மதுரையில் நடைபெற இருக்கும் முருக பக்தர்கள் மாநாடு ஏற்பாடுகள் எதிர்பார்ப்புகள் குறித்து பேராசிரியர் இராம. ஸ்ரீநிவாசன் அவர்களது பேட்டி.
இது பா.ஜ.கவின் மாநாடா?
இது பாஜக நடத்தும் மாநாடு அல்ல. இந்து முன்னணி ௫ வருடத்திற்கு ஒரு முறை ஹிந்து எழுச்சி மாநாடு நடத்துவார்கள். இந்த ஆண்டு முருக பக்தர்கள் மாநாடு நடத்துகிறார்கள். அதில் ஆர்.எஸ்.எஸ், பாரதிய கிசான் சங்கம், பாரதிய மஸ்தூர் சங்கம், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அனைத்து ஹிந்து அமைப்புகளும் சேர்ந்து பங்கு கொள்கிறோம்.
மதுரையில் ஏன் நடத்த வேண்டும்?
மதுரை நகரானது புவியியல் ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் தமிழகத்தின் மையப் புள்ளியாக விளங்கி வருகிறது.
அதைவிட முக்கியமாக திருப்பரங்குன்றம் பழமுதிர்ச்சோலை, பழனி, திருச்செந்தூர் என முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்கு மதுரைக்கு மிக அருகில் 200 கி. மீ சுற்றளவில் அமைந்துள்ளன. எனவே தான் முருக பக்தர்கள் மாநாட்டை மதுரையில் நடத்துவது எனத் தீர்மானித்தோம்.
தமிழ்க் கடவுள் என்பதால் முருகர் மாநாடா?
தமிழ் கடவுள் என்பதை மறுப்பதற்கு இல்லை. ஆனால், ராமரைப் போலவே முருகரையும் நாடு முழுவதும் ஹிந்துக்கள் வழிபடுகிறார்கள். உத்தரகாண்ட் மாநில அமைச்சர் சமீபத்தில் தமிழகம் வந்து ஆறுபடை வீடுகளில் தரிசனம் செய்ததை செய்திகளில் படித்திருப்பீர்கள். அங்கே ருத்ர ப்ரயாகை கார்த்திக் ஸ்வாமி கோயிலில் இருந்து வருடா வருடம் இங்கே உள்ள ஆறுபடை வீடுகளுக்கும் வஸ்திரம் கொடுத்து அனுப்புகிறார்கள்.
மாநாட்டின் நோக்கம் என்ன?
நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழகத்தில் மட்டும்தான் ஹிந்து என்றால் ஏளனமாகப் பார்க்கும் இழிவுபடுத்தும் சூழல் நிலவுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு குறிப்பாக ஹிந்துக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைத்தவர்களே கூட ஹிந்து மத அடையாளங்களுக்கு, ஹிந்து தர்மத்திற்கு தவறான அர்த்தம் கற்பிக்கிறார்கள். சனாதனத்தை ஒழிப்பேன் என்று சபதம் போடுகிறார்கள். இந்த அவலத்தை மாற்றவே இந்த முருக பக்தர்கள் மாநாடு.
நமது சமுதாயத்தில் நிலவும் ஜாதியப் பாகுபாடுகளைக் களைவது, மதமாற்றத்தினால் ஏற்படும் தீமையை உணர்த்துவது ஆகியவையும் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கங்கள்.
மாநாட்டிற்கு யாரெல்லாம் வருகிறார்கள்?
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏகநாத் ஷிண்டே ஆகியோர் மாநாட்டில் பங்கேற்க சம்மதித்து உள்ளனர். சாதுக்கள், சன்னியாசிகள், ஆதீனங்கள், மகான்கள், மடாதிபதிகள், சமுதாயத் தலைவர்கள் என அனைவரையும் நேரில் சென்று அழைத்து இருக்கிறோம். மாநாட்டு அழைப்பிதழ் இன்னமும் கூட வீடு வீடாக சென்று கொண்டிருக்கிறது.
5 லட்சம் பேர் பங்கு கொள்ளும் இந்த மாநாட்டில் அனைவரும் ஒரு சேர கந்த சஷ்டி கவசம் பாட இருக்கிறோம். அந்த விஸ்வரூப காட்சி ஆளும் திமுகவினருக்கு இப்பொழுதே பெரும் கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது. அதனால்தான் மாநாட்டில் அறுபடைவீடு கோயில் அமைக்க குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு அரசியல் நோக்கம் உண்டா?
“யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால் ஹிந்துக்களாகிய எங்களுக்கும் உணர்வு இருக்கிறது தானே, அதை காயப்படுத்தலாமா என்று எழுந்து குரல் எழுப்புங்கள். ஹிந்து என்ற பெருமிதத்தோடு, ஒரு முறையாவது ஹிந்து உணர்வோடு வாக்களித்துப் பாருங்களேன்!” என்றுதான் சொல்கிறோம்.