சங்க வேலைக்காக ஹிந்தியில் படித்து தேர்ச்சி பெற்ற மாரிமுத்து ஜி

ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர் சங்க தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும் திறம்பட நடத்தி சங்க கார்யகர்த்தர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட,  மாரிமுத்து ஜியைப் பற்றி இந்த இதழில் அறிவோம்…

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், 1964 ஆம் ஆண்டு மே மாதம் 23 ஆம் தேதி, எஸ்.கே ஆறுமுகம் −- உண்ணாமலை அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார், மாரிமுத்து ஜி. படித்தது, வளர்ந்தது எல்லாமே தாயின் ஊரான சிவகாசியில் தான்.

ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சிவகாசியில் உள்ள காரநேசன் பள்ளியில் படித்தார். பின்னர் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பை எஸ்.என்.ஹெச்.பி. பள்ளியில் படித்து தேர்ச்சி பெற்றார். அஞ்சல் வழி கல்வி மூலம் காமராஜ் பல்கலைக்கழகத்தில், பி.காம் பட்டம் பெற்றார்.

1983ல், மாரிமுத்து ஜியின் தந்தை டீ கடை வைத்து இருந்தார். அந்தக் கடைக்கு, அப்போதைய ஜில்லா ப்ரச்சாரக் ராஜேந்திரன் ஜி, தேநீர் அருந்த வருவார். அவர் மூலமாக சங்கம் அறிமுகமாகி, ஷாகாவிற்கு வர ஆரம்பித்தார்.

அப்போது ஒரு முறை, அகில பாரதி அதிகாரி ஒருவர் ஹிந்தியில் பௌத்திக் பேசினார். அதனை தமிழில் மொழி மாற்றம் செய்ய பலரும்  சிரமப்பட்ட போது, ஒரு சபதம் எடுத்தார். தன் வாழ்நாளில், அதிவிரைவில் ஹிந்தி மொழியைக் கற்றுக்கொண்டு,  அதிகாரிகளின் உரையை தமிழில் மொழி மாற்றம் செய்வேன் என்று உறுதி பூண்டார்.

அந்த சபதத்தை, சில மாதங்களிலேயே, வெற்றிகரமாக செய்து காட்டினார். 1985 ஆம் ஆண்டில், ஹிந்தி மொழியை கற்றுக் கொண்டு, மற்றவர்கள் ஹிந்தி மொழியில் பேசினால், அதனை தமிழில் மொழி மாற்றம் செய்யும் அளவுக்கு தன்னை மெருகேற்றிக் கொண்டார்.

1990ல், ஹிந்தி மொழியில் எம்.ஏ. பட்டம் பெற்று, 1991ல், பி.எட். பட்டம் பெற்று, பின்னர் அதிலேயே எம்.பில் ஹிந்தி படிப்பில் தேர்ச்சி பெற்றார். அதன் பிறகு, சிவகாசியில் உள்ள ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் ஹிந்தி பேராசிரியராக, இருபது வருடங்கள் பணி புரிந்தார்.

1985ல், முதலாம் ஆண்டு சங்கப் பண்புப் பயிற்சி முகாமை தூத்துக்குடியில் முடித்தார். பின்னர்  1986ல், இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை விஜயவாடாவிலும்,  1999ல், நாக்பூரில் மூன்றாம் ஆண்டு சங்கப் பண்புப் பயிற்சி முகாமை முடித்தார். 2000ம் ஆண்டில் நடந்த சங்கப் பயிற்சி முகாமிற்கு சிக்ஷக்காக சென்றார்

1983ல், ஷாகாவில் கட்நாயக் பொறுப்பை ஏற்ற மாரிமுத்து ஜி, சிவகாசி நகர் கார்யவாஹ், தாலுகா கார்யவாஹ், ஷாரீரிக் ப்ரமுக், பௌதிக் ப்ரமுக், விருதுநகர் ஜில்லா கார்யவாஹ், ஜில்லா பௌத்திக் ப்ரமுக், மதுரை மாநகரத்தின் பௌத்திக் ப்ரமுக், விருதுநகர் ஜில்லா சேவா பாரதி மாவட்டத் தலைவர் என பல முக்கியப் பொறுப்புகளை வகித்த பின்னர், ஆசிரியர்களுக்கான சங்க அமைப்பான ஏ.பி.ஆர்.எஸ்.எம்.ல் தென் தமிழகத்தின் மாநில அமைப்பாளராக பொறுப்பு வகித்தார்.

சிவகாசியில் மத மாற்றங்கள் நிறைய காணப்பட்டன. அதனை ஷாகா மூலம் தடுக்க வேண்டும் என நினைத்து, சங்க ஸ்வயம்சேவகர்கள் ஒன்றிணைந்து, மதமாற்றத்தை தடுத்து நிறுத்தினார். சிவகாசியின் நான்கு திசைகளிலும், ஷாகா நடைபெற வேண்டும் என முடிவு செய்து, எல்லா இடத்திலும் ஷாகா வருவதற்கு முயற்சி செய்து, அதில் வெற்றியும் கண்டனர். சராசரி எண்ணிக்கையாக ஷாகாவிற்கு, 100 நபருக்கு மேல் இருக்க வேண்டும் என தீர்மானித்து, அதற்கேற்றார் போல் வேலை செய்து, அதிலும் வெற்றி கண்டனர்.

விநாயகர் சதுர்த்தி அன்று, சிவகாசியில் விநாயகரை வைத்து வழிபடும் முறையை, முதலில் ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்தார். குழந்தைகளை இளம் வயதில் தாக்கும் இளம்பிள்ளை வாதம் நோயை முழுமையாக அகற்ற, சூர்ய நாராயண ராவ் ஜி தலைமையில் மருத்துவ முகாம்களை நடத்தினார். ஷாகா மூலமாக மரங்களை நடுவது, சிவகாசியில் பிரபலமான காளியம்மன் கோவில் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா நேரங்களில், சேவைகள் செய்து சமூகப் பணியை செய்தனர்.

சிவகாசியில் உள்ள பல்வேறு சமுதாயத் தலைவர்களையும் சந்தித்து, “திருஞானசம்பந்தர் பக்தி மன்றம்” போன்ற அனைத்து பக்தி சங்கத்தையும் சந்தித்து சமுதாய நல்லிணக்கம் ஏற்பட அரும்பாடுபட்டார். எல்லாப் பகுதியிலும் பண்பாட்டு வகுப்பு, டியூஷன் சென்டர் ஏற்படுத்தி, சிவகாசியில் சமூக ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையை உருவாக்க அரும்பாடுபட்டார். 1992ல், அயோத்திக்கு செங்கல் கற்களை அனுப்பும் “சிலா பூஜை”யின் போது, சிறையில் அடைக்கப்பட்டார். ராம-சேது பாதுகாப்பு போன்றவற்றிலும் கலந்து கொண்டார்.

சங்கத்தின் மூத்த அதிகாரிகளான இராம கோபாலன் ஜி, சண்முகநாதன் ஜி தனுசு ஜி, பாஸ்கர்ராவ் ஜி, இல கணேசன் ஜி, ஸ்தாணுமாலயன் ஜி, தங்கராஜ் ஜி, அகில பாரத அதிகாரிகள் மற்றும் பிராந்த சேத்திர அதிகாரிகள் என பலரும் மாரிமுத்து ஜியின் வீட்டிற்கு வருகை புரிந்து உள்ளனர்.

1994 ஆம் ஆண்டு பிரமேலதா அம்மாளை திருமணம் செய்த மாரிமுத்து ஜிக்கு, கேசவன், மாதவன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கேசவன் ஜி கல்லூரிப் பேராசிரியராகவும், சங்கப் பொறுப்பிலும் உள்ளார். இரண்டாம் ஆண்டு சங்கப் பயிற்சி முகாமை முடித்துள்ளார். மாதவன் ஜி, சென்னையில் பணிபுரிந்து வருகிறார், அவர் ப்ராத்மிக் முகாம் முடித்துள்ளார்.

எதிர்பாராத விதமாக 2019 ஆம் ஆண்டில், மாரிமுத்து ஜிக்கு சாலையில் விபத்து ஏற்பட்டது. இரண்டு கால்களிலும் அடிபட்டு, பெரிதும் பாதிக்கப்பட்டு, நடக்க முடியாமல் உள்ளார். இந்த நிலையிலும், தாம் பெற்ற கல்வி மற்றவர்களுக்கு பயன்பட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் “பாரத மாதா அகாடமி” என்ற நிறுவனத்தை நடத்தி, ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதம் மொழிகளை மாணவ – மாணவியர்களுக்கு கற்றுத் தந்து வருகிறார்.

சங்க வேலைக்காகவே ஹிந்தி மொழியை கற்றுக் கொண்டு, மற்றவர்களுக்கும் அதனை கற்பித்து, தனது இரண்டு மகன்களையும் சங்கப் பயிற்சி முகாமை முடிக்க வைத்து, அவர்களையும் சங்கப் பணியில்  செயல்பட வைக்கும் மாரிமுத்து ஜி, நம் அனைவருக்கும் முன்னுதாரணமான ஸ்வயம்சேவக்காக  திகழ்கிறார்.