும்மான்னு ஏற்பாடு பண்ணப் போறேன்…” ‘‘ஜானு’’
“இதுல நீ கத்துறதுக்கு ஒண்ணுமே இல்லே உன் வழியை நிஜமாவே ஃபாலோ பண்ணும்மாங்கறேன். அவ்ளோதான்”
“இதை மூணாம் மனுஷா பாத்தா என்ன சொல்லுவா ?”
“நிஜமாலுமே லெட்சுமிக்குத்தான் பூஜை நடக்கறதுன்னு சொல்வா !
ஓரிரு நிமிடங்கள் அசைவின்றி நின்றன. மிகுந்த கோபத்துடன் பார்த்தாள் ஜெயம்
ஆனால், ஜானு இதை புன்னகையோடவே எதிர்கொண்டாள்.
“சரி இத வெச்சு, நீ என்ன சொல்ல வர்றே ஜானு ?” என்று கேட்டாள்
“அம்மா, நீ என்னைப் பணத்துக்குப் பின்னாடி போய் நிக்கச் சொல்லறே. ஆனா நேக்கு அப்படி முடியாது. பணம் தேவை தாம்மா. ஆனா அதுவே எல்லாமும் இல்லே. என்னோட மனசுல மொதல் இடம் ஆன்மதிருப்திக்கு மட்டும் தான். ஆன்மாவைக் கௌரவிக்கிற ஒருத்தருக்குத்தான் பர்ஸ்ட் பிரிஃபரன்ஸ் குடுக்கறேன். கரன்ஸியை மட்டும் குவிக்கற கைகள் நேக்கு வேணாம். ஆலயத்திலே பகவானுக்குச் சேவை பண்ற புனிதமான கைகளே நேக்கு வேணும். பகவான் நாமாவை உச்சரிச்சு அர்ச்சனை பண்ற உத்தமமானபணி செய்யறவர்தான் என்னோட ஆதர்ச நாயகன். பகவான் விக்ரகத்தைத் தொட்டு அபிஷேக அலங்காரம் பண்ணி தூப தீபம் காட்டுற புண்ணிய புருஷர் ஒருத்தர்தான் நேக்குத் துணைவராய் வரணும், கரன்ஸியைக் குவிச்சு காட்டுத் தனமாய் வாழ்றவங்க யாரும் நேக்குத் துணையாய் வர சம்மதிக்க மாட்டேன். சாத்வீகமான ஆன்மீக வாழ்வு வாழ்றவரோட இணையாக மனது திருப்தியோட நான் வாழணும். என்னோட இயல்பான நல்ல ஆசையை ஏன் தடுக்க வரிங்க நீங்க? என் மனசுல உள்ளதை வெளில காட்டத்தான் இப்ப நான் பண்ற பூஜை அறை மாற்றங்கள்! இப்படியான மாற்றங்கள் தானே நோக்குப் பிடிக்கும். அம்மா நீங்க கரன்ஸியை மட்டும் ஆராதனை பண்ணுங்க. அதுவே லோகமாய் இருக்கட்டும். பெத்த மக, அவளோட நல்ல மனசு அவ வாழ விரும்பற உயர்வான வாழ்க்கைனு எதுவும் பெரிசில்லே
உங்களுக்கு …” என்ற ஜானுவை,
“போறும்டி இனியும் மனசை ரணம் பண்ணாதே ! பழையபடியே எல்லா சுவாமி விக்ரகங்களையும் யதாஸ்தானத்திலே எடுத்து வெச்சுடு ….” என்று கண்களில் நீர் பெருகக் கூறிக் கொண்டே மகளைப் போய் அணைத்துக் கொண்டாள் ஜெயம்.
ஜானுவின் முகம் பௌர்ணமி நிலவின் உதயம் போல் ஒளிவிடலானது.