பா.ஜ.,வுக்கு ஓட்டளிக்காதவர்களை பற்றி, எதிர்மறையான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும், அவர்களது குறைகளையும் கேட்டு, அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றும், பா.ஜ.க – எம்.பி.-க்களுக்கு, பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
பா.ஜ., – எம்.பி.,க்களுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம், டில்லியில் நேற்று(ஆக.,04) நடந்தது. மத்திய அரசின் பல்வேறு நல திட்டங்கள் குறித்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை, பா.ஜ., – எம்.பி.,க்களுக்கு உள்ளது. எனவே, மத்திய அரசின் திட்டங்களை பற்றி, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், எம்.பி.,க்களிடம், மாதத்துக்கு ஒருமுறை ஆலோசனை நடத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று பார்லிமென்ட் விவகார துறை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, பிரகலாத் ஜோஷி கூறினார்.
இதற்காக, பா.ஜ., – எம்.பி.,க்கள், 20 பேர் அடங்கிய குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவில் உள்ளவர்கள், மத்திய அமைச்சர்களுடன், ஆலோசிப்பர். இதற்கு பின், திட்டங்கள் குறித்து, மக்களுக்கு எடுத்துக் கூறுவர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எம்.பி.,க்களுக்கு பல ஆலோசனைகளை வழங்கினார். அப்போது, வரும், 2024ல் நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கு, இப்போதே தயாராகும்படி அறிவுறுத்தினார்.
மேலும், பா.ஜ., வுக்கு ஓட்டளிக்காதவர்களை பற்றி, எதிர்மறையான அபிப்ராயத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும், அவர்களது குறைகளையும் கேட்டு, அவற்றை பூர்த்தி செய்வதன் மூலம், அவர்களது இதயத்திலும் இடம் பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இவ்வாறு, அவர் கூறினார்.