வேலையில்லாத் திண்டாட்டத்தாலும், வேலைக்கு ஆள் கிடைக்காவிட்டாலும் பிரச்சினை உக்கிரமடையும். அதுமட்டும் அல்லாமல் பொருளாதாரத்திலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும். அமைதி சீர்குலைந்தால் வளர்ச்சி குன்றத் தொடங்கிவிடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஜப்பானில் பல்வேறு பிரச்சினைகள் மேலோங்கி உள்ளன என்ற போதிலும், மூன்று சிக்கல்கள் கவனத்தை ஈர்த்துள்ளன. பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு ஜப்பானில் 6,86,061 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இது 2023ம் ஆண்டு நிலவரத்தை விட 5.7 சதவீதம் குறைவாகும். 1899ம் ஆண்டிலிருந்து குழந்தைகள் பிறப்பு தொடர்பான தரவுகள் உள்ளன. கடந்த ஆண்டுதான் முதன்முறையாக 7 லட்சத்துக்கும் குறைவாக குழந்தை பிறப்பு பதிவாகியுள்ளது. தொடர்ச்சியாக 16 ஆண்டுகள் பிறப்பு விகிதம் சரிவையே சந்தித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. `மெளன அவசர நிலை’ என்றே இதை ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபா விமர்சித்துள்ளார்.
ஜப்பானில் தற்போது 12.4 கோடி மக்கள் உள்ளனர். 2070ம் ஆண்டில் மக்கள் தொகை 8.7 கோடியாக குறைந்து விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 40% சதவீதம் பேர் 65 வயதைக் கடந்தவர்களாக இருப்பார்கள். முதியோர்களின் தேசமாக ஜப்பான் மாறி வருவதே அதன் பொருளாதார பின்னடைவுக்கு பிரதான காரணம்.
ஜப்பான் மக்களின் பிரதான உணவு அரிசிதான். நெல் உற்பத்தியில் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதால் போதுமான அளவுக்கு அரிசியை இருப்பு வைக்க முடியவில்லை. அரிசி பற்றாக்குறை காரணமாக மக்களிடையே அதிருப்தி தலைதூக்கியுள்ளது. இந்த அரிசி விவகாரம் அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது என்று கூறப்படுவது உதாசீனப்படுத்தத்தக்கதல்ல.
ஜப்பானில் அடிக்கடி இயற்கை பேரிடர்கள் ஏற்படுகின்றன. இத்தருணத்தில் 2ம் உலகப் போரின் போது ஜப்பானில் வீசப்பட்ட அணுகுண்டுகளின் தாக்கம் இப்போது பெருமளவு தணிந்து விட்டது என்ற போதிலும் முழுமையாக இதிலிருந்து சம்பந்தப்பட்ட பிரதேசம் விடுபட்டு விட்டது என்று கூற முடியவில்லை.
ஜப்பானில் எரிமலைகள் நெருப்புக் குழம்பை கக்குவது சகஜம். இத்தகைய அசாதாரண சூழ்நிலையில் ஜப்பானுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவது குறைந்து விடும். ஜப்பானின் பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாத் துறையின் பங்களிப்பு கணிசமானது. சுற்றுலா வருவாய் சரிவு, சாதாரண மக்களின் வாங்கும் திறனையும் சுருங்க வைத்து விடுகிறது. அதுமட்டுமல்லாமல் பூகம்பம், சுனாமி போன்றவையும் ஜப்பானை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. சுனாமி என்ற வார்த்தையே உலகுக்கு ஜப்பான் அளித்ததுதான். 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆழிப்பேரலை உக்கிரமாக வீசியபோதுதான் தமிழ்நாட்டில் சுனாமி என்ற வார்த்தையே புழக்கத்துக்கு வந்தது என்பதை யாரும் மறந்து விட முடியாது.